ரசிகனின் ரசிகன் நான்!

‘ரசிகன்’ என்றொரு நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் காலையில் 9:30 மணியிலிருந்து 10:30 வரை வெளியாகிறது. திரையுலக பிரபலங்களை அழைத்து, ரசிகர்களோடு அவரை உரையாட வைத்து நடத்துகிற ஒரு சுவையான நிகழ்ச்சி அது.

நான் டி.வி. அதிகம் பார்ப்பதில்லை. காலையில் அலுவலகத்துக்குக் கிளம்பும் முன் கலைஞர், ஜெயா மற்றும் மெகா டி.வி-க்களில் ஒளிபரப்பாகும் பழைய பாடல் காட்சிகளை ஆர்வத்தோடு பார்ப்பேன். சனி, ஞாயிறு இரவுகளில் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, எல்லாமே சிரிப்புதான் போன்ற காமெடி ஷோக்களைப் பார்ப்பேன். (இப்போதெல்லாம் விஜய் டி.வி-யிலும், கலைஞர் தொலைக்காட்சியிலும் ‘கலக்கப் போவது யாரு’, ‘எல்லாமே சிரிப்புதான்’ ஆகிய நிகழ்ச்சிகள் வருவதில்லை.) சமீபமாக, கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகும் ‘விசாரணை’ தொடரை விடாமல் பார்த்து, ரசித்து வருகிறேன். டி.வி-யோடு என் உறவு அவ்வளவுதான்!

சிபாரிசு என்பதே கெட்ட வார்த்தை அல்ல. இன்றைய போட்டி உலகில், உண்மையிலேயே தரமானவைகளோடு குப்பைகளும் மலிந்திருக்கும் கால கட்டத்தில், சில நல்லவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு, தகுதியான நிகழ்ச்சிகளுக்கும் சிபாரிசு தேவைப்படுகிறது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்று கேட்டது அந்தக் காலம். மற்ற சாக்கடைகளின் விளம்பர நெடியில் பூக்கடைக்கும் கட்டாயம் விளம்பரம் தேவைப்படுவது இந்தக் காலம்.

‘ரசிகன்’ சீரியல் பற்றிச் சொல்லி, ‘நீங்கள் அதைப் பார்ப்பதுண்டா சார்?’ என்று என்னை முதன்முதலில் கேட்டவர் இயக்குநர் விஜய்ராஜ் (டி.எம்.எஸ். பற்றிய ‘இமயத்துடன்’ என்கிற சீரியலை இயக்கியிருப்பவர்). எனக்கு அதுவரை ‘ரசிகன்’ பற்றித் தெரியவில்லை. பொதுவாக எனக்கு டி.வி. நிகழ்ச்சிகளில் ஆர்வம் இருப்பதில்லை. ‘எம்.எஸ்.வி. பற்றிக்கூட மெகா டி.வி-யில் சுவாரஸ்ய நிகழ்ச்சி வந்துகொண்டு இருக்கிறது. கட்டாயம் பாருங்கள்’ என்று நண்பர் ஆர்ட்டிஸ்ட் ராஜா (விகடனில் சக ஊழியர்) அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். எந்த சீரியல் எப்போது வருகிறது என்கிற நேரக் கணக்கு எனக்குப் பிடிபடுவதே இல்லை. தவிர, மறதியும் அதிகம் உண்டு. (வயதானதால் ஏற்படுகிற மறதி அல்ல இது. சின்ன வயதிலிருந்தே நான் ரொம்ப மறதிக்காரன். பத்திரிகை உலகில் எப்படி 25 வருடங்களாகக் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியம்!)

