ஈன்றபொழுதின்...

ன் முதல் குழந்தை ஷைலஜா பிறந்தபோதும், அடுத்ததாக மகன் ரஜ்னீஷ் பிறந்தபோதும் எனக்கு உண்டான சந்தோஷத்துக்கு ஈடான சந்தோஷம் வேறில்லை என்றுதான் நான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன், அதே அளவிலான சந்தோஷ மனநிலை எனக்கு வாய்த்தது.

‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாயி’ன் மன நிலை அது.

எத்திராஜ் கல்லூரியில், விஸ்காம் படிப்பில் மகளைச் சேர்த்த தினம் அது.

ஒரு வாரத்துக்கு முன் நுழைவுத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டாள் என் மகள். மறுநாள் நோட்டீஸ் போர்டில், தேர்வானவர்கள் பட்டியலில் அவள் பெயரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னால் கல்லூரிக்குச் சென்று பணம் கட்டிவிட்டு வந்தபோது, மிக மிகச் சந்தோஷமாக இருந்தது.

நேற்றுத்தான் பிறந்த மாதிரி இருக்கிறது; அதற்குள் கல்லூரியைத் தொட்டுவிட்டாள் என் மகள்.

அவள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கு முன்பாக, ஆனந்தவிகடனில் ‘பொக்கிஷம்’ பகுதிக்காக 1973-ம் வருடத்திய இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, எத்திராஜ் கல்லூரி பற்றிய குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது. ‘எத்திராஜ் கல்லூரி பற்றி உனக்கு என்ன தெரியும்?’ என்று ஒருக்கால் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டால், இந்தக் குறிப்பைச் சொல்லி அவர்களை அசர வைக்கும்படி என் மகளிடம் சொல்லியிருந்தேன். அப்படி எதுவும் கேள்வி வரவில்லை என்றாள்.

சரி, அப்படி என்ன குறிப்பு அது?

1973-ம் ஆண்டுதான் எத்திராஜ் கல்லூரி வெள்ளிவிழா கொண்டாடியது. அதாவது, 1948-ல் தொடங்கப்பட்ட கல்லூரி அது. வெள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டவர் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி.

அந்த விழா மேடையில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு கவரை இந்திரா காந்தியிடம் தந்திருக்கிறார். இந்திரா அதை வாங்கி, எதிரே இருந்த டீபாய் மீது வைக்க, ஃபேன் காற்றில் அது அங்கிருந்து பறந்துபோய் எங்கோ விழுந்துவிட்டது. பதறிப்போன இந்திரா, அது எங்கே என்று சுற்றுமுற்றும் தேட, அது கண்ணிலேயே படவில்லை. யாராவது அதை எடுத்துத் தருவார்களா என்று இந்திராவின் கண்கள் அலைபாய்ந்திருக்கின்றன. ஆனால், இந்த நிகழ்வை வேறு யாருமே கவனித்ததாகத் தெரியவில்லை. முன் வரிசையில் இருந்த புகைப்படக்காரர்களும் மும்முரமாகப் படம் பிடிப்பதில் ஈடுபட்டிருந்தார்களே தவிர, கவர் பறந்து போனதை ஒருவருமே பார்க்கவில்லை. ‘சரி, போகட்டும். என்ன கவரோ...’ என்று விட்டுவிட்டார் இந்திரா.

அடுத்துப் பேச எழுந்த அருட்செல்வர் மகாலிங்கம், “... இப்போது ரூ.10,000 நன்கொடையை நமது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் வழங்குவார்...” என்று பேச்சினூடே மைக்கில் அறிவித்தபோதுதான், அவர் தன்னிடம் கொடுத்தது அந்த 10,000 ரூபாய்க்கான செக்தான் என்று புரிந்தது இந்திராவுக்கு.

பிறகு, பரபரப்பாக மேடையில் தேடி, அந்த கவரைக் கண்டுபிடித்து எடுத்து வந்து இந்திராவிடம் கொடுக்க, அவர் வாங்கி எத்திராஜ் கல்லூரிக்கு வழங்கினார்.

இந்த விஷயம்தான் சிறு குறிப்பாக விகடனில் வெளியாகியிருந்தது.

தவிர, எத்திராஜ் கல்லூரி தொடர்பாக வேறு ஒரு சுவாரஸ்ய தகவலையும் கேள்விப்பட்டேன்.

