சக பதிவரின் கடிதமும், எனது பதிலும்!

சென்ற பதிவுக்குப் பின்பு, என் ஜி-மெயில் முகவரிக்கு சக பதிவர் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. நான் அறிவித்திருந்த புத்தகப் பரிசு தொடர்பான தனது கருத்துக்களையும், விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் அதில் சொல்லியிருந்தார் அவர். ‘இது தங்கள் பதிவுக்கான பின்னூட்டமல்ல; தங்களின் தனிப்பட்ட கவனிப்புக்காக மட்டுமே’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் அவர். நக்கலும் நையாண்டியுமாக இருந்த அந்தக் கடிதம் சில யோசனைகளையும் கொண்டிருந்தது. எனவே, சற்றே நீண்ட, சுவாரசியமான அந்தக் கடித வரிகளையும், அதற்கான என் பதில்களையும் மற்றவர்களும் தெரிந்துகொள்ளும்பொருட்டு, அவரின் பெயரைத் தெரிவிக்காமல் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

‘என்ன சார்! உங்கள் வலைப்பூ ஈயாடுதா? கமென்ட்ஸ்கள் கம்மியா வந்து விழுதா? அதான், தடால்னு இப்படிப் புத்தகப் பரிசுன்னு இறங்கிட்டீங்க போல! சரி, இதனால எல்லாம் உங்கள் வலைப்பூக்களை அதிகம் பேர் படிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா?’

புத்தகப் பரிசு அறிவித்துப் பதிவிடும்போது எனக்குள்ளும் இப்படி ஓர் எண்ணம் தோன்றியது உண்மை. அதாவது, இந்தப் பரிசு அறிவிப்பை என் வலைப்பூ வாசகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள், வலைப்பூவை வாசிக்கச் செய்யும் உத்தியாக நினைத்துவிடுவார்களா என்று நினைத்தேன். என்றாலும், புத்தகப் பரிசை அறிவித்தேன். ஏன்?

நான் வலைப்பூக்களை எழுதத் தொடங்கியது பொழுதுபோக்குக்காக; ஒரு ஜாலிக்காக! எத்தனை பேர் படிப்பார்கள், எத்தனை ஃபாலோயர்ஸ் சேருவார்கள், எத்தனை ஹிட்ஸ் கிடைக்கும், விளம்பரத்துக்கு இடம் ஒதுக்கிக் காசு பார்க்கலாமா என்கிற யோசனையெல்லாம் இல்லை. நான் ஏற்கெனவே என் பதிவு ஒன்றில் சொல்லியிருப்பதுபோல, சில ஆண்டுகளுக்கு முன்பே ‘ஏடாகூடம்’ என்று வலைப்பூ தொடங்கி, சில பதிவுகளும் வெளியிட்ட பின்பு, எனக்கே என் பதிவுகள் போரடித்ததாலும், பதிவு எழுத நேரமின்மையாலும், சோம்பல் காரணமாகவும் அந்த வலைப்பூவையே நீக்கிவிட்டேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு வேலை மிச்சம் என்கிற வகையில் ரொம்ப சந்தோஷம்தான்! பின்னர் என் குழந்தைகள் ஆவலோடு வற்புறுத்தியதன்பேரில், அவர்கள் வடிவமைத்துக் கொடுக்க, அவர்களின் சந்தோஷத்துக்காக மீண்டும் எழுதத் தொடங்கினேன். தொடர்ந்து நாலைந்து நாள் எதுவும் எழுதவில்லையென்றால், ‘என்னப்பா, ரொம்ப நாளா எதுவுமே எழுதலை போலிருக்கே?’ என்று என்னைத் தொடர்ந்து ஊக்கிக்கொண்டு இருப்பவர்கள் அவர்கள்தான். ‘உங்கள் ரசிகன்’ மட்டுமல்லாது, ‘என் டயரி’ என்று இன்னொரு வலைப்பூவையும் ஆரம்பித்துக் கொடுத்து, என் வேலையை இரண்டு மடங்காக்கிவிட்டார்கள். எனவே, புத்தகப் பரிசு அறிவித்ததில் என் வலைப்பூக்களை அதிகம் பேர் வாசிக்கச் செய்ய வேண்டும் என்கிற ‘விற்பனை உத்தி’ எதுவும் இல்லை. அப்படி இதனால் அதிகம் பேர் வாசிக்கத் தொடங்கினால், அதில் சந்தோஷம்தான்!

