ஒரு பேர் வைங்களேன், ப்ளீஸ்!

‘பேர் வைத்தல்’ என்பதை இங்கே ‘தலைப்புக் கொடுத்தல்’ என்கிற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் சிறுகதையை எழுதி முடித்துவிட்டு (இப்ப இல்லீங்க. ரொம்ப காலத்துக்கு முன்னே!) அதற்கு ஒரு நல்ல தலைப்பை வைக்க நான் பட்ட பாடு... அப்பப்பா! ஒரு பெண் எத்தனை அழகா மேக்கப் பண்ணிக்கிட்டு ஜொலிச்சாலும், அவ நெத்தியில இருக்கிற பொட்டுதான் அவளோட மொத்த அழகையும் தூக்கி நிறுத்துறதா எனக்குத் தோணும்! அது போல, ஒரு சிறுகதைக்குச் சரியான தலைப்புக் கிடைக்கலேன்னா, உப்பு இல்லாத சமையல் போல கொஞ்சம் சொதப்பின மாதிரிதான்!

ஒரு முறை, நான் சாவியில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து ஒரு சிறுகதையை வாங்கிப் பிரசுரித்தேன். விஷயம் என்னவென்றால், சுஜாதா அந்தக் கதைக்குத் தலைப்பே வைத்திருக்கவில்லை. அவரைத் தொடர்புகொண்டு் கேட்கவும் அப்போது எனக்கு அவகாசமோ, தொலைத்தொடர்பு வசதிகளோ இல்லை. எனவே, நானே ஒரு முடிவெடுத்து, ‘தலைப்பில்லாத கதை’ என்ற தலைப்பில் அந்தக் கதையைப் பிரசுரித்து, “இந்தக் கதைக்குச் சரியான தலைப்பை வாசகர்கள் எழுதியனுப்பலாம். .... தேதிக்குள் வந்து சேரும் தலைப்புகளிலிருந்து எழுத்தாளர் சுஜாதாவே ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துப் பரிசு தருவார்” என்று அறிவிப்பு போட்டுவிட்டேன்.

விடியற்காலை 3 மணி... ஆசிரியர் சாவியை தூக்கத்திலிருந்து எழுப்பி, முடித்து வைத்த ஃபாரங்களைக் காட்டியபோது, புரட்டிக்கொண்டே வந்தவர், அந்த அறிவிப்பில் சிறிது நேரம் தாமதித்தார். பின்பு, “சுஜாதா கிட்ட இது பத்திப் பேசிட்டியா? செலக்ட் பண்ணித் தரேன்னு சொன்னாரா?” என்று கேட்டார். “இல்லை சார்! பேச முடிஞ்சிருந்துதுன்னா கதைக்கான தலைப்பையே அவர் கிட்டே கேட்டிருப்பேனே! அவரைப் பிடிக்க முடியலை. அதான், நானே துணிஞ்சு அவரைக் கேக்காமலே இப்படி ஒரு அறிவிப்பு போட்டுட்டேன்” என்றேன். (‘துணிஞ்சு’ என்பது, ஆசிரியர் சாவி மீது சுஜாதா வைத்திருக்கும் பெருமதிப்பில் என்பது அண்டர்ஸ்டுட்!)

சிரித்தார். “நல்லது! கடைசி நிமிஷத்துல தலைப்புக்கு என்ன பண்றதுன்னு முழிக்காம, நீயா ஏதோ ஒரு தலைப்புக் கொடுக்காம, கிரியேட்டிவ்வா யோசிச்சுப் பண்ணினே பாரு! கெட்டிக்காரன்தான்” என்றார். (அவரைப் பற்றி எப்போது எழுத நேர்ந்தாலும், மேற்கொண்டு எழுத வராமல், நெஞ்சம் நெகிழ்ச்சியில் உறைந்து போகிறது.)

அதன்படியே, வாசகர்களிடமிருந்து வந்த நூற்றுக்கணக்கான தலைப்புகளிலிருந்து சிறப்பான பத்து தலைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து சுஜாதாவுக்கு அனுப்பி வைத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததோடு, ஒரு சிறுகதைக்குரிய நல்ல தலைப்பை வைப்பது எப்படி என்பதற்கான சில டிப்ஸ்களையும் எழுதி அனுப்பியிருந்தார். அவற்றில், ‘தலைப்பு சிக்கனமாக ஓரிரு வார்த்தைகளில் இருந்தால் நல்லது; நீண்ட தலைப்பாக இருந்தால், அந்தத் தலைப்பிலேயே ஏதாவது சுவாரஸ்யம் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பொன்மொழியையோ வேறு ஒரு சொற்றொடரையோ சற்றே திரித்து, புதுமை சேர்க்கலாம்; (வாய்மையே/சில சமயம்/வெல்லும் என்பது போல.) தலைப்பு கதையின் சஸ்பென்ஸைக் கெடுத்துவிடும்படி கட்டாயம் இருக்கக்கூடாது’ ஆகியவை சட்டென்று நினைவுக்கு வரும் டிப்ஸ்கள்.