ந்தக் கால சூப்பர்ஸ்டார் ஏழிசை வேந்தன் எம்.கே.டி. பாகவதரைப் பற்றியும், மக்களிடம் அவருக்கு இருந்த அபரிமிதமான செல்வாக்கு பற்றியும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அவர் கைதானது பற்றியும், அவரோடு சேர்த்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைதானது பற்றியும், பின்னர் இருவரும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றது பற்றியும் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

இருவரும் சிறைத் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே அந்த வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களுக்காக வாதாடினார் ஒரு வழக்கறிஞர். தம்முடைய சாதுர்யமான வாதத் திறமையால், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்தார். இரண்டு ஆண்டு சிறைவாசம் முடிந்த நிலையில் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தமக்காகத் திறமையாக வாதாடி விடுதலை வாங்கித் தந்த நன்றிக் கடனுக்காக, அந்த வழக்கறிஞரின் வீடு தேடிச் சென்று, ஒரு தங்கத் தட்டு நிறைய தங்கக் காசுகளை வைத்து, அவரிடம் நீட்டி, அவசியம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார் எம்.கே.டி. பாகவதர். ஆனால், வாங்க மறுத்துவிட்டார் அந்த வழக்கறிஞர். “உங்கள்மீது உள்ள அபிமானத்தால்தான் வாதாடினேனே தவிர, பொற்காசுகளுக்காக இல்லை” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அந்த வழக்கறிஞர்தான், எத்திராஜ் கல்லூரியை நிறுவிய எத்திராஜ முதலியார்.

சென்னையில் பல கல்லூரிகள் விஸ்காம் படிப்பு சொல்லித் தருகின்றன. டாப்-10 கல்லூரிகள் பற்றிய செய்திக் குறிப்பை ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ வெளியிட்டிருந்தது. அதில், விஸ்காம் படிப்பைப் போதிப்பதில் முதல் இடம் பிடித்திருந்த கல்லூரியாக எத்திராஜ் கல்லூரியைத்தான் சிறந்த கல்லூரியாக அது குறிப்பிட்டிருந்ததைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது.

‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை
நற்கல்லூரியில் சேர்த்த தந்தை’யானேன்!

***
ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதால் மட்டும் சிறந்த பெற்றோர் ஆகிவிட முடியாது. வீட்டில் பியானோ இருந்தால், பியானோ கலைஞராகிவிட முடியுமா?

18 comments:

SRK said...

மகளுக்கு வாழ்த்துக்கள்! அருட்செல்வர் நிறுவனத்தில்தான் ஆறு ஆண்டுகளுக்கு மேல் படித்து வந்தேன்.

CS. Mohan Kumar said...

அருமை. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள். குறளில் வரும் முதல் வரியில் " மகனை" மகளாக மாற்றியது பெரும் மகிழ்ச்சி

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள்!

நா.இரமேஷ் குமார் said...

வாழ்த்துகள் சார்... கண்முன்னே குழந்தைகள் வளர்வதைப் பார்ப்பது தனி சந்தோஷம்...

Deepan Mahendran said...

//ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதால் மட்டும் சிறந்த பெற்றோர் ஆகிவிட முடியாது. வீட்டில் பியானோ இருந்தால், பியானோ கலைஞராகிவிட முடியுமா?

//

- நச்...!!!

Chitra said...

‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை
நற்கல்லூரியில் சேர்த்த தந்தை’யானேன்!

...... It is a great blessing!

:-)

butterfly Surya said...

சுவாரசியமான தகவல்களுக்கு நன்றி சார்.

ஷைலாஜாவிற்கு வாழ்த்துகள்.

கணேஷ் ராஜா said...

உங்கள் மகளின் படிப்பு பற்றி சொல்ல வந்த நீங்கள், அவங்க சேர்ந்திருக்கும் எத்திராஜ் கல்லூரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் இயல்பாக சேர்த்துக் கொடுத்து பதிவை சுவாரசியப்படுத்திவிட்டீர்கள்!

ஜீவி said...

'விஷூவல் கம்யூனிகேஷன்'-- பற்றிய படிப்பு தானே இந்த விஸ்காம்? இதைத் தான் தமிழில் 'காட்சி ஊடகவியல்' என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.

எதிர்கால பயன்பாட்டிற்குரிய நல்ல துறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர் கள்.. ஆர்வத்துடன் படிக்கட்டும். ஆசிகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த பதிவில் ஒரு visual communication effect இருந்தது.பெண்ணை இந்த VISCOM கோர்ஸில் சேர்த்ததால் இருக்குமோ?

கடுகு said...

ஷைலஜாவுக்கு வாழ்த்துக்கள்! அவளுக்கு இந்தத் துறையில் நாட்டம் இருப்பதால் அவள் நிச்சயம் SHINING ஷைலஜாவாக வருவாள்!
- பி.எஸ்.ஆர்

ungalrasigan.blogspot.com said...

+ வாழ்த்துக்களுக்கு நன்றி எஸ்.ஆர்.கே.

+ உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் மோகன்குமார்!

+ அருணாவுக்கு அன்புடன் நன்றிகள்!

+ வாழ்த்துக்களுக்கு நன்றி ரமேஷ்குமார்!

