‘கிழிஞ்சுது கிருஷ்ணகிரி! பதிவு எழுதியே ரொம்ப நாளாகுது!’ என்கிறீர்களா? அதுவும் சர்த்தான்! அலுவலக வேலைப் பளு, நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம் போன்ற விசேஷங்களுக்காக அடிக்கடி வெளியூர் போகவேண்டி வந்தது போன்ற காரணங்களால் பதிவு எழுத முடியவில்லை. மற்றவர்களின் பதிவுகளையும் பார்க்க முடியவில்லை.
திருமண நிகழ்ச்சிகளுக்காக மட்டுமின்றி, சில நாட்களுக்கு முன்னால் ‘சுட்டி விகடன்’ நிகழ்ச்சிக்காகவும் ஒருமுறை திருச்சி சென்று வந்தேன். சுட்டி விகடனில் மாணவ நிருபர்களாகத் தேர்வானவர்களுக்குச் சிறுகதை எழுதும் சூட்சுமம் பற்றி அந்த விழாவில் நான் பேசினேன். ஆண்டுக்கு ஒருமுறை சென்னையிலும் திருச்சியிலுமாக நடைபெறும் இந்த சுட்டி விழாவில் நான் கலந்துகொண்டு பேசுவது இது மூன்றாவது முறை.
முந்தின இரண்டு ஆண்டுகளைவிட, இந்த முறை சுட்டிகள் என்னை ரொம்பவே மிரட்டிவிட்டார்கள். அடேங்கப்பா..! எத்தனைப் புத்திசாலித்தனம்... எவ்வளவு கற்பனை... எத்தனை ஆற்றல்! இளம் தலைமுறையினரை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு நாம் எதுவும் புதிதாகக் கற்றுத் தரவேண்டிய அவசியமில்லை. உண்மையில், அவர்களின் வேகத்துக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது என்பதே உண்மை. அவர்களின் போக்கில் குறுக்கிடாமல், அவர்களின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடாமல், சரியான பாதையில் அவர்களைத் திசை திருப்பிவிடுவதே நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய உபகாரம். சுட்டி விழாவில் நான் அனுபவபூர்வமாகக் கண்ட உண்மை இது!
ஓர் உதாரணம் சொல்கிறேன். “நம்மைச் சுற்றி நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும், அதைக்கொண்டு ஒரு சிறுகதை எழுதிவிடலாம். உதாரணமாக, வீட்டில் நம் அம்மா காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு, பால் கவர் வாங்கி வந்து காபி போட்டு, பிள்ளைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பி... என நாள் முழுக்க அம்மா செய்கிற காரியங்களை வரிசையாக எழுதிவிட்டு, அன்றைக்குக் காலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி வந்து வீட்டில் உள்ள ஒவ்வொருவர் பற்றியும் அப்பாவிடம் விசாரிக்கும்போது, ‘உங்க வொய்ஃப் வேலைக்குப் போறாங்களா?’ என்று கேட்கையில், ‘இல்ல... வேலை செய்யல! சும்மாதான் இருக்கா. ஹவுஸ் வொய்ஃப்!’ என்று சொல்வதாகக் கதையை முடிக்கலாம்” என்று பேசியபோது, அதில் உள்ள மெஸேஜைப் புரிந்துகொண்டு பலமாகக் கையொலி எழுப்பிக் குதூகலித்தார்கள் குழந்தைகள்.
இன்னொன்று... நம் பாடங்களில் படித்ததைக் கொண்டும் சிறுகதை எழுதமுடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு கதை சொன்னேன். ஒரு நிறுவனத்தில் நடக்கும் இன்டர்வியூவில் கலந்துகொள்ளும் ஒருவன், அவர்கள் கேட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கெல்லாம் டாண் டாணென்று பதில் சொல்லி அசத்துகிறான். அவன் வீட்டில் இருக்கும்போது, ஒரு கூரியர் ஆசாமி வந்து, அந்த ஃப்ளாட்டில் உள்ள ஒருவரைப் பற்றி விசாரிக்க, தெரியவில்லை என விழிக்கிறான் என்பதாக ஒரு கதை எழுதலாம் என்று சொன்னேன். உடனே ஒரு மாணவன் எழுந்து, “அதாவது சார், ஊர் உலக விஷயமெல்லாம் தெரிஞ்சிருக்கிற ஒருத்தனுக்குத் தன்னைச் சுற்றி நடக்குறது தெரியலே என்கிற மெசேஜ் இதுல இருக்கு, இல்லியா சார்?” என்று கேட்டான். “பக்கத்து ஃப்ளாட்டுல இருக்கிறவங்களைக்கூட தெரிஞ்சுக்க முடியாம, அடுத்தவங்களைப் பத்தின அக்கறையோ அனுசரணையோ இல்லாம, ஒவ்வொரு மனிதனும் தனித் தனித் தீவாயிட்டான்கிற கருத்து இதுல இருக்கு சார்!” என்றான் இன்னொரு மாணவன்.