சுஜாதா தேர்ந்தெடுத்துக் கொடுத்த தலைப்பை (இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை) வெளியிட்டு, அதை எழுதி அனுப்பிய வாசகருக்கு பரிசுத்தொகையை (50 ரூபாய் என்று ஞாபகம்) மணியார்டர் செய்தோம்.

தலைப்பு வைப்பதில் சாவி கெட்டிக்காரர். கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்கிற தலைப்பு சாவி தந்ததுதான். அதே போல், கலைஞரின் ‘குறளோவியம்’ என்கிற தலைப்பும் சாவி சார் கொடுத்த தலைப்புதான். புஷ்பாதங்கதுரையின் அற்புதமான நாவல் ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’. இது பின்னர் திரைப்படமாகவும் வந்தது. இந்தத் தலைப்பும் சாவி கொடுத்த தலைப்புதான். சாவி எழுதிய ஒரு நாவலின் தலைப்பு ‘ஆப்பிள் பசி’. என்னவொரு வித்தியாசமான தலைப்பு! இந்தத் தலைப்பால் வசீகரிக்கப்பட்ட எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ‘விஸ்கி தாகம்’ என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதினார்.

சாவி சாரிடம் பயின்றதில், தலைப்பு வைக்கும் சூட்சுமம் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் பிடிபட்டது. கிரிக்கெட் ஜோக்குகளுக்கு ‘சிரிக்கெட்’ என்றும், கொலு ஜோக்குகளுக்கு ‘கொலுன்னு சிரிங்க’ என்றும் எண்பதுகளிலேயே வார்த்தைகளில் விளையாடித் தலைப்பு வைக்கத் தொடங்கியது (தற்பெருமை இல்லாமல் சொல்கிறேன்) நான்தான். பின்னர் நான் ஆனந்த விகடனில் சேர்ந்த பிறகு, நான் வைக்கும் தலைப்புகளை வீயெஸ்வி சார் ரசித்துப் பாராட்டி, அவரது கட்டுரைகளுக்கேகூட என்னைத் தலைப்பு வைக்கச் சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

சாவியில் ஒருமுறை கீல்வாதம், மூட்டுவாதம், பக்கவாதம் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் அரைப்பக்க விளம்பரம் ஒன்று பிரசுரத்துக்கு வந்தது. தலைப்பு எதுவும் இல்லாமல் இருந்த அந்த விளம்பரத்துக்கு நானாக, ‘எதிர்வாதம், பிடிவாதம், குதர்க்கவாதம் நீங்கலாக...’ என்று தலைப்புக் கொடுத்து வெளியிட்டேன். ஆச்சரியம்... பின்னர் அந்த விளம்பரம் அதே தலைப்புடன் மற்ற பத்திரிகைகளிலும் வெளியாகியது. (அதற்கு முன்னர் அது தலைப்பில்லாமல்தான் வெளியாகிக்கொண்டு இருந்தது.) தவிர, சம்பந்தப்பட்ட டாக்டர் தன் மருத்துவமனை போர்டிலேயே இப்படி எழுதிக்கொண்டு இருந்ததை ஒரு வாசகர் போட்டோ பிடித்து அனுப்பி வைத்திருந்தார்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். இப்போது எனக்கு ஒரு தலைப்பு தேவை.

சமீபத்தில், புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது அங்கே விகடன் ஸ்டாலில், “அவள் விகடனில் வெளியான ‘பத்துவம்’ புத்தகமாக வந்திருக்கிறதா?” என்று பெண்களும், “விகடனில் டிக்... டிக்... டிக்... என்ற தலைப்பில் வெளியான பொன்மொழிகள் புத்தகமாக வந்திருக்கிறதா?” என்று மோகன்சம்பத் (பெயர் மோகன்சம்பத்தா, மோகன்ராமா என்று இப்போது சரியாக ஞாபகமில்லை. அவர் ஜெயா டி.வி-யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருப்பதாகச் சொன்னார்.) என்பவரும் விசாரித்துக்கொண்டு இருந்ததைக் கேட்டேன். இன்னும் பலரும் இப்படி விசாரித்துப் போனதாகச் சொன்னார்கள் விகடன் பிரசுரத்தார்.