+ நன்றி சிவன்!

+ மிக்க நன்றி சித்ரா!

+ வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி பட்டர்ஃப்ளை சூர்யா!

+ நன்றி கணேஷ்ராஜா! கல்லூரி பற்றிய தகவல்கள் அந்தச் சமயத்தில் யதேச்சையாகக் கண்ணில் பட்டவை; காதில் விழுந்தவைதான்! இப்படிப் பலமுறை எனக்கு நடந்திருக்கிறது.

+ ஆசிகளுக்கு மிக்க நன்றி ஜீவி!

+ ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி! தங்கள் பாராட்டே புதுமையாக, வித்தியாசமான கோணத்தில் உள்ளது. அதற்கு என் நன்றி!

+ கடுகு சார்! தங்களைப் போன்ற பெரியவர்களின் வாழ்த்தும் ஆசிகளும்தான் குழந்தை ஷைலஜாவின் முன்னேற்றத்துக்கான அஸ்திவாரம்! மிக்க நன்றி சார்! SHINING ஷைலஜாவாக வருவாள் என்கிற தங்கள் ஆசி பலிக்கும். அவள் ‘SHYலஜா’வாக ஆகிவிடக்கூடாது என்றுதான், அவள் பெயரை 'SHAIலஜா’ என்று வைத்தேன்! :)

பத்மநாபன் said...

``என் டயரி`` இன்று தான் பிரிக்கமுடிந்தது...மகள் ஷைலஜா விற்கு விஸ்காம் சிறப்பாக படிக்க நல்வாழ்த்துக்கள்.உங்கள் மகள் /மகன் திறமைகளை உங்கள் வலைப்பூ வடிவமைப்பிலேயே தெரிந்து கொண்டோம்.எத்திராஜ் பற்றி சுவராஸ்யமான தகவல்கள் அருமை. பின்னூட்டத்தில் கடுகார் / உங்கள் வார்த்தை விளையாட்டுக்கள் சூப்பர்.

thatscoolsuresh said...

ஷைலாஜாவிற்கு வாழ்த்துகள்........

மீடியா சார்ந்த படிப்பு.
அடுத்தவருட விகடன் மாணவ பத்திரிக்கையாளர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

இதை கண்டிப்பாக miss பண்ணிடாதீங்க... ஆகச்சிறந்த வாய்ப்பு அது....

ரவி சார்..முகம் தெரியாத நபர்களையெல்லாம் ஆளாக்கி விடறீங்க.... உங்க daughter....பார்த்து பண்ணுங்க!!!!!!!

மீண்டும் வாழ்த்துக்கள்...

பத்மநாபன் said...

உங்கள் அன்பு மகள் சைலஜாவிற்க்கு, கல்லூரிபடிப்பு சிறப்புற அமையப் பெற நல் வாழ்த்துக்கள்..

( முந்தய பின்னூட்டம் கிடைக்க பெறவில்லை என்று நினைக்கிறேன் )

Anonymous said...

ஆமாம்,ஒரு சந்தேகம். அடுத்த பதிவில்,ஷைலாஜா பட்டம் பெற்றதைப் பற்றி எழுதுவதற்காகக் காத்திருக்கிறீர்களா! :) -” ஆர்”

Anonymous said...

சமீபத்தில்தான் தங்களின் டயரி பார்த்தேன். அடுத்தவர் டயரியை திருட்டுத்தனமாக படிப்பதை விட சற்று‍ அதிக கிக்காகவே உள்ளது. பத்திரிக்கையாளராயிற்றே எழுத்து‍ சுவாரசிய்த்திற்கு‍ கேட்கவா வேண்டும்.
கடுகிற்கு‍ தங்கள் அளித்த பின்னூட்டம், என்னை உங்களிடம் கொணர்ந்து‍ சேர்த்தது. கீழே~நீங்கள் அளிக்கும் புதுமொழிகள் அட்டகாசம். நன்றிகளுடன்,
ஜெ. பாபு
கோவை - 20

ungalrasigan.blogspot.com said...

+ நன்றி பத்மநாபன்!

+ கனிவும் அக்கறையும் கூடிய உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தட்ஸ்கூல் சுரேஷ்!

+ முந்தைய பின்னூட்டமும் கிடைத்தது பத்மநாபன்! மீண்டும் என் நன்றி!

+ விருதுக்கு என் மனம் கனிந்த நன்றி ஜெய்லானி!

+ பதிவு எழுதாமல் நாள் கடத்துவதை நகைச்சுவையாகச் சுட்டி/குட்டிக் காட்டியிருக்கிறீர்கள். ரசித்தேன் ‘ஆர்’! இனி, அடிக்கடி எழுத முயல்கிறேன்.

+ தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி ஜெ.பாபு!