ராஜேஷ்குமாரின் ‘விசாரணை’ சீரியலின் ஒருங்கிணைப்பாளராக மணிவண்ணன் எனக்குத் தொலைபேசியில் அறிமுகம் ஆனார். அது சம்பந்தமாகப் பேசிக்கொண்டு இருந்தபோது, ஒருநாள் அவர் ‘ரசிகன்’ நிகழ்ச்சி பற்றிச் சொல்லி, “அதை நான்தான் சார் இயக்குகிறேன். நீங்கள் பார்க்கிறீர்களா?” என்று கேட்டார். “இல்லையே! இந்த வாரம் அவசியம் பார்க்கிறேன்” என்றேன். ஆனால், வழக்கம்போல் மறந்துவிட்டேன். திரும்ப அவர் அதுபற்றிக் கேட்ட பின்புதான், ‘ரசிகன்’ சீரியல் பற்றிய விஷயம் ஞாபகத்துக்கே வந்தது.

அதற்கு அடுத்த வாரமும் பார்க்க முடியவில்லை. பத்திரிகைப் பணி காரணமாக அலுவலகம் சென்றுவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஞாயிற்றுக் கிழமை காலையில் சீரியல் குறித்து மணிவண்ணன் SMS பண்ணியிருந்தார். அது நல்லதாகப் போயிற்று. உடனே, வேறு ஏதோ ஓடிக்கொண்டு இருந்த சேனலை கலைஞருக்கு மாற்றி, ரசிகன் சீரியலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசிக்கொண்டு இருந்தார். இடையிடையே அவரின் பாடல் காட்சிகள் வந்து போயின. கவிஞரின் பேச்சுக்குக் கேட்கவே வேண்டாம்; சரளமான தமிழ் அருவி அது. பாடல்கள் யாவும் இளையராஜாவின் இசை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நதிகள். கண்ணுக்கும் காதுக்கும் அற்புதமான விருந்தாக இருந்தது அந்த நிகழ்ச்சி. இயலும் இசையும் கைகோத்திருந்த அருமையான நிகழ்ச்சி. உண்மையில் ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. அதைப் பார்த்த பின்பு, ‘அடடா! இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே! ஒரு நல்ல நிகழ்ச்சியை மிஸ் பண்ணிவிட்டோமே!’ என்று ரொம்பவும் வருத்தப்பட்டேன்.

மிக அருமையாகத் தொகுக்கப்பட்ட நிகழ்ச்சி அது. பேச்சு, பாடல் காட்சிகள் இரண்டும் அழகான காதலர்கள் போல் கைகோத்துப் பின்னிப் பிணைந்து சென்ற விதம் ரசனையாக இருந்தது. அடிப்படையில் ரசனையான மனம் இருந்தால்தான் இத்தனை அற்புதமாக இது போன்ற ஒரு நிகழ்ச்சியை இயக்க முடியும். அந்த ரசனை மனம் மணிவண்ணனிடம் தாராளமாக இருக்கிறது.

இரண்டு வாரம் கவிப்பேரரசு பற்றிய நிகழ்ச்சி. அது முடிந்து, இன்றைக்குக் காலையில் கவியரசு கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி ‘ரசிகன்’ தொடரில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீதின் குரலே அத்தனை வசீகரம். குரல்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன், ஏழிசை மன்னர் டி.எம்.சௌந்தர்ராஜன், இசைக் குயில் பி.சுசீலா இவர்களுக்கு அடுத்தபடியாக நல்ல தமிழை நான் அதிகம் ரசிப்பது வைரமுத்து, சரோஜ் நாராயணசாமி மற்றும் அப்துல் ஹமீது இவர்களின் குரல்களில்தான்.

கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சியில், மூன்று பாடலாசிரியர்களின் தலைமையில் மூன்று குழுக்களும் மற்றும் ரசிகர் கூட்டமும் கலந்துகொண்டன. ஒவ்வொரு பாடலாசிரியரும் கண்ணதாசனைப் பற்றி நினைவுகூர்ந்த விதம் சிறப்பாக இருந்தது. கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசனும் இதில் கலந்துகொண்டு, தன் அப்பா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். (கண்ணனுக்குத் தாசன் என்கிற அர்த்தத்தில் அவர் கண்ணதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொள்ளவில்லை; ‘அழகான கண்களைப் பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் எனக்கு ஆசை அதிகம். அதனால்தான் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்று கண்ணதாசனே விளக்கம் அளித்திருப்பதாக விகடனுக்காக ‘கண்ணதாசன் 25’ குறிப்புகளைத் திருமாவேலன் எழுதிக் கொடுத்தபோதுதான் நானே அறிந்துகொண்டேன்.) வழக்கம்போல் பேச்சின் இடையிடையில் ஒளிபரப்பான கண்ணதாசன் பாடல் காட்சிகள் (டி.எம்.எஸ். குரலில்! ஆனந்த வெள்ளத்துக்குக் கேட்க வேண்டுமா?) ‘அட, அதற்குள் ஒரு மணி நேரம் ஓடிப் போய்விட்டதா?!’ என்கிற ஏக்கத்தையே ஏற்படுத்தின.