இதையெல்லாம்விட என்னை அசத்தியது அவர்களின் கல்வியறிவு. மேற்படி கதையில், இன்டர்வியூவில் கேள்விகள் கேட்கிற இடத்தில் நானே சில கேள்விகளை எழுப்பினேன். ‘ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் யார்?’, ‘முதல் உலகப் போரின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் யார்?’ என்று இன்டர்வியூவில் கேள்விகள் கேட்கப்படுவதாகக் கதை சொன்னபோதே, அந்தக் குறிப்பிட்ட கேள்விகளுக்குச் சுட்டிகள் டாண் டாணென்று சரியான பதில்களைச் சொல்லி அசத்திவிட்டார்கள். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீன் மூன்; முதல் உலகப் போரின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன். சுட்டிகளிடம் பேசுவதற்காக நான் இந்தக் கேள்வி பதில்களைத் தயார் செய்துகொண்டு போயிருந்தேன். ஆனால், நான் கேட்ட அத்தனைப் பொது அறிவுக் கேள்விகளுக்கும் அந்தக் குழந்தைகள் சரியான பதில்களைச் சொன்னதும் நான் ஆடிப் போனேன். பிரமிப்பின் உச்சியைத் தொட்டேன்.
இன்றைய குழந்தைகள் மகா புத்திசாலிகள்! அவர்களைச் சரியான முறையில் வழிநடத்துவது மட்டும்தான் நம் வேலை!
பொதுவாகவே, ஏதேனும் வித்தியாசமாக ஒரு விஷயத்தைப் பார்த்தால், உடனே அதில் உள்ள சிறப்பம்சம் என்ன தெரியுமா என்று என் குழந்தைகளிடம் கேட்டு, அவர்களின் சிந்தனா சக்தியைத் தூண்டுவது என் வழக்கம்.
சமீபத்தில், என் பெயருக்கு ‘முதன்மைப் பொறுப்பாசிரியர், சக்திவிகடன்’ என முகவரியிட்டு ஒரு கவர் வந்தது. வேறொன்றுமில்லை; அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் இருந்து வந்திருந்த விபூதி, குங்குமப் பிரசாதம்தான் அது! அந்த உள்ளடக்கப் பொருளையும் கவரையும் பார்த்ததும், எனக்கு அதன் முரண்பாடு சுவாரசியமூட்டியது. அந்த கவரை வீட்டுக்குக் கொண்டு வந்து, என் குழந்தைகளிடம் காட்டி (காலேஜ் போகிற என் மகளும், ப்ளஸ் ஒன் படிக்கிற என் மகனும் இன்னும் எனக்குக் குழந்தைகளாகவே தெரிகிறார்கள். என்ன செய்ய?) “இதைப் பார்த்ததும் சட்டுனு உங்களுக்கு என்ன தோணுது?” என்று கேட்டேன். சற்றே யோசித்துவிட்டுப் பின்பு புரிந்துகொண்டு சிரித்தார்கள். வேறொன்றுமில்லை. கவரின் மேல் ஒட்டப்பட்டிருந்தது பெரியார் ஸ்டாம்ப்.
அதேபோல, நேற்றைக்கு என் வீட்டு வாசலில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் முகபடாமில் (முகபடாம் என்பது யானையின் நெற்றியில் படர்ந்திருக்கும் அலங்காரப் பட்டை. திருச்சூர் ஆடிப்பூர விழாவில் கலந்துகொள்ளும் யானைகளுக்கு முகபடாம் இருப்பதைப் பார்த்திருக்கலாம். சில பைக்குகளுக்கும் ஹெட்லைட்டுக்கு மேலே முகபடாம் இருப்பதுண்டு.) அந்த வண்டிக்குச் சொந்தக்காரனான இளைஞனின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ஏ.எம்.ரவிவர்மா என்கிற அந்தப் பெயரைப் பார்த்ததுமே, அதில் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் இருப்பதாக என் மனசுக்குத் தோன்றியது. கொஞ்சம் உன்னித்து அதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ‘அட!’ என்று வியந்துபோனேன்.
