நாஞ்சில் நாடனும் விகடனும் பின்னே நானும்!

 

நான் சிறுகதை எழுதத் தொடங்கிய புதிது. கல்கியில் தொடங்கிய என் எழுத்துப் பயணம் ஆனந்த விகடன், சாவி, குங்குமம், தினமணி கதிர் எனத் தொடர்ந்தது. ஒருமுறை என்னுடைய ஏழு சிறுகதைகள் அடுத்தடுத்து ஆனந்த விகடன் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரசுரத்துக்காகக் காத்திருந்தன. அடுத்ததாக விகடன் ஆசிரியரிடமிருந்து வந்த ஒரு கடிதம் என் மீது நெருப்பை அள்ளி வீசியது.

நான் விகடன் பரிசீலனைக்காக அனுப்பிய ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ என்னும் தலைப்பிலான சிறுகதை ‘தீபம்’ இதழில் நாஞ்சில் நாடன் எழுதியிருந்த ‘முரண்டு’ சிறுகதையை 100 சதவிகிதம் ஒத்திருப்பதாகச் சொல்லி, ‘அவர் வட்டார வழக்கில் எழுதியுள்ளார். நீங்கள் பிராமண நடையில் எழுதியுள்ளீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம். காப்பியடித்து எழுதியதோடல்லாமல் அதை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பியும் வைத்துள்ளீர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களின் மற்ற கதைகளையும் ஏன் நிராகரிக்கக் கூடாது?’ என்று கேட்டிருந்தார்.

நான் உடனே கோபமாக, ‘தீர்மானமே செய்துவிட்டீர்கள் நான் காப்பிதான் அடித்தேன் என்று. ‘அனுப்பியும்’ என்பதில் உள்ள ‘உம்’ என்னைக் குத்துகிறது. உங்களுக்கு எந்த விளக்கமும் அளிக்க நான் தயாராக இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என் கதைகள் அனைத்தையும் உடனே திருப்பிவிடுங்கள். எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. எழுத்துக் கடலில் ஒரு துளி குறைந்தால் இலக்கியத்துக்கு என்ன நஷ்டம்?’ என்று பதில் அனுப்பினேன்.

ஆனால், விகடன் ஆசிரியரோ ‘இலக்கியச் சிந்தனை’ தொகுப்புப் புத்தகம் ஒன்றை எனக்கு அனுப்பிவைத்து, ‘இதில் இடம்பெற்றிருக்கும் நாஞ்சில் நாடணின் ‘முரண்டு’ சிறுகதையைப் படியுங்கள். எங்கள் சந்தேகம் சரி என்று புரிந்துகொள்வீர்கள்’ என்று எழுதியிருந்தார். படித்தேன். அந்தக் கதையில் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான்; என் கதையிலும் ஒருவன் மனைவியின் பயத்தைப் போக்குவதற்காக கு.க. ஆபரேஷன் செய்துகொள்கிறான். இந்த ஒரு ஒற்றுமையைத் தவிர, கதையின் போக்கும் நோக்கும் வெவ்வேறு.

இதை என் கடிதத்தில் குறிப்பிட்டு, “நான் வசிப்பது ஒரு குக்கிராமத்தில். ஆனந்த விகடன், குமுதம், கல்கி ஆகிய மூன்று பத்திரிகைகள் தவிர வேறு பத்திரிகைகள் பற்றி எனக்குத் தெரியாது. ‘தீபம்’ என்றொரு பத்திரிகை வருவதையே உங்கள் கடிதத்தின் மூலம்தான் அறிகிறேன். இதையெல்லாம் என் விளக்கத்துக்காகச் சொல்லவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட என் சிறுகதைகளை தயவுசெய்து எனக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள். சந்தேக முள் ஒன்று தைத்துவிட்டால், அடுத்து நான் என்ன கதை அனுப்பினாலும் இதை இவன் சுயமாகத்தான் எழுதினானா, அல்லது எங்கிருந்தாவது சுட்டானா என்று உங்கள் மனத்தில் ஒரு சந்தேகம் நெருடிக்கொண்டே இருக்கும். இப்படியான நிலையில் ஆனந்த விகடனில் என் சிறுகதைகள் வெளியாவதை நான் விரும்பவில்லை. பெரும் இலக்கியவாதி நாஞ்சில் நாடனின் எழுத்தின் தரத்துக்கு நிகராக என் சிந்தனையும் இருந்திருக்கிறது என்கிற ஆத்ம திருப்தியோடு, என் சிறுகதைகளைத் தங்களிடமிருந்து திரும்பப் பெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று எழுதினேன்.

ஆனால், விகடன் ஆசிரியர் என் சிறுகதைகள் எதையும் திருப்பி அனுப்பவில்லை. “உங்கள் கதைகளை நாங்கள் திருப்பி அனுப்புவதாக இல்லை. அவை கட்டாயம் விகடனில் பிரசுரமாகும். உங்கள் மீது எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல், வழக்கம்போல் உங்கள் படைப்புகளை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பிக் கொண்டிருங்கள்” என்று எழுதியிருந்தார்.

அதன் பின்பே நாஞ்சில் நாடன் பற்றியும் அவரின் படைப்புகள் பற்றியும் நான் அறிந்துகொண்டேன்.

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர் நாஞ்சில் நாடன். நாஞ்சில் பிரதேச மக்களும் குமரி மாவட்டத்து மண்ணும் கலந்து உருவானவை இவரது படைப்புகள். இவரின் எழுத்துகளில் நகைச்சுவையும் சமூகத்தின் மீதான விமர்சனமும் கலந்து இழையோடும்.

இயற்பெயர் சுப்பிரமணியன். வேலை காரணமாகப் பல வருட காலம் மும்பையில் வசித்தவர். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.

இவரின் ‘தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்’ சிறுகதைத் தொகுதி, புகழ்பெற்றதொரு தொகுப்பு. இவரின் முதலும் முக்கியமுமான நாவல் ‘தலைகீழ் விகிதங்கள்’. இதைத்தான் இயக்குநர் தங்கர்பச்சான் ‘சொல்ல மறந்த கதை’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்தார். மிதவை, பேய்க்கொட்டு, சதுரங்கக் குதிரைகள், என்பிலதனை வெயில் காயும், எட்டுத் திக்கும் மதயானை என நாஞ்சில் நாடனின் பல நாவல்கள் பிரபலமானவை. இவரது ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்கு 2010-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

நாஞ்சில் நாடன் என்னைவிட 10 வயது மூத்தவர். அவரின் 73-வது பிறந்த நாள் இன்று.
(31.12.2020)

 

0 comments: