நலமா ஞாநி?

திங்கள்கிழமை காலையில், தோழர் ஞாநிக்கு ஹார்ட் அட்டாக் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் தோழர் பாலமுருகன். உடனே ஞாநியின் செல்லுக்குத் தொடர்பு கொண்டேன். ‘ஸ்விட்ச்டு ஆஃப்’ என்று வந்தது. அடுத்து நண்பர் பாஸ்கர் சக்தியின் செல்லுக்குத் தொடர்பு கொண்டேன். “உண்மைதான்! மைல்டாக இருந்திருக்கிறது. மலர் ஹாஸ்பிட்டலில் சேர்ந்திருக்கிறார். பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. இப்போது நான் அங்கேதான் போய்க்கொண்டு இருக்கிறேன்” என்றார்.

தொலைக்காட்சியில் அவரின் ‘கண்ணாடிக் கதைகள்’ தொடரைப் பார்த்ததிலிருந்து அவர் மீது எனக்கு நல்ல அபிமானம் உண்டு. ஏற்கெனவே விகடன் குழுமத்திலிருந்து வெளியான ‘ஜூனியர் போஸ்ட்’ இதழை அவர்தான் பொறுப்பேற்றுப் பார்த்துக்கொண்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தச் சமயத்தில் நான் விகடனில் சேரவில்லை. பின்னர் அவர் மீண்டும் விகடனில் எழுதத் தொடங்கியதிலிருந்து நண்பர் பாஸ்கர் சக்தியின் மூலமாக (இவரும் விகடனில் பணியாற்றியபோதுதான் பழக்கம்.) அறிமுகமாகி, ஞாநியுடனான நட்பை வளர்த்துக் கொண்டேன்.

அவர் விகடனில் எழுதிய ‘தவிப்பு’ தொடர்கதை - புனைகதையா, நிஜ சம்பவத் தொகுப்பா என மயக்கம் தரும் அளவுக்குக் கற்பனையும் உண்மைச் சம்பவங்களும் பின்னிப் பிணைந்திருக்கும். ஒரு கைம்பெண்ணின் தனிமையை மையமாக வைத்து ஆனந்த விகடனில் அற்புதமான ஒரு சிறுகதை எழுதியிருந்தார் திருப்பூர் கிருஷ்ணன். ஒரு மடாதிபதியிடம் சென்று தனக்கு ஒரு ஆண் துணை வேண்டுமென்று கேட்பார். அதற்கு அந்த மடாதிபதி, மடத்துக்கு வந்து சேர்ந்த ஓர் அநாதைக் குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து, ‘இவனை வளர்த்து ஆளாக்கு. இவன் உனக்குத் துணையாக இருப்பான்’ என்று சொல்லி அனுப்புகிறார். அந்தக் கைம்பெண் சிந்தை தெளிவடைந்து செல்கிறாள் என்பது கதை. அதன் சாராம்சத்தை மறுதலித்து, கதைக்கு வேறு ஒரு புதிய முடிவைக் கொடுத்து, அடுத்த வாரமே ஞாநி ஒரு புதிய கதை எழுதித் தந்தார். அதுவும் அற்புதமாக இருந்தது. அவள் தேடி வந்தது உடம்பின் வேட்கையைப் போக்கக்கூடிய ஓர் ஆண் துணையை. மடத்தில் இருந்த ஒரு சீடருக்கும் உடலின் தேவை இருந்தது. தன்னால் மடத்தில் நீடிக்க முடியாது என்று சொல்லி, தன்னை அவளுக்குத் துணையாக்குங்கள் என்று குருவிடம் கேட்டுக்கொண்டு அவளோடு போகிறார் என்பது ஞாநி தந்த முடிவு. அதுவும் விகடனில் பிரசுரமாயிற்று. ஞாநியின் எழுத்தாற்றலுக்கும், வாதத் திறமைக்கும், கூர்மையான கவனிப்புக்கும் அந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம்.

கட்டுரைகளில் அவர் வைக்கும் வாதங்கள் பிரமிக்க வைக்கும். எங்கெங்கிருந்தோ நடைமுறை உதாரணங்களைத் தேடியெடுத்துச் சேர்ப்பார். கதாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், குறும்பட இயக்குநர், விமர்சகர், நாடகாசிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் ஞாநி.

ஒருமுறை, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடில்லாமல் காசு வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தபோது, விகடனில் ஞாநி அது சம்பந்தமாக எழுதிய கட்டுரையில், ‘இது ஒன்றும் புதிதல்ல; ஏற்கெனவே தீரர் சத்தியமூர்த்தியே இப்படி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் காசு வாங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்...’ என்கிற ரீதியில், பழைய ‘பாரத தேவி’ இதழிலிருந்து ஆதாரம் காட்டி எழுதியிருந்தார். அசந்து போனேன்!

