டி.எம்.எஸ்ஸிடம் எனக்குள்ள மரியாதையையும், அவருக்கு என் மீதுள்ள அபிமானத்தையும் அறிந்த ‘அவள் விகடன்’ தலைமை உதவி ஆசிரியரான ரேவதி என்னிடம் வந்து, டி.எம்.எஸ்ஸிடம் ஒரு பேட்டிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். ஏற்கெனவே முயன்று டி.எம்.எஸ். மறுத்துவிட்ட தகவலையும் சொன்னார்.
நான் உடனே நண்பரும் இயக்குநருமான விஜய்யைத் தொடர்பு கொண்டேன். விஷயத்தைச் சொன்னேன். “ஐயா ஒரு விஷயத்துல நம்பிக்கை வெச்சார்னா முரட்டுப் பிடிவாதமா இருப்பார். பேசிப் பார்க்கிறேன். நீங்கன்னா ஒத்துக்குவார்னு நினைக்கிறேன்” என்றார். மூன்று மணி நேரம் கழித்து, “ஐயா சம்மதிச்சிட்டாருங்க. உங்க பேரைத்தான் சொன்னேன். நீங்க வருவீங்களான்னு கேட்டார். வருவாருங்கன்னேன். நாளைக்கு மாலை 5 மணிக்கு வந்தீங்கன்னா, போட்டோக்கள் எடுத்துக்கிட்டு, பேட்டியையும் வாங்கிக்கலாம்” என்றார் விஜய்.
“அடடா! நான் வருவதாக ஏன் சொன்னீங்க? எனக்கு ஃபாரம் முடிக்கிற வேலை இருக்குமே! இந்த பேட்டி சக்தி விகடன் பத்திரிகைக்கு. அதை எடுக்கப் போறவங்க அவள் விகடன் டீம்ல வொர்க் பண்ற உதவி ஆசிரியர். எனக்கு அங்கே வேலையே இல்லையே!” என்றேன்.
“இல்லீங்க! நீங்கன்றதாலதான் ஐயா ஒத்துக்கிட்டாரு. ரெண்டு நாளைக்கு முன்னே வேற ஒரு பத்திரிகைலேர்ந்தும் வந்து கேட்டிருக்காங்க. ஐயா தீர்மானமா முடியாதுன்னுட்டாரு. பேட்டியை அவங்க எடுக்கிறபடி எடுக்கட்டும். நீங்களும் சும்மா ஒரு மணி நேரம் அவங்களோட வந்து தலை காமிச்சுட்டுப் போயிடுங்க” என்றார் விஜய்.
அதன்படி, நேற்றைய வெள்ளிக்கிழமை மாலை நானும் ரேவதியும் ஒரு ஆட்டோவில் டி.எம்.எஸ். வீட்டுக்குச் சென்றோம். உள்ளிருந்து வரும்போதே “ரவிபிரகாஷ் வந்திருக்காரா?” என்று கேட்டுக்கொண்டேதான் வெளியே ஹாலுக்கு வந்தார் டி.எம்.எஸ். முன்னே சென்று அவர் கைகளைப் பற்றிக்கொண்டு, நெகிழ்ச்சியோடு அவரின் கால்களைத் தொட்டு வணங்கினேன். தலையில் கை வைத்து ஆசீர்வதித்து, அவரது சுபாவப்படி சரளமாகப் பேசத் தொடங்கிவிட்டார்.
தான் பயின்று வரும் ஆல்ஃபா மெடிட்டேஷன் தியான வகுப்புகள் பற்றியும், சமீபமாக யோகா, ஆசனங்கள் செய்து வருவது பற்றியும் விளக்கினார் டி.எம்.எஸ். மல்லாக்கப் படுத்து, கால்களை உயர்த்தி, இடுப்பையும் தரையில் படாதவாறு உயர்த்தியவாறு, கால்களைச் செங்குத்தாக ஐந்து நிமிட நேரத்துக்கு இந்த வயதிலும் தன்னால் ஆசனம் செய்ய முடிகிறது என்று சொன்னார். அப்படிச் செய்கிறபோது கால், வயிறு பகுதிகளிலிருந்து ரத்தம் முழுவதும் மூளைக்குள் பாய்வதையும், தனது உடம்பும் மூளையும் புத்துணர்வு பெறுவதையும் தன்னால் உணர முடிகிறது என்று டி.எம்.எஸ். அந்த அனுபவத்தை விவரிக்கும்போது அவர் முகத்தில் அத்தனைப் பரவசம்!
டி.எம்.எஸ். குடும்பம். இடப்புறம் நிற்பவர்கள் டி.எம்.எஸ்.செல்வகுமார் தம்பதி, நடுவில் டி.எம்.எஸ்ஸின் மகள் மல்லிகா, அடுத்து நிற்பவர் டி.எம்.எஸ்.பால்ராஜ், வலது ஓரம் டி.எம்.எஸ்ஸின் பேரனும் (மூத்த மகளின் மகன்) அவர் மனைவியும்.