கண்ணதாசனைப் பற்றிய நிகழ்ச்சி அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் தொடர்கிறது. கட்டாயம் பாருங்கள்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கும்போதே, இந்த க்ஷணத்தில் இயக்குநர் மணிவண்ணனிடமிருந்து போன்கால், ‘நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா சார்?’ என்று. பத்து நிமிடம் பேசியதில், இந்த வலைப்பதிவில் நான் எழுதியிருக்கும் அத்தனை எண்ணங்களையும் அவரிடம் கொட்டிவிட்டேன். நியாயமாக, காலையில் நிகழ்ச்சி பார்த்து முடிந்ததுமே நானே அவருக்குப் போன் செய்து பாராட்டியிருக்க வேண்டும். அதுதான் நியாயமும்கூட! நியாயம் மட்டுமல்ல; அதுதான் என் வழக்கமும்கூட. ஆனால், மணிவண்ணனுக்கு நான் போன் செய்யவில்லை. காரணம், நிகழ்ச்சி பார்த்து முடித்ததுமே இன்றைக்கு ‘என் டயரி’யில் இது பற்றி எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதுதான். இந்த வலைப்பூவை மணிவண்ணன் தினமும் பார்க்கிறார், படிக்கிறார் என்று அவர் முன்பே எனக்குச் சொல்லியிருந்ததால், அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே என்று என் பாராட்டுக்களை முன்கூட்டிச் சொல்லாமல் தவிர்த்தேன்.

கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி ஒன்பது வாரங்களுக்குத் தொடரும் என்று தெரிவித்தார் மணிவண்ணன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட இசை மேதைகள், பிரபலங்கள் கண்ணதாசன் பற்றிப் பேச இருக்கிறார்களாம். ‘கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது...’ என்கிற மாதிரியான தலைப்பில் சுவாரசியமான பட்டிமன்றம் ஒன்று நடக்க இருக்கிறதாம். ஆர்வத்தோடு தன் கலைப் பணிகளை என்னோடு பகிர்ந்துகொண்டார் மணிவண்ணன்.

‘ரசிகன்’ தொடரில் ஆரம்பித்துள்ள கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி தொடர்பான ஒரு சுவாரஸ்யமான போட்டியை நான் என் வலைப்பூ நேயர்களுக்கு (இதே ‘என் டயரி’யிலோ அல்லது மற்றொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிக’னிலோ) அறிவிக்க எண்ணியுள்ளேன். அதில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு புத்தகத்திலிருந்து நான்கு புத்தகங்கள் வரை (ஒரே புத்தகத்தின் பிரதிகள் அல்ல; நான்கு வெவ்வேறு புத்தகங்கள்!) பரிசாக வெல்லக்கூடிய வாய்ப்பு உண்டு.

போட்டிக்கான விடைகள் அடுத்த வார ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் ‘ரசிகன்’ தொடரில் வெளியாகிவிடும். எனவே, இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் விடைகளை சனிக்கிழமை இரவுக்குள் பின்னூட்டமாக இடவேண்டியது அவசியம்.

‘அதெல்லாம் சரி! போட்டி என்னன்னு சொல்லுய்யா!’ என்று டென்ஷன் ஆகிறீர்களா? கூல்... கூல்..!