என்னைவிட இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவராக இருப்பார் ஞாநி. ஆனால், அனுபவத்திலும் அறிவிலும் என்னைவிட இருபது, முப்பது மடங்கு மூத்தவர். அவருடைய பெரும்பாலான கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகிறேன். என்றாலும், அவருடைய ஒரு சில கருத்துக்களை என்னால் ஏற்க முடியவில்லை. வேண்டுமென்றே குற்றஞ்சாட்டுகிற மாதிரி, குதர்க்க வாதம் செய்கிற மாதிரிதான் அவை எனக்குத் தோன்றுகின்றன. விகடனில் ‘ஓ பக்கங்கள்’ எழுதி வந்த ஞாநி அதை நிறுத்திக்கொண்டு வெளியேற ஒருவகையில் நானும் ஒரு காரணம்!

இலக்கியக் கூட்டங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி! என்றாலும், ஞாநி நடத்துகிற கூட்டம் என்பதால்தான் ‘கேணிக் கூட்ட’ங்களில் கலந்து கொண்டேன். (சென்ற மாதக் கூட்டத்துக்குச் செல்லவில்லை.) அடுத்த கூட்டத்துக்கு அவரை நலம் விசாரிக்கவாவது அவசியம் செல்வேன்.

புத்தகச் சந்தைக்குப் போயிருந்தபோது, அங்கே பிரமாண்டமான ஃப்ளெக்ஸ் பேனரில் விஸ்வரூப ஞாநி சப்பணமிட்டு கம்பீரமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது, ‘இவருடைய நண்பன் நான்’ என்று மனசுக்குள் ஒரு சந்தோஷம் வந்து உட்கார்ந்துகொண்டது உண்மை. உடனேயே அவரை நேரில் சென்று சந்திக்கும் ஆவல் எழுந்தது.

ஞாநி மலர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என்று கேள்விப்பட்டு, அவருடைய செல்லுக்குத் தொடர்பு கொண்டேன். குழு உறுப்பினர் என்று சொல்லி, வேறு ஒரு நண்பர்தான் பேசினார். அறிமுகப்படுத்திக்கொண்டு, ஞாநியின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். “நலமாக இருக்கிறார்” என்றார். “அவரோடு பேச முடியுமா?” என்றேன். “இல்லை. அவருக்கு ஓய்வு தேவை என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் பத்மா எண்ணுக்கு வேண்டுமானால் போய் செய்து பேசுங்கள்” என்றார்.

எனக்கு ஞாநியுடன்தான் பேச வேண்டும்; அவரின் நலனை அவரின் கரகரத்த குரலில் கேட்க வேண்டும். எனவே, பத்மாவுக்கு போன் செய்யவில்லை.

நலமா ஞாநி? நாளைய ஞாயிறு கேணிக் கூட்டத்தில் சந்திப்போம்!

அன்புடன்,

உங்கள் நண்பன்,

ரவிபிரகாஷ்.

***
எதிரி ஒப்புக் கொள்வான்; நண்பனே வாதிடுவான்!

15 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ஞானி நலம் பெற உங்களோடு நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்!

Chitra said...

என்னைவிட இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவராக இருப்பார் ஞாநி. ஆனால், அனுபவத்திலும் அறிவிலும் என்னைவிட இருபது, முப்பது மடங்கு மூத்தவர்.........தங்களது தன்னடக்கமான வார்த்தைகள்............அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

selventhiran said...

ஞாநி துணிச்சல்காரர். அதிகார மையங்களை நோக்கி உரத்த குரலில் உண்மைகளைப் பேசும் நெஞ்சுரம் கொண்டவர். அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பின்னோக்கி said...

ஞாநி அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

பரிசல்காரன் said...

குணமடைய இந்த நண்பனுடைய வாழ்த்துகளையும் தெரிவியுங்கள்.

குப்பன்.யாஹூ said...

விகடனில் இருந்து ஞானி வெளியேற (வெளியேற்றப் பட) நீங்கள் காரணமா.

காமெடி பண்ணாதீங்க சார்.

கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம், ஸ்டாலினுக்கு பொறுப்புக்களை வழங்கலாம், ஒரு தந்தையாக கலைஞர், என்பது வயதை தொடும் ஒரு மனிதனாக கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்று எழுதிய ஒ பக்கங்கள் தான் காரணம்.

ஆளும் அரசரின் அன்பு கட்டளையை அப்படியே அமுல் படுத்தினார் விகடன் உரிமையாளர் பா சீனிவாசன்.
ஒ பக்கங்களுக்கு போடா போடப் பட்டது.