மற்றபடி, நான் புத்தகப் பரிசு அறிவித்தது முகம் அறியா நண்பர்கள் பலரை நெருக்கமாக்கிக் கொள்கிற சந்தோஷத்துக்காக!

‘தொடர்ந்து சில முறை உங்கள் போட்டிகளில் கலந்துகொண்டும் புத்தகப் பரிசு கிடைக்காதவர்கள் வெறுத்துப்போய் உங்கள் பதிவுகளைப் படிப்பதை நிறுத்திவிடும் அபாயம் உண்டு!’

இல்லை. அப்படி நான் நினைக்கவில்லை. பதிவுகளைப் படிப்பவர்கள் புத்தகப் பரிசுக்காகப் படிப்பதில்லை. பதிவின் சுவாரசியத்துக்காகவே படிக்கிறார்கள். சொல்லப்போனால், பதிவைப் படிப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே பின்னூட்டம் இடுகிறார்கள்; அதிலும் மிகச் சிலர் மட்டுமே போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். லட்சக்கணக்காக விற்பனையாகும் ஆனந்த விகடன் பத்திரிகையில் நாங்கள் அறிவிக்கும் சிறு சிறு போட்டிகளில் நூற்றுக் கணக்கில்தான் வாசகர்கள் கலந்துகொள்கிறார்கள். (மெகா பரிசுப் போட்டிகளான தேர்தல் போட்டி போன்றவற்றில் 35,000 பேர் வரைக்கும்கூட கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது வேறு!) அதே போல அஞ்சலட்டை, இ-மெயில், வாய்ஸ் ஸ்னாப் போன்று பலவித ரூபங்களில் வந்து சேரும் கடிதங்களும் அதிகபட்சம் ஐந்நூறுக்குள் அடங்கிவிடும். பரிசு என்பது கூடுதல் கவர்ச்சி. அதற்காக யாரும் புத்தகம் வாங்கிவிடுவதில்லை; படிப்பதுமில்லை. புத்தகத்தின் உள்ளடக்கமே அதன் வெற்றிக்குக் காரணம். அதுபோல, என் பதிவைப் படிக்கிறவர்கள் படிக்கப் போகிறார்கள்; போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் இருந்தால் கலந்துகொள்வார்கள்; பரிசு கிடைத்தால் மகிழ்ச்சி; இல்லையேல், ஓ.கே! இதில் வெற்றி, தோல்வி என எதுவும் இல்லையென்பதால், வருத்தத்துக்கோ வெறுப்புக்கோ இடமில்லை.

‘விகடன் பிரசுர புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உங்களாலான ஓர் அணில் முயற்சியா இது?’

இதைவிட அபத்தமான ஒரு கேள்வியை இவராலேயே கேட்க முடியாது என்று நினைக்கிறேன். விகடன் பிரசுரம்தான் இன்றைக்குப் பதிப்பகங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை வெளியிட்டும், விற்பனை செய்தும் வருகிறது. எனக்குத் தெரிந்து கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தகச் சந்தையில் அதிக எண்ணிக்கையில், அதிக தொகைக்குப் புத்தகம் விற்றிருப்பதும் விகடன் பிரசுரம்தான். நான் விகடன் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன் என்பதால், விகடன் பிரசுர புத்தகங்களைப் பரிசாகத் தர எண்ணியுள்ளேன். (ஆனால், என் பதிவில் வெறுமே புத்தகங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர, விகடன் பிரசுர புத்தகங்கள் என்று குறிப்பிடவில்லை.) ஏன் என்றால், வெளி பிரசுர புத்தகங்களை நான் முழு விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். விகடன் பிரசுர புத்தகங்கள் என்றால், கணிசமான சலுகை விலையில் எனக்குக் கொடுப்பார்கள். இது முக்கியக் காரணம். தவிர, விகடன் பிரசுரம் வெளியிடாத சப்ஜெக்டே இல்லை. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு வகையில் சுவாரசியமானது. குறிப்பாக, விகடன் பிரசுரம் வெளியிட்டு வரும் கையடக்கமான மினி சைஸ் புத்தகங்கள் பார்க்கவே அத்தனை அழகு! நண்பர்களின் பிறந்த நாளுக்கு, நன்றாகப் படிக்கும் சிறுவருக்கு என யாருக்கும் பரிசளித்து மகிழ ஏற்றது.

