
காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது.
காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்... திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்பு!
அந்த நேரத்தில், ஈ.வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார்.
பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது.
இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.
ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது.
அவ்வளவுதான்... மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள்.
“இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர்.
கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன.
அந்நாளில் குமுதம் ஊழியர்களுக்கென்று ஒரு குவார்ட்டர்ஸ் உண்டு. (இப்போதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது.) அங்கேதான் ரா.கி.ரா., ஜ.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமி, புனிதன் எனப் பலரும் குடியிருந்தார்கள்.
வசதியான குவார்ட்டர்ஸ்தான். ஆனால், அப்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். எனவே, குவார்ட்டர்ஸ்களில் தண்ணீர் வரவில்லை. அங்கே குடியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், யாரும் எஸ்.ஏ.பி-யின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போகவில்லை.
வெள்ளிக்கிழமைகளில் சாயந்திர வேளையில் குமுதம் ஊழியர்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஜனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது குமுதம் நிறுவனரும், எடிட்டருமான எஸ்.ஏ.பி-யின் உத்தரவு. அவரும்கூடக் கலந்து கொள்வார் - ஃப்ரெஷ்ஷாக ஷவர் அடியில் நின்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து!
ஒருநாள், அவர் யதேச்சையாக, “ஆன்மிகச் சொற்பொழிவுகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு. அதற்காக யாரும் உடம்பைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் இதில் வந்து கலந்து கொள்ளக் கூடாது. எல்லோரும் குளிச்சுட்டீங்கதானே?” என்று பொதுவாகக் கேட்டிருக்கிறார்.
“குளியலா..? அப்படின்னா..?” என்று கேட்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி.
எஸ்.ஏ.பி-க்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்றீங்க ஜ.ரா.சு.?” என்று கேட்டார்.
“இல்லே... குளிக்கணும்னா தண்ணி வேணுமோல்லியோ? நாங்க தண்ணியைப் பார்த்தே பல மாசமாச்சு! நாங்க எல்லாரும் தலையில தண்ணியைப் புரோக்ஷணம்தான் (விரல்களால் தண்ணீரை எடுத்துத் தெளித்துக் கொள்வது) பண்ணிக்கிட்டு வரோம் கொஞ்ச நாளா!” என்று விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் பாக்கியம் ராமசாமி.
அமைதியில் ஆழ்ந்துவிட்டார் எஸ்.ஏ.பி.
அதன்பின், சில மாதங்களில் மழை பெய்து, தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்து, எல்லோரும் குதூகலமாக ஒரு நாளைக்கு இரண்டு வேளைகூட தாராளமாகக் குளிக்க முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஓடியிருக்கும். பழைய தண்ணீர்ப் பஞ்ச அனுபவங்கள் மறந்தே போன நிலை.
வழக்கம்போல் ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஆன்மிக நிகழ்ச்சியில் குமுதம் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தார்கள். அனைவரும் ஃப்ரெஷ்ஷாகக் குளித்துப் புத்துணர்ச்சியோடு இருந்தார்கள்.
எஸ்.ஏ.பி. வந்தார். பாக்கியம் ராமசாமி அவரிடம் யதார்த்தமாக, “என்ன சார்! திவ்வியமா ஷவர் குளியல் போட்டுட்டு வந்தீங்களா?” என்று கேட்டார்.
“ஷவரா... அப்படின்னா?” என்று திருப்பிக் கேட்டார் எஸ்.ஏ.பி.
பாக்கியம் ராமசாமிக்குப் புரியவில்லை. பின்பு விசாரித்தபோதுதான் தெரிந்தது, சுமார் ஒரு வருட காலமாகவே - அதாவது, ‘குளியலா... அப்படின்னா?’ என்று பாக்கியம் ராமசாமி குறும்பாகக் கேட்டுத் தண்ணீர்ப் பிரச்னை பற்றிச் சொன்ன அன்றைய தினத்திலிருந்தே, ஷவரின் அடியில் நின்று குளிப்பதைத் தவிர்த்துவிட்டிருக்கிறார் எஸ்.ஏ.பி. சிக்கனமாக ஒரே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து, சொம்பால் மொண்டு ஊற்றிக்கொண்டுதான் குளிப்பாராம்.