அதன் மூலம் பல வாசகர்களையும் விகடன் இழந்தது,

இருண்டு போன விகடனின் விற்பனைக்கு எஸ் ரா வின் சிறிது வெளிச்சம் தேவைப் பட்டது.

GNANI WILL BE ALRIGHT SOON AND WILL COME BACK WITH GREAT WRITING AS ALWAYS.

Rekha raghavan said...

ஞாநி விரைவில் குணமடைந்து அவரின் எழுத்துப் பணியை தொடர எல்லாம் வல்ல அந்த இறைவன் அவருக்கு அருள் புரிவாராக .

ரேகா ராகவன் .

ungalrasigan.blogspot.com said...

@ நன்றி கிருஷ்ணமூர்த்தி!

@ சித்ரா! உண்மைகளை ஒப்புக்கொள்ளும்போது அது தன்னடக்கமாகிவிடுகிறது! ஆனாலும், உண்மை உண்மைதான்! தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி!

ungalrasigan.blogspot.com said...

@ செல்வேந்திரன், ஞாநி குணமாகி அடுத்த கேணி கூட்டத்துக்கு வரும்படி SMS அனுப்பியிருக்கிறார்! :)

ungalrasigan.blogspot.com said...

@ பின்னோக்கி! பிரார்த்தனைகளுக்கு நன்றி! ஞாநி குணம் பெற்று வீடு திரும்பிவிட்டார். கவிஞர் சுகுமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் அடுத்த கேணி கூட்டத்துக்கு SMS மூலம் அழைப்பும் விடுத்திருக்கிறார்.

ungalrasigan.blogspot.com said...

@ நன்றி பரிசல்! (-காரன் என்று ஏக வசனத்தில் சொல்ல என்னவோபோல் இருக்கிறது!)

ungalrasigan.blogspot.com said...

@ திரு.குப்பன்_யாஹூ! \\அதன் மூலம் பல வாசகர்களையும் விகடன் இழந்தது// காமெடி பண்றது நீங்களா, நானா? பத்திரிகை என்பது எந்தத் தனி நபரையும் சார்ந்து இல்லை. அதிலும், ‘ஏபிசி’யில் தொடர்ந்து ஏழெட்டு வருடங்களாக முன்னணியில் இருந்து வரும் பத்திரிகையான ஆனந்த விகடனுக்கு எந்த ஒரு தனி நபரையும் சார்ந்து இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. போகட்டும், யூகங்கள் ஒப்புக்கொள்கிற மாதிரி இருக்கலாம்; நம்புகிற மாதிரி இருக்கலாம்; திருப்தியானதாகவும் இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் உண்மையாகவும் இருக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை தோழர் குப்பன்_யாஹூ!

அன்புடன் அருணா said...

ஞானி நலம் பெற உங்களோடு நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்.

PADMANABAN said...

நட்பின் இலக்கணமாக இந்த கண்ணியமான கடிதம் அமைந்து இருந்தது. வாழ்த்துக்கள் ரவி பிரகாஷ் .... விரைவில் ஞாநி நலம் பெறவேண்டும் , துணிச்சல் மிக்க எழுத்தாளர் ஞாநி.. விகடனும் துணிச்சலுக்கு குறை இல்லாத பத்திரிகை தான் .. சற்று நெறிமுறை புரிதல்களில் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விட்டார் ஞாநி என்று தான் கொள்ளவேண்டும்... அதற்காக பாரம்பர்யம் மிக்க விகடனை , நண்பர்கள் குறைத்து மதிப்பிட அவசியம் இல்லை .... காலம் மாறிக்கொண்டே இருக்கிறது , படிப்பவர்களை விட புரட்டுபவர்கள் கூடி விட்டார்கள் , படிப்பவர்களுக்கு வஞ்சனை இல்லாமல் விஷயம் தரும் விகடன் , புரட்டுபவர்களையும் ஏமாற்ற விரும்பவில்லை.

Ananya Mahadevan said...

என்ன ஒரு ஆழ்ந்த உருக்கமான கடிதம்? வாழ்க உங்கள் தோழமை. ஞானி குணமடைந்துவிட்டார் என்பது நல்ல செய்தி. தைரியமாக தன் கருத்தை வெளியிடுவதில் ஞானிக்கு நிகர் ஞானிதான். ஒரு முறை ஏதோ ஒரு நடிகையின் சர்ச்சையில் சுஜாதாவே கருத்து சொல்ல பயந்து கொண்டு, நான் என்ன ஞானியா என்று சொன்னதாக நினைவு. இவரைப்பற்றிய என்னுடைய ஒரு பழைய பதிவு இதோ http://ananyathinks.blogspot.com/2009/10/blog-post_2166.html
ஞானியின் நல்வாழ்விற்கு பிரார்த்திக்கும்.