எனவே, டிக்... டிக்... டிக்... மற்றும் பத்துவம் இரண்டையும் தொகுத்து (கிட்டத்தட்ட 400 பொன்மொழிகள் தேறும் என்று நினைக்கிறேன்.) ஒரு புத்தகமாகக் கொண்டு வர விகடன் பிரசுரம் தீர்மானித்திருக்கிறது. ஆனால், புத்தக வடிவில் வரும்போது இந்த இரண்டு தலைப்புகளுமே அத்தனைப் பொருத்தமாக இருக்காது என்பது என் எண்ணம். பொன்மொழிகள் போல ‘மின்மொழிகள்’ என்று ஒரு தலைப்பை யோசித்தேன். ஆனால், மின்சார சிக்கனம் தொடர்பான ஸ்லோகன்களோ என்று வாசகர்கள் குழம்பிவிடப் போகிறார்களே என்று தோன்றியது.

இதைப் படிக்கும் உங்களுக்கு ஏதாவது தலைப்பு தோன்றினால், பின்னூட்டத்தில் சொல்லுங்கள். உங்கள் தலைப்புகளை ஒரு வார காலத்துக்குள் சொன்னால் உதவியாக இருக்கும். உங்களுடைய தலைப்புகளை விகடன் பிரசுரத்தாரிடம் கொடுக்கிறேன். அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தலைப்பைப் பின்னூட்டமாக இட்ட ‘என் டயரி’ வாசகருக்கு என்னுடைய சிறிய அன்பளிப்பாக, மேற்படி புத்தகம் தயாரானதும் ஒரு பிரதியை இலவசமாக அனுப்பி வைக்கிறேன். தவிர, புத்தகத்திலும் அவர் பெயரை நன்றியோடு குறிப்பிட முயல்கிறேன். (முயல்கிறேன் என்று பட்டும் படாமல் சொல்வதற்குக் காரணம், இதில் முடிவு எடுக்க வேண்டியது விகடன் பிரசுரத்தார்தான்.)

குறிப்புகள்:

1. தலைப்பு தேர்வான பிறகே இதற்கான பின்னூட்டங்கள் இங்கே பதிவிடப்படும்.
2. டிக்... டிக்... டிக்... மற்றும் பத்துவம் போன்ற தலைப்புகளில் என்ன மாதிரியான பொன்மொழிகளை எழுதி வந்தேன் என்று தெரியாதவர்கள், ‘என் டயரி’ பகுதியில் ஒவ்வொரு பதிவின் கீழும் நான் பதிவிடும் பொன்மொழிகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

***
பழமொழி ஒரு சின்ன வாக்கியம்தான். ஆனால், நீண்ட அனுபவத்தை உள்ளடக்கியது!

31 comments:

Chitra said...

ஒரு பெண் எத்தனை அழகா மேக்கப் பண்ணிக்கிட்டு ஜொலிச்சாலும், அவ நெத்தியில இருக்கிற பொட்டுதான் அவளோட மொத்த அழகையும் தூக்கி நிறுத்துறதா எனக்குத் தோணும்! அது போல, ஒரு சிறுகதைக்குச் சரியான தலைப்புக் கிடைக்கலேன்னா, உப்பு இல்லாத சமையல் போல கொஞ்சம் சொதப்பின மாதிரிதான்!
............இந்த வரிகளில் மட்டும் அல்ல, தலைப்பும் கூட ரசித்து அழகாய் வர யோசிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

Paleo God said...

பொற்றொடர்

வைர கடுகுகள்

நானூறு வாக்கியங்கள்

வரிகளில் நில்லுங்கள்

அகவரிகள்

-----------------------------
அவ்ளோதான் சார்..:))

Kalyani said...

'ஆஹா...' சிந்தனைகள் (அல்லது) 'அடே...' சிந்தனைகள்

PADMANABAN said...