அந்நாளில் ‘லிப்கோ’ நிறுவனத்தில்தான் இம்மாதிரியான குட்டியூண்டு புத்தகங்கள் வெளியாகும். பழுப்பு அட்டையில், தேச பக்தர்கள், சாதனை செய்த பெரியவர்கள், உலகின் மிகச் சிறந்த கதைகள், தமிழ்க் காப்பியச் சுருக்கங்கள் என பல வித சப்ஜெக்டில் வெளியான கையடக்கப் பதிப்புகள் பலவற்றை ரொம்ப காலத்துக்கு முன்பு நான் ஆவலோடு படித்து ரசித்திருக்கிறேன். விகடன் பிரசுரம் இப்போது அப்படிப் பல சுவாரசியமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அவற்றைத்தான் என் சந்தோஷத்துக்காக என் சொந்தச் செலவில் வாங்கி என் வலைப்பூ நேயர்களுக்குப் பரிசளிக்க எண்ணியுள்ளேன்.

‘நீங்கள் எழுதின புத்தகங்கள் இரண்டோ மூன்றோதான். அதையே திரும்பத் திரும்பப் பரிசாக அனுப்பினால் அலுப்பாக இருக்காதா?’

திரும்பத் திரும்ப ஒருவருக்கேவா நான் புத்தகப் பரிசுகளை அனுப்பிக்கொண்டு இருக்கப் போகிறேன்? வெவ்வேறு நபர்களுக்குத்தானே புத்தகங்கள் போய்ச் சேரப் போகின்றன? பின்பு எப்படி அலுப்பாக இருக்கும் என்று புரியவில்லை. தவிர, நான் எழுதிய புத்தகங்களைத்தான் பரிசாக அனுப்பப் போகிறேன் என்று நான் எங்கே சொன்னேன்? ‘புதுமொழி 500’ புத்தகத்துக்குத் தலைப்பு வைத்ததற்காக நன்றியோடு அந்தப் புத்தகத்தை அனுப்பி வைப்பதாகச் சொன்னேன். அடுத்தடுத்து அனுப்ப உத்தேசித்திருப்பது அதே போன்ற கையடக்க விகடன் பிரசுரங்களைத்தானே தவிர, என் புத்தகங்களை அல்ல! அவை கையடக்கப் பதிப்புகள் அல்ல.

‘புத்தகப் பரிசு அளிப்பதாக இருந்தால், அவற்றை சக பதிவர்களுக்கு மட்டுமே அளித்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம். அதாவது, தாங்கள் அறிவிக்கும் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற வேண்டுமெனில், அவர் அவசியம் வலைப்பூ எழுதுபவராக இருக்க வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையையும் சேர்த்துவிடுங்கள். பின்னூட்டம் இடுகிறவர்கள் அனைவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டால் அதில் ஒரு சுவாரசியம் இல்லாது போய்விடும்.’

மன்னிக்கவும். என் வலைப்பூ வாசகர்களுக்காகத்தான் இந்தப் புத்தகப் பரிசுகளை அறிவித்துள்ளேனே தவிர, சக வலைப் பதிவர்களுக்காக அல்ல. பின்னூட்டம் இடுபவர்கள் அனைவரும் வலைப்பூ வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு பத்திரிகை தன் வாசகர்களுக்காகத்தான் பரிசுப் போட்டிகளை அறிவிக்குமே தவிர, சக பத்திரிகையாளர்களுக்கு அல்ல!

