முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி!

மிகச் சிறந்த வைஷ்ணவ அறிஞரும் உபன்யாசகருமான வேளுக்குடி கிருஷ்ணன் பற்றி எனக்குத் தெரிய வந்தது, மிகச் சமீபத்தில்தான். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், கலைஞர் மு.கருணாநிதியின் 'போர்வாளும் பூவிதழும்' நாட்டிய‌ நாடக நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி கலந்துகொண்ட‌ அந்த விழாவில், அதே மேடையில், ஆச்சர்யப்படும் விதமாக, அரசியல் கலப்பில்லாத ஆன்மிகவாதிகளான திருச்சி கல்யாணராமனும், வேளுக்குடி கிருஷ்ணனும் கலந்துகொண்டு பேசியதை நாளேடுகளில் படித்தேன்.

கம்பராமாயணத்தில் வரும் 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்' என்கிற பாடலைப் பாடிய திருச்சி கல்யாணராமன், அந்தப் பாடலின் இறுதி வரியான 'அன்னவர்க்கே சரண் நாங்களே' என்பதை, கலைஞரைக் கைகாட்டி, அவருக்குச் சரண் நாங்கள் என்று ஜாடையாகக் குறிப்பிடும் விதமாகச் சொல்லி முடித்தார். அத்தோடு விட்டாரா? ஜால்ராவின் உச்சத்துக்கே போய், 'பிள்ளைக்குட்டி இல்லாதவர்களையெல்லாம் அம்மா என்று சொல்கிறார்கள்' என்று ஜெயலலிதாவையும் வம்புக்கு இழுத்தார்.

அடுத்துப் பேச வந்த வேளுக்குடி கிருஷ்ணன், இதற்கு நேர்மாறாக, தனி மனித புகழ்ச்சியோ, அரசியல் கலப்போ இன்றி, வைஷ்ணவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை மட்டும் அழகாகப் பேசி முடித்தார். மேடையிலேயே கலைஞர் அதை 'தேனினும் இனிய தமிழ்' என்று பாராட்டினாலும்கூட, தன்னை அவர் பாராட்டிப் புகழ்ந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே என்கிற ஆதங்கம் தாங்கவில்லை அவருக்கு. அதனால், "இந்த மேடையில் எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால் யார் யாரைச் சந்திக்க நேரிடுமோ என்கிற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கிறார்" என்று பூடகமாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பேசினார் கலைஞர்.

இந்த நிகழ்வுதான் எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஆரம்பப் புள்ளி. சக்தி விகடனில் 'கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்' எனும் தலைப்பில் அவரது சொற்பொழிவுகளைக் கட்டுரைத் தொடராகப் பிரசுரிக்கலாம என்கிற பேச்சு வந்தபோது, இணையத்தில் வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றிய தகவல்களைத் தேடிப் பிடித்துப் படித்தேன்.

சக்தி விகடனுக்குப் பொறுப்பேற்றிருக்கிறேனே தவிர, நான் ஆன்மிகவாதி அல்ல! திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்கள் தவிர, வேறு யாருடைய சொற்பொழிவுகளையும் நான் கேட்டது இல்லை. ஆன்மிகக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டு பேசுவதற்காகக் கம்பராமாயணம், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்பாவை, திருவெம்பாவை, வள்ளலார் பாடல்கள் போன்று ஒரு சில‌ ஆன்மிக இலக்கியங்களைப் படித்திருக்கிறேன். கடவுள்- அதாவது நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு என்கிற அளவில் நம்பிக்கை கொண்டவன். அந்தக் கடவுளை நம‌க்குப் பிடித்த மாதிரி ரூபத்தில் வணங்குவதற்கான சுதந்திரத்தையும், தேர்ந்தெடுத்துக்கொள்ள வசதியாகப் பல்வேறு வித கடவுளர் வடிவங்களையும் நமக்கு அளித்திருக்கிறது இந்து மதம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிவன், கிருஷ்ணன், முக்கியமாகப் பிள்ளையார் ஆகிய வடிவங்களை இறைச் சக்தியின் குறியீடுகள‌கக் கொண்டு வணங்கி வருகிறேன். எனக்குத் தெரிந்த‌ ஆன்மிகம் அவ்வளவுதான்! மிகச் சிறு வட்டம்.

வேளுக்குடி கிருஷ்ணன் பொதிகை சேனலிலும், விஜய் டி.வியிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றுவதைப் பின்னர் அறிந்து, நானும் சில நாட்கள் கேட்டேன். 'முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி' என்று ஒரு சொலவடை உருவாகுமளவுக்கு, அவரது பேச்சு அத்தனை ரசிக்கத்தக்கதாக இருப்பதையும், மிகப் பெரிய‌ ரசிகர் வட்டம் அவருக்கு இருப்பதையும் அறிந்தேன். வெளிநாடுகளுக்கும் பறந்து பறந்து சொற்பொழிவாற்றி, உலகமெலாம் தமிழின் இனிமையைப் பரப்பி வருகிறார் வேளுக்குடி.

இவரின் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை. இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேசவேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை இவருக்கு. அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ, அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப் பாண்டித்யம்!

ஒருமுறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள், 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்" என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டிவிட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர். ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்ததுபோல், அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

"தலையை மொட்டை அடித்துக்கொள்வது எதற்குத் தெரியுமா? நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான். ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டால் மொட்டையடித்துக் கொள்வான். இவன் அவனிடத்தில் தோற்றுவிட்டான் என்பதற்கான அடையாளம் அது. திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு? ‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’ என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு. அப்படிச் செய்துவிட்டானானால், அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும். இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன், வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி, ‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும், இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச் செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’ என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிவிட்டார்.

இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு ‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.

நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார்திருநகரியில், அவர் அருளிச் செய்த திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். இது ஒரு சாதனை!

இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின் பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60. சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உபன்யாசம் செய்துகொண்டு இருந்தார். மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக்கொண்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப் பரிசோதித்துவிட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள். ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.

1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி 30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர். அதை முடித்துவிட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார். அங்கே ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது. அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்துவிட்டு, பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார். ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்; அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!

***
கடவுள் இல்லாமல் உங்களால் செயல்பட முடியாது; நீங்கள் இல்லாமல் கடவுள் செயல்பட மாட்டார்!

10 comments:

எல் கே said...

நல்ல தகவல்கள்

கணேஷ் ராஜா said...

சக்தி விகடனில் வேளுக்குடி கிருஷ்ணன் எழுதி வரும் தொடர் கட்டுரையை தொடர்ந்து படித்து வருகிறேன். அவரின் தந்தை பற்றிய அபூர்வமான தகவல்களைத் தொகுத்து அளித்திருந்தது சிறப்பாக இருந்தது. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்கிற பழமொழிதான் சட்டென்று என் நினைவுக்கு வந்தது.

பத்மநாபன் said...

இங்கு விஜய்யும் பொதிகையும் வருவதில்லை ...ஊருக்கு வந்தால் வேளுகுடிக்கு அப்புறம் தான் காப்பி குடிக்கும் வழக்கம் வைத்துள்ளேன் ...கலைஞர் கலந்துகொண்ட விழாவில் இருவர் பேசியதும் சுவாரஸ்ய தகவல்கள்....

கிருபாநந்தினி said...

வெகு நாளைக்குப் பிறகு வந்துள்ளேன் சார்! இனிமேல்தான் அனைவரது பதிவுகளையும் படிக்க வேண்டும். வேளுக்குடி கிருஷ்ணன் பற்றிய இந்தப் பதிவு ரொம்ப நல்லாருக்கு. வேளுக்குடி வரதாச்சாரியர் படம் பதிவிட்டிருந்தீங்கன்னா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்.

ungalrasigan.blogspot.com said...

@ நன்றி எல்கே!

@ நன்றி கணேஷ்ராஜா!

@ நன்றி பத்மநாபன்!

@ நன்றி கிருபாநந்தினி! வேளுக்குடி வரதாச்சாரியர் படம் கிடைக்கவில்லை!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வேளுக்குடி ‘புலிக்குப் பிறந்த புலி’ என்று சொல்வது போல் இருந்தது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

’கடவுள் இல்லாமல் நீங்கள் செயல் பட முடியாது.. நீங்கள் இல்லாமல் கடவுள் செயல் பட மாட்டார்’என்று நீங்கள் எழுதியதைப் பார்த்ததும் என்னுள் முகிழ்த்த கவிதை!
..சதுர்த்தியன்று அனைவருக்கும்,
அருள் பாலித்த பிள்ளையார்,
பாலீதீன் பைக்குள் அடுத்த நாள்!
பயத்துடன் அவர் பார்க்க,பக்தன்
ஆற்றில் தொப்பென்று போடாமல்,
அரச மரப் பிள்ளையாருக்கு,
அருகில் அவரை வைத்து,
அழகு பார்த்தான் அன்புடனே!!

BalHanuman said...

அருமையான தகவல்கள்....

pvr said...

எத்தனை அற்புதமான மனிதர் நீங்கள்.
ஏன் இதுவரை உங்களைத் தெரிந்துக் கொள்ளவைல்லை?

dondu(#11168674346665545885) said...

வேளுக்குடி கிருஷ்ணன் பற்றிய எனது பதிவு, http://dondu.blogspot.com/2010/08/blog-post_15.html

அதிலிருந்து சிலவரிகள்:

“வேளுக்குடி கிருஷ்ணன், தனிமனித புகழ்ச்சி, அரசியல் கலப்பின்றி வைணவம் தமிழுக்கு செய்த தொண்டை மட்டும் ஆழ்ந்த கருத்துக்களுடன் அழகாக பேசி முடித்தார். இது ஒரு ஆன்மிக பேச்சாளர், எப்படி பேச வேண்டும் என மற்றவர்களுக்கு பாடம் எடுப்பது போல் இருந்தது. அவரின் பேச்சை, அரங்கில் இருந்த தீவிர நாத்திகவாதிகள், தமிழக அமைச்சர்கள் என அத்தனை பேரும் ரசித்து கேட்டனர். பல்வேறு அரசியல் மேடைகளைக் கண்ட தி.மு.க., முன்னணிப் பிரமுகர்களும், வேளுக்குடியின் பேச்சில் சொக்கியிருந்ததை, அவையில் நிலவிய நிசப்தமும், அவர் பேசி முடித்ததும் எழுந்த கரகோஷமும் உணர்த்தியது.

சப்தம் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. வேளுக்குடியின் பேச்சின் மத்தியில் ஒரு நாதாறி தனது செல்ஃபோனில் உரக்கப் பேசியது வேறு பதிவாகியிருந்தது திருஷ்டிப் பரிகாரமே.

மற்றப்படி வேளுக்குடியை போல நான்கு பேர் வந்தாலே போதும், பல புகழ் போதைகள் இறங்கி விடும்”.

அன்புடன்,
டோண்டு ராகவன்