வருகிற புதன்கிழமையன்று உங்கள் சிந்தனைத் திறனுக்குச் சவால் விடும் அந்தப் போட்டியை அறிவிக்கிறேன். நீங்கள் ஒரு கண்ணதாசன் ரசிகராக, கவியரசரின் பாடல்களை அதிகம் கேட்டு ரசிப்பவராக இருந்தால், நீங்கள் சுலபமாக அந்தப் போட்டியில் வெல்லலாம்.

அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுவது ‘உங்கள் ரசிகன்’ ரவிபிரகாஷ்.

***
எந்த ஒரு வேலையையும் அதைச் செய்வதில் உள்ள சந்தோஷத்துக்காகச் செய்யுங்கள். பணம் பிறகு ஒரு நாள் தானாக வரும்!

10 comments:

கிருபாநந்தினி said...

முதல் போட்டிக்கான புத்தகமே இன்னும் அனுப்பினபாடில்லை; அதுக்குள்ளே இன்னொரு போட்டியா? :) சரி சரி, ஆர்வத்தைக் கெளப்பி விட்டுட்டீங்க. சட்டுபுட்டுனு அறிவியுங்க. அப்புறம் எனக்கு ஒரு டவுட்... ஏற்கெனவே புத்தகப் பரிசு கிடைச்ச நான் இதுல கலந்துக்கலாமா?

pudugaithendral said...

சில சமயம் இந்த நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன்.

புதன் கிழமை பதிவுக்காக காத்திருக்கேன்.

(சிலோன் ரேடியோ, திருச்சி ரேடியோன்னு மாத்தி மாத்தி கேட்டது ஏதும் உதவுமான்னு பாக்கறேன். எதுக்கும் எங்க பாஸ் கானா பிரபா காதுலயும் இந்த மேட்டரைப் போட்டு வைக்கிறேன்)

sridar57 said...

ஆஹா... சரோஜ் நாராயணஸ்வாமியின்
அந்த அற்புத குரல் வளத்தை ஞாபகப் படுத்தி விட்டீர்களே ஸார்!!

பத்மநாபன் said...

நிகழ்ச்சி சிறப்பாக இருந்தும் , பார்க்க முடியாத வார விடுப்பில் இருக்கும் எங்களுக்கு இந்த போட்டி பெரும் சவால் தான் , கவியரசரின் பாடல்களை ரசிப்பவர்கள் என்ற முறையில் குத்து மதிப்பாக இறங்கவேண்டியது தான் ....

Ananya Mahadevan said...

இந்த நல்ல நிகழ்ச்சியை இயக்கிய மணிவண்ணனுக்கு என் வாழ்த்துக்கள். புதன்கிழமை நெக்ஸ்ட்டு மீட் பண்ணறேன்.

Chitra said...

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்று கேட்டது அந்தக் காலம். மற்ற சாக்கடைகளின் விளம்பர நெடியில் பூக்கடைக்கும் கட்டாயம் விளம்பரம் தேவைப்படுவது இந்தக் காலம்.

........சரியா சொல்லி இருக்கீங்க. கசப்பான உண்மை. தொலை காட்சி, நிகழ்ச்சிகள் பற்றிய பதிவு நல்லா இருக்குதுங்க.
இங்கு, சன் டி.வி., கே டி.வி., ஜெயா டி.வி. - மட்டும் தான். "அசத்த போவது யாரு?" நிகழ்ச்சியில், முதலில் இருந்த எதிர்பார்ப்பு, விறுவிறுப்பு, இப்போது இல்லை என்பது என் கருத்து.

Thenammai Lakshmanan said...

ஆமாம் என்ன போட்டின்னு சொல்லுங்க ரசிகன் சீக்கிரம்

ஷைலஜா said...

என்ன போட்டி? என்ன போட்டி? ரசிகனின் ரசிகை நான்!

SARAVANAN said...

ANBULA NANBA, K.DASAN ENGRIRA THEIVATHIN VEMARCHANATHAI VELLIETA UNGALUKU EN MANAMARNTHA NANDRIYAI UNGAL POORPATHANGALIL SAMARPIKIREN.
AVAR OR SAGAPTHAM, ORU NOOTRANDU.

Unknown said...

அப்துல் ரகுமானின் குரலுக்காவே பார்க்கலாம்...,