‘அதிக அளவில் பின்னூட்டம் இடுகிறவர்களுக்கும் புத்தகப் பரிசுகள் தரலாமே?’

இவர் தன் கடிதத்தின் ஆரம்பத்தில் சொன்ன ‘வலைப்பூ வாசிக்கச் செய்யும் உத்தி’ இதுதான். மேலும், வாசிக்காமலே கூட ‘வெரி நைஸ்’ என்று பின்னூட்டம் இட்டுச் செல்லும் அபாயம் இருக்கிறது. மன்னிக்கவும், அதை ஊக்குவிக்க நான் தயாராக இல்லை. என் பதிவுகளை வாசித்துதான் தீர வேண்டும் என்று நான் யாரையும் நேரடியாகவோ, இப்படிப் பரிசுகள் கொடுத்து மறைமுகமாகவோ நிர்பந்திக்க முடியாது. படிப்பதும் படிக்காததும் அவரவர் விருப்பம்.

‘ஒரு வருடத்துக்கு வெறும் 15 புத்தகங்கள்தான் பரிசாகத் தருவீர்கள் என்பது ரொம்பவும் அல்பத்தனமாகத் தெரிகிறதே? ஒரு பத்திரிகையாளரான நீங்கள் குறைந்தபட்சம் 50 புத்தகங்களாவது பரிசளித்தால்தானே ஒரு மரியாதை?’

ஐயா, சாமி! நான் போட்டியே நடத்தவில்லை; புத்தகமும் பரிசளிக்கவில்லை. ஆளை விடுங்க! :)

சும்மா சொன்னேன். பரிசளிப்பு என்பது என் சந்தோஷத்துக்கு. நான் இடும் பதிவுகளில் புத்தகம் பரிசளிக்க வாய்ப்பு இருந்தால், கண்டிப்பாக அதற்குத் தகுந்த போட்டிகளை அதில் அறிவிப்பேன்.

உதாரணமாக, இந்தப் பதிவையே எடுத்துக் கொள்ளுங்கள். கடிதம் எழுதிய சக பதிவர் (ம்ஹூம், அவர் யார் என்று கேட்டுப் போட்டி வைக்கப் போவதில்லை.) புத்தகப் பரிசளிக்க சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார். அவற்றில் எதையுமே என்னால் ஏற்க முடியவில்லை. உங்கள் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். நான் சிறப்பாகக் கருதும் (கடைப்பிடிக்க விரும்பும்) ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கு, ‘புதுமொழி 500’ புத்தகம் தயாரானதும் தலா ஒரு பிரதியை என் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

நினைவூட்டல்: கிருபாநந்தினி, ரோஸ்விக், பின்னோக்கி ஆகியோருக்குப் புத்தகப் பரிசு அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டு, அவர்களின் முழு அஞ்சல் முகவரியைக் கேட்டிருந்தேன். ரோஸ்விக் மட்டுமே தன் முகவரியைத் தந்துள்ளார். மற்ற இருவரும் தங்கள் முகவரிகளை இன்னும் அனுப்பி வைக்கவில்லை.

***
பிறருக்குப் பயன்படுங்கள்; பிறரால் பயன்படுத்தப்படாதீர்கள்!

9 comments:

Chitra said...

புத்தக பரிசு கொடுப்பதில், இவ்வளவு மேட்டர் இருக்கா?

துபாய் ராஜா said...

//பிறருக்குப் பயன்படுங்கள்; பிறரால் பயன்படுத்தப்படாதீர்கள்! //

அற்புதமான வரிகள்.ஆனால் சாதாரண மனிதர்களால் இது சாத்தியமா....

பரிசல்காரன் said...

கமெண்ட்: 0

தமிழிஷ் ஓட்டு: 13.

அப்ப தமிழிஷ்ல படிக்கறவங்க கமெண்ட் போடறதில்லை - ஏன்னு ஒரு போட்டி வைங்க.

Joke Apart, சிந்திச்சு விரிவா அனுப்பறேன்...

Paleo God said...

::))

பிரபல பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்..:)

பின்னோக்கி said...