நான் வலையுலகத்திற்கு புதியவன்... எங்க ஊர் கோவைகாரர்களிடம் ஆரம்பிப்போம் என்று லதானந்த், கிருபா ....என்று வாசித்துவிட்டு , சுஜாதா ..சுஜாதா என்று தேசிகனை பார்க்க போகும் வழியில் , ரவிப்ரகாஷ் மாட்டினார் , நான் வசமாக மாட்டிக்கொண்டேன் அவரது எளிமை + இனிமையில், ஒரு பாட்டம் அத்தனையும் ''ஆனந்தவாசிப்பு'' இட்டுவிட்டேன் . (ப்ளீஸ் நோட் '' '' ) ஒவ்வொன்றும் முதல் வரியில் கண் வைத்தால் இமைக்கவிடாமல் கடைசிவரை இழுத்துசெல்லும் கட்டுரைகள் ... சரி இந்த தலைப்பு , ஏற்கனவே எழுதி இருக்கிறாரே ... மறுபடியும் அதே திரும்புதேன்னு யோசிச்சிட்டே கிழே போக போக ,ஒரு இடத்தில் ஜோரா நின்று , ஒன்று விடாமல் , கதைகளுக்கும் ..மற்றவற்றிற்கும் ''தலைப்பிட்ட'' விதம் சொன்ன அழகு, நமக்கும் ''தலைப்பு'' வைக்கும் ஆசை வருகிறது ... ஆனால் ஆசையிருக்கு தாசில் பண்ண ...... பழமொழியும் கூடவே ஞாபகம் வருது . ( முயற்சி செய்கிறேன் தலைவரே )

வெற்றி said...

மேன்மொழிகள் (அ) மென்மொழிகள்

butterfly Surya said...

ப(த)த்துவம்.

butterfly Surya said...

டக்.. டக்.. டக்..

butterfly Surya said...

அவள் விகடன் வாசகிகள் எழுதியதா..??

அவள் விகடன் டுவிட்டர்ஸ்..

கிருபாநந்தினி said...

ஆனந்த விகடனிலும் அவள் விகடனிலும் முறையே ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘பத்துவம்’ ஆகியவற்றைப் படித்து ரசித்திருக்கிறேன். அவற்றை எழுதியது தாங்கள்தான் என்பதை அறிய மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். உங்கள் புத்தகத்துக்கு ஒரு தலைப்பு வைக்க எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி! தங்கள் பதிவைப் படித்ததும் உடனடியாக எனக்குத் தோன்றிய சில தலைப்புகளை இங்கே எழுதியுள்ளேன். வேறு தோன்றினால் அடுத்த பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறேன்.
1. மின்னல் மொழிகள்
2. சிந்தனை முத்துக்கள்
3. ஒன்றே சொல்; நன்றே சொல்!
4. புதுமொழி நானூறு

ரோஸ்விக் said...

அகநானூறு, புறநானூறு போல - பொன்மொழி நானூறு

தங்க மொழியில் தங்கிய மொழிகள்

விழிதிறக்கும் (பொன்)மொழிகள்

பொன்மொழிகள் என்மொழியில்

http://thisaikaati.blogspot.com

KULIR NILA said...

Neengal Ketta Thalaippugal

1. Mozhi Kani
2. Thathoos
3. Thathu Mozhikal
4. Ennamellam....
5. Arathap Pudhusu

K.Kannan said...

Dear Raviprakash, do you remember me? I am your good old friend Kannan (Sangeethamangalam). I read your blogs regularly. I want to give some titles. Whether these are worth or not... you decide.
1. Sol Pudhithu!
2. Vaira Mozhikal

கே. ஆர். சியாமளா said...
This comment has been removed by a blog administrator.
கே.வி.ராமானுஜம் said...

இதோ சில தலைப்புக்கள்!
சொல்வதெல்லாம் உண்மை
உண்மை... உணமையைத் தவிர வேறில்லை.

கே.வி. ராமானுஜம் said...

இதோ, என் தலைப்புக்கள்!
சொல்வதெல்லாம் உண்மை!
உண்மை... உண்மையைத் தவிர வேறில்லை!

ஜீவன்பென்னி said...

நானும் கதைங்குற பேர்ல ஒன்ன எழுதி தலைப்பு என்ன வைக்கலாம்னு ரெண்டு நாள் யோசிச்சேன்.

முயற்சி செய்யுறேன்.

கே. ஆர். சியாமளா said...

விகடன் பிரசுரத்திலிருந்து வெளியாகும் புத்தகத்துக்குப் பெயர் வைப்பதே மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். நீங்களோ கரும்பு தின்னக் கூலியாக புத்தகப் பரிசும் கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். கசக்குமா என்ன? இந்தத் தலைப்புகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
1. நகை நானூறு
2. அக்கினிக் குஞ்சுகள்

கிருபாநந்தினி said...