கடைசி வரையில், ஷவர் குளியலை அவர் மீண்டும் அனுபவிக்கவே இல்லை!
புத்தகப் பரிசுகள் அனுப்பிவைத்தது குறித்து மறுபடி மறுபடி எழுத எனக்குக் கூச்சமாக இருக்கிறது. ‘ஆமா! பெரிசா புத்தகம் அனுப்பி வெச்சுட்டான். இதை இவனே எத்தனை முறை எழுதிக்குவானோ!’ என்று இன்னொரு வாசகரின் நிலையிலிருந்து நானே கேலியாகக் கேட்டுக் கொள்கிறேன். இருந்தாலும், சிலவற்றைச் சொல்லியாக வேண்டியிருப்பதால் இதை எழுதுகிறேன்.
தயவுசெய்து இனிமேல் யாரும் தங்கள் முகவரிகளை அனுப்பி வைக்க வேண்டாம். ‘ரசிகன்’ பாடல் போட்டி முடிந்துவிட்டது. இனி, வேறு ஒரு போட்டியில் சந்திப்போம்!
ஒரே ஒருவரைத் தவிர, மற்றவர் அனைவருக்கும் புத்தகப் பரிசுகள் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானாவர்கள் நன்றியுடன் தகவல் அனுப்பிவிட்டார்கள். தகவல் அனுப்பிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
‘ஒரே ஒருவரைத் தவிர’ என்று குறிப்பிட்டேனல்லவா... அவர் ராமசாமி பிரபாகர். அவர் கொடுத்திருந்த ‘தெடாவூர்’ முகவரி தவறானது என்று கூரியர் திரும்பி வந்துவிட்டது.
பரிசுப் போட்டியை அறிவிக்கும்போது இத்தனைப் பின்னூட்டங்கள் வரும், அவற்றில் இத்தனை சரியான விடைகள் இருக்கும், இவ்வளவு புத்தகங்களைப் பரிசாக அனுப்ப வேண்டியிருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே உடனடியாக அத்தனைப் புத்தகங்களையும் வாங்கி அவரவர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டேன். மிக மகிழ்ச்சியான மன நிலையிலேயே அவற்றை அனுப்பி வைத்துள்ளேன். ஒருக்கால், புத்தகங்கள் அனுப்புவதைத் தாமதிக்கத் தாமதிக்க, இந்த மகிழ்ச்சியான மனநிலை போய், இப்படி மாட்டிக் கொண்டோமே என்று என்னையும் அறியாமல் உள்ளூர ஒரு வருத்த உணர்வு வந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் அவசர அவசரமாக அனுப்பி வைத்தேன். இந்த நேரம் வரைக்கும் புத்தகப் பரிசுகள் அனுப்பி வைத்ததில் எனக்குப் பூரண மகிழ்ச்சிதான். என்றாலும், மனித மனம் நாளைக்கு எப்படி மாறும் என்று யாருக்குத் தெரியும்?
‘ரசிகன்’ போட்டிக்கான சரியான விடைகளைக் கணக்கிட்டதில், மொத்தம் 70 புத்தகங்களை வாங்கி நான் பரிசாக அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால், குறித்த நேரத்தில் முகவரி கிடைக்காததால், 58 புத்தகங்களை மட்டுமே அனுப்பினேன். 70 புத்தகங்களையும் அனுப்ப இயலாது போனதில் எனக்கு வருத்தம்தான்.
போகட்டும்... அடுத்த போட்டியில் பார்க்கலாம்!
***
உங்களை மூளையால் கையாளுங்கள்; மற்றவர்களை இதயத்தால்!
உங்களை மூளையால் கையாளுங்கள்; மற்றவர்களை இதயத்தால்!