உடனே, என் மகளை அழைத்துக்கொண்டு வாசலுக்கு வந்து அதைக் காண்பித்து, “அந்தப் பெயரில் உள்ள சிறப்பம்சம் என்னவென்று தெரிகிறதா?” என்று கேட்டேன். சில நிமிடங்கள் அதைப் பார்த்து யோசித்தவள், ‘அட! ஆமா..!’ என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டாள். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
‘அதெல்லாம் சரி! புத்தகப் பரிசு வழங்கி ரொம்ப நாளாகிறது என்று ஆரம்பித்த ஜோரைப் பார்த்தால், புதிதாக ஏதாவது போட்டி வைத்துப் பரிசு கொடுக்கப் போகிறீர்களோ என்று நினைத்தோம். அதைப் பற்றிப் பேச்சே எடுக்காமல், எங்கோ போய்விட்டீர்களே?’ என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது.
இதோ போட்டி... பைக்கில் எழுதப்பட்டிருந்த ஏ.எம்.ரவிவர்மா என்ற பெயரில் அப்படி என்ன சிறப்பு? உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? உடனே உங்கள் பதில்களை எனக்குப் பின்னூட்டம் இடுங்கள். முதலில் வரும் சரியான பதிலுக்கு எனது ‘ஏடாகூடக் கதைகள்’ சிறுகதைத் தொகுதியைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன். உங்கள் பின்னூட்டங்களை வருகிற திங்கள் கிழமை 12-ம் தேதியன்று இரவில்தான் பதிவிடப்போகிறேன் என்பதால், அதுவரை உங்கள் விடைகளை அனுப்பிக்கொண்டு இருக்கலாம்.
செவ்வாய்க்கிழமை காலையில் பின்னூட்டங்களைப் பார்த்து, சரியான விடையை முதலில் எழுதியவர் யாரோ, அவர் தன் இந்திய அஞ்சல் முகவரியை உடனடியாக என் இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) அனுப்பிவைத்தால், அடுத்த இரண்டே நாளில் ‘ஏடாகூடக் கதைகள்’ புத்தகம் அவர் கைக்குக் கிடைக்கும்.
***
ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை; ஒவ்வொரு மேதையும் ஒரு குழந்தை!
ஒவ்வொரு குழந்தையும் ஒரு மேதை; ஒவ்வொரு மேதையும் ஒரு குழந்தை!
21 comments:
A.m.ravivarma எப்படிப் படித்தாலும் (இடமிருந்து வலம் ,வலமிருந்து இடம்) வருவது A.m.ravivarma!! சரியா!!
Fairly simple, I think. It is a palindrome (ie) it reads the same in either direction. Malayalam is another example.
a.m.ravivarma என்பது ஒரு Palindrome - திருப்பிப் படித்தாலும் a.m.ravivarma என்றே வரும் :)
- என். சொக்கன்,
பெங்களூரு.
A.m.Ravivarma - this name is a Palindrome. எப்படி படித்தாலும் ஒரே மாதிரி வரும்.
A.M. RAVIVARMA is palindrome.
ஏ.எம்.ரவிவர்மா என்ற பெயரை திருப்பி எழுதினாலும் அதே பெயர் தான் வரும்
ஏ.எம்.ரவிவர்மா எழுத்தைத் திருப்பிப்போட்டாலும் அதே பெயர்தான் வரும்
AMRAVIVARMA
Subramanian
ஏ.எம்.ரவிவர்மா என ஆங்கிலத்தில் படித்தாலும், அதையே வலமிருந்து இடமாக படித்தாலும் அதேதான் வருகிறது.
ஜெ. பாபு
கோவை - 20
ஏ.எம்.ரவிவர்மா என ஆங்கிலத்தில் படித்தாலும், அதையே வலமிருந்து இடமாக படித்தாலும் அதேதான் வருகிறது.