\\வாய்மையா/சில சமயம்/வெல்லும் என்பது போல// வாய்மையே என வரவேண்டும் சார்! நிற்க. மேலும் சில தலைப்புகள்...
1. சிந்தனைச் சுடர்கள்
2. சொன்னதெல்லாம் பொன்!
இன்னும் தோன்றினால் அனுப்புகிறேன்.

PADMANABAN said...

மொழித்துளிகள் .....

மொழியோ துளி , கருத்தோ கடல் .

துளி... துளி... துளி ....... மொழித்துளி .

மொழி நானூறு (சரியாக நானூறு இருந்தால் , புறநானூறு அகநானூறு மாதிரி )

புத்தம் புதிய ஆத்திசூடி

ரவி , எதாவது தேறுமா பாருங்கள் .........

பின்னோக்கி said...

1. சிறு வரிகள் பெரு அர்த்தங்கள்.
2. ஒரு வரி... வைர வரி

நல்லாயில்லை என்றாலும் திட்டாதீர்கள் :-)

பின்னோக்கி said...

எனர்ஜிக்கு ஒரு வரி டானிக்

உங்கள விடுறதா இல்லை :-)

பின்னோக்கி said...

ஒரு செகண்ட் படிக்க

பின்னோக்கி said...

படிக்க ஒரு நொடி.. சிந்திக்க பல நொடி

கே. பி. ஜனா... said...

'பொன்மொழிப் பொழுது'

ungalrasigan.blogspot.com said...

சித்ரா! மேலோட்டமான பாராட்டாக இல்லாமல் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து பாராட்டியிருக்கிறீர்கள் என்பது உங்கள் வரிகளிலிருந்து தெரிகிறது. மிக்க நன்றி!

ungalrasigan.blogspot.com said...

பத்மநாபன், ரொம்பவே சிலாகித்துப் பாராட்டியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் நன்றி! \\எங்க ஊர் கோவைகாரர்களிடம் ஆரம்பிப்போம் என்று லதானந்த், கிருபா ....என்று வாசித்துவிட்டு// அதெப்படி கோவைக்காரர்கள் பிளாகை மட்டும் உங்களால் தனியான இனம் காண முடிந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! :)

Paleo God said...

அப்ப தலைப்பு செலெக்ட் பண்ணிட்டீங்களா?? ஆர்வத்துடன் வெய்ட்டிங்..:))

ungalrasigan.blogspot.com said...

ஆர்வத்தோடு தலைப்புகளை அனுப்பி உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் இதயங் கனிந்த நன்றி! இத்தனைத் தலைப்புகளில் தேர்வானது எது என்பதை அறிய, என் அடுத்த பதிவைப் பாருங்கள்!

Paleo God said...

ஆஹா பதிவர்களின் மூலமே ஒரு தலைப்பு.. வெற்றி யாருடையதாக இருந்தாலும்... இதிலிருந்து தேர்வு செய்ததற்கு நன்றிகள் பல..::))

PADMANABAN said...

//அதெப்படி கோவைக்காரர்கள் பிளாகை மட்டும் உங்களால் தனியான இனம் காண முடிந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது // உங்களுக்கு தெரியாத விஷயமில்லை ... எங்க ஊர்கார அண்ணதம்பிகளுக்கும், அக்கா அம்மிணிகளுக்கும் எங்கூர் பாஷை தடயமில்லாமல் தமிழ் எழுதறதும் கஷ்டம் , பேசுறதும் கஷ்டம் ( வெளியூரில் ஏன் வெளி நாட்டில் , நான் தமிழில் நாலு வார்த்தை பேசுவதற்குள் , நீங்க கோயம்புத்தூரா ? என்று கேட்டு விடுவார்கள் ) . இப்ப எல்லாம் படிக்க ஆரம்பிச்சாச்சு ... பதிக்கறதை விட படிப்பதுதான் நடக்கிறது .
அனைத்து சகபதிவர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும் .

விக்னேஷ்வரி said...

அய்யோ, இந்தத் தலைப்பு வைக்குற வேலை ரொம்பக் கஷ்டமுங்க. ஒவ்வொரு பதிவையும் எழுதி முடிச்சுட்டு பத்து நாளைக்கும் மேல தலைப்பு கிடைக்காம நான் படுற கஷ்டம் இருக்கே....