ஓ. இப்படி மின்னஞ்சல் வந்தும், அதற்கு விளக்கங்கள் கொடுத்ததற்க்கு பாராட்டுக்கள்..

சார். முகவரி அனுப்பிவிட்டு இப்பொழுது தான் படித்தேன் :)

பத்மநாபன் said...

பரிசு அப்படி கொடுக்க கூடாது ... இப்படி கொடுக்க கூடாது ... இப்படி அப்படி கொடுக்கலாம் ... என்று உங்களை குடைந்து எடுத்து விட்டார் அந்த அசுவராசிய நண்பர்... நல்ல வேலை அதில் ஒன்றை கூட நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை . அவருக்கு அளித்த பதில்கள் அனைத்தும் அருமை வலைப்பதிவு என்பது பத்திரிக்கையை விட
சுதந்திரமான நட்பு வட்டம் .எனவே உங்களுடைய இந்த யதார்த்த பாணியையே தொடருங்கள் என்பதுதான் எங்கள் ஆலோசனை வேண்டுகோள் (பரிசு விஷயத்திலும் ) ....தரத்திற்கும் பின்னூட்டங்களுக்கும் பெரிய சம்பந்தம் இல்லை ..பின்னூட்டங்கள் , கொடுத்து வாங்கும் , வாங்கி கொடுக்கும் , கலாய்க்கும் அழகான நட்பு வெளிப்பாடுகள் அவ்வளவு தான் . நண்பர் கூட்டம் தேர்த்த வேண்டும் (நட்பு சுகமானது) , நம்ம திருப்திக்கு கொஞ்சம் தரத்தையும் பார்த்துக்கொள்ளவேண்டும் அதே சமயத்தில் பின்னூட்ட படவில்லை என்றால் , படிக்கப்படுவதில்லை என்று அர்த்தம் இல்லை...(ஏதோ, நண்பர்கள் பிசி ) மிக குறைவாக பின்னூட்டபட்ட உங்களுடைய ஆரம்பகால கட்டுரைகள் மிக மிக அருமையானவை. (இப்பொழுது மிக,மிக மிக) ..
எங்கள் சார்பில் உங்களை பதிவுகளுக்காக குடையும் உங்கள் மகள், மகனுக்கு சிறப்பு நன்றி .

கிருபாநந்தினி said...

நக்கல் பண்ணி வந்த கடிதத்தையும் பலர் அறிய தைரியமா எடுத்துப் போட்டு அதுக்குப் பதில் சொன்ன விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துதுங்ணா! அப்புறம்... முகவரி பத்தி நினைவூட்டியிருக்கீங்க. இதுக்குத் தனியா உங்க மெயிலுக்கு ஒரு பதில் அனுப்பியிருக்கேன். என் தலைப்பை தேர்ந்தெடுத்ததுக்கு உங்களுக்குத் தேங்க்ஸ் சொல்லி இப்பத்தான் ஒரு பதிவு எழுதி முடிச்சேன். முடிஞ்சா ஒரு எட்டு வந்து எட்டிப் பார்த்து, முடிஞ்சா ஒரு கமெண்ட்டையும் தட்டிவிட்டுட்டுப் போங்கண்ணா!

ungalrasigan.blogspot.com said...

* இருக்குங்களே சித்ரா, இருக்குங்களே! :)

* ஆகணும் (துபாய்)ராஜா, ஆகணும்! :)

* பரிசல், அதானே?! :)

* ஷங்கர்! பிரபல பதிவர் ஆயிட்டேனா, எப்போ? எப்போ?

* முகவரி கிடைத்தது பின்னோக்கி! புத்தகம் ரெடியானதும் முதல் புத்தகம் உங்களுக்குத்தான்!

* பத்மநாபன், தங்களின் நீண்ட பின்னூட்டம் உற்சாகம் தருவதாக இருந்தது! நன்றி!

* நன்றி கிருபாநந்தினி! தொடர்ந்து உங்கள் பதிவுகளையும் நான் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்!

butterfly Surya said...

இன்று தான் படிக்க முடிந்தது.

நட்பு வட்டம் பெருகட்டும்.

வாழ்த்துகள்.