ஜெ. பாபு
கோவை - 20
sargunancbe@rediffmail.com
குழந்தைகள் எப்பவுமே புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை சரியாக புரிந்து கொள்வதில்லை. அருமையான பதிவு..
நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கான விடை.
ஏ.எம்.ரவிவர்மா என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால். அதை இடமிருந்து வலமாக படித்தாலும், வலமிருந்து இடமாக படித்தாலும் ஏ.எம்.ரவிவர்மா என்றுதான் வரும். இதைப்பற்றி சுஜாதா தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பார். தமிழில் கூட அத்தகைய சில முயற்சிகள் உண்டு.
மாமர சிலை சிரமமா..
மாலா போலாமா..
இவை சில உதாரணங்கள்.
manikandavel@gmail.com
www.kavithaikadhalan.blogspot.com
அன்புடன் வணக்கம் , அநேகமாக கடவுளார்களின் படங்களை விதி முறைப்படி வரைந்த பிரபல ஓவியர் மகாராஜா ரவிவர்மா அவர்களின் பெயர் ஞாபகம் வந்திருக்கலாம் .....
ரவிவர்மா பேருக்கு தகுந்த மாதிரி கலை நுனுக்கமா படம் போட்டிருப்பார் அதில் ஒரு வேளை அதானே சார்..!!இல்லாட்டி பேரையே ஸ்டைலா எழுதினாரா..?
AM RAVIVARMA - இதை வலமிருந்து இடமாக படித்தாலும் அதே பெயர் வரும்படி அமைந்திருக்கிறது.
ஏ.எம். ரவி வர்மாவுக்கு முன் ஆங்கில எழுத்து ஐ போட்டால், ஐயாம் ரவி வர்மா என்று ஆகும்.
அருமையான புதிர் சார். A.M.Ravivarma (a,m.ரவிவர்மா) என்பது பாலின்ட்ரோம் (palindrome) வகையிலான சொல்.(பெயர்) Example : Malayalam,Madam
A M RAVIVARMA - இது ஒரு Palindrome பிண்னாலிருந்து படித்தாலும் அதுவேதான். -ஆர். (பரிசுப் புத்தகம் பின்னால் வாங்கிக்கொள்கிறேன்!!!)
-ஆர்
பதிவு எழுதி, அதைக் கொண்டே போட்டி வைக்கும் உங்கள் சாமர்த்தியத்தை வியக்கிறேன். உங்கள் கேள்விக்கான பதில்: அந்தப் பெயர் பாலிண்ட்ரோம் வகையைச் சார்ந்தது. அதாவது, ஆங்கிலத்தில் அதை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் எப்படிப் படித்தாலும் ஏ.எம்.ரவிவர்மா என்றே வரும்.
Its a palindrome like malayalam
பின்னூட்டம் மூலம் விடைகளை அனுப்பிப் போட்டியில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் என் நன்றி!
இடமிருந்து வலம், வலமிருந்து இடம் எப்படிப் படித்தாலும் AMRAVIVARMA என வரும் பாலிண்ட்ரோம் வகையிலான பெயர் அது என்பதே அப்பெயரின் சிறப்பு. இந்தச் சரியான விடையை முதலாவதாக அனுப்பிப் புத்தகப் பரிசு பெறுபவர் அன்புடன் அருணா.
என் இ-மெயில் முகவரிக்கு உங்கள் இந்திய அஞ்சல் முகவரியை அனுப்பினால் நாளையே கூரியர் மூலம் எனது ‘ஏடாகூடக் கதைகள்’ புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.
விடை ஏற்கனவே தெரிந்திருந்தாலும்... சும்மா வித்தியாசமா ஒன்னு சொல்றேன்... (இதுக்கு ரொம்ப யோசிக்கணும் ;-) என்னை மாதிரி)
ரவி என்பது சமஷ்கிருத சொல். அதன் அர்த்தம் - உதிக்கும் சூரியன்.
A.M - என்பது ஆங்கிலத்தில் காலை நேரத்தை குறிப்பது.
A.M. ரவிக்குமார் - காலை சூரிய உதயம் / காலையில் சூரிய உதயம் வருமா (வர்மா)
:-))
This is a good idea oof asking a simple puzzle to answer, definitely you will get more feedbacks..
Post a Comment