டி.எம்.எஸ்-ஸுக்கு மொத்தம் ஒன்பது வாரிசுகள். ஐந்து பெண்கள்; நான்கு பையன்கள். ஐந்து பெண்களில் நால்வர் இப்போது உயிரோடு இல்லை. மல்லிகா என்கிற மகள் மட்டுமே! பிள்ளைகளில் டி.எம்.எஸ். பால்ராஜ் மற்றும் டி.எம்.எஸ். செல்வகுமார் ஆகிய இருவர் மட்டுமே. ஒரு பிள்ளை, பிறந்து பதினைந்தாவது மாதத்திலும், மற்றொரு பிள்ளையான பாலசுப்பிரமணியன் பதினைந்து வயதில் மஞ்சள்காமாலை நோய் வந்து, மரணப்படுக்கையில் முருகா, முருகா என்று அனத்தியபடியே தன் கண்ணெதிரே உயிர் துறந்ததையும் டி.எம்.எஸ். உருக்கத்துடன் விவரித்தபோது அவர் கண்களில் நீர்.டி.எம்.எஸ். பால்ராஜ் விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு தெலுங்குப் படத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் கதாநாயகனுக்கு ஒரு பாட்டுப் பாடியிருப்பதாகச் சொன்னார். டி.எம்.எஸ். செல்வகுமாருடன் எனக்கு அதிகம் பழக்கமில்லை.
ரேவதி டி.எம்.எஸ்ஸிடம் சக்தி விகடனுக்காக பேட்டி எடுக்கத் தொடங்கினார். அவர் வழக்கம்போல் டிராக் மாறி, அடிக்கடி தன்னுடைய பழைய நினைவுகளுக்குப் போய் உலவத் தொடங்கிவிட்டார். அவரை அவர் போக்கில் பேசவிட்டு, பூஜையறை பக்கம் திசை திருப்பிக் கொண்டு வர வேண்டியிருந்தது. புட்டபர்த்தி சாயிபாபா, காஞ்சிப் பெரியவர் ஆகிய ஞானிகளின் ஆசிகள் கிடைத்த விதங்கள் பற்றியெல்லாம் பகிர்ந்துகொண்டார் டி.எம்.எஸ். கடந்த ஆண்டு பிறந்த நாளின்போது கவிப்பேரரசு வைரமுத்து தனக்கு அன்பளிப்பாக அளித்த முருகர் சிலையைப் பற்றியும் சொன்னார்.
வைரமுத்து அளித்த முருகர் சிலை
சில மாதங்களுக்கு முன், மு.க. அழகிரி டி.எம்.எஸ்ஸுக்கு மதுரையில் பாராட்டு விழா நடத்திக் கொடுத்த விருது, ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. மு.க.அழகிரி அவர்கள் டி.எம்.எஸ். மீது எத்தனை அபிமானம் உள்ளவர் என்பதைக் காட்டுவது போன்று அத்தனை பிரமாண்டமாக இருந்தது அந்த விருது.ஒரு ஆல்பத்துக்காக, வாலி எழுதித் தந்த இரண்டு பாடல்களை டி.எம்.எஸ். தன் பாணியில் இசையமைத்துப் பாடிக் கொடுக்கும்படியும், அதை வைத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமாக தான் இசைக் கோப்பு செய்துகொள்வதாகவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியிருக்கிறாராம். அதற்கான வேலை நடந்துகொண்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் டி.எம்.எஸ்.
ஒவ்வொரு முறை டி.எம்.எஸ்ஸைச் சந்திக்கும்போதும் ஓரிரு வயது குறைவாக ஆனவர் போன்று சுறுசுறுப்பாக, இளமையாகக் காட்சியளிக்கிறார். வருகிற மார்ச் மாதம் 24-ம் தேதியோடு அவருக்கு 86 வயது பூர்த்தியாகி, 87 தொடங்குகிறது. அவர் நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமென்று, அவரின் தீவிர ரசிகன் என்கிற முறையில் மகாஸ்ரீ அன்னையை வேண்டுகிறேன்.
***
வயது என்பது மனதைப் பொறுத்த விஷயம். மனதாலும் நினைக்கவில்லை எனில், வயது ஒரு விஷயமே அல்ல!
வயது என்பது மனதைப் பொறுத்த விஷயம். மனதாலும் நினைக்கவில்லை எனில், வயது ஒரு விஷயமே அல்ல!
16 comments:
ஒரு நல்ல பதிவு நான் உங்கள் வலை பக்கத்திற்கு இது என் முதல் வருகை இனி அடிக்கடி வர வைக்கும் எழுத்து
வாழ்த்துக்கள்
டி.எம்.எஸ்.பற்றி நீங்கள் எத்தனை பதிவுகள் போட்டாலும் புதிது புதிதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கிறது. அருமையான பதிவு.
ரேகா ராகவன்.
ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கின்றது, படிக்கும்போது.
டி.எம்.எஸ் பற்றி எவ்வளவு படித்தாலும்
அலுக்காது.
உங்களின் '''கம்பிர குரல் TMS அவர்களின் வீட்டு விஜயம் '' எங்களுக்கு அவரது ஒரு ''முருகன் '' பாடல் கேட்ட மகிழ்ச்சி
( குறிப்பாக , ''' சொல்லாத நாளில்லை இல்லை சுடர்மிகும் வடிவேலா , உன்னை சொல்லாத நாளில்லை ........'' ) .. சம்பவம் விடாமால் ,இந்த வலைப்பூவை தொடுத்த அழகு சிறப்பு ..
ஹைய்யோ..! நிறையப் படங்களோடு டி.எம்.எஸ். பற்றிய பதிவு. இந்தச் சமயத்தில் டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகரான என் கணவர் அருகில் இல்லையே (ஒரு வேலை விஷயமாக டெல்லி வரை போயிருக்கிறார்) என்று ஏக்கமாக இருக்கிறது எனக்கு. செல்லில் தொடர்பு கொண்டு இந்தப் பதிவைப் பற்றிச் சொன்னால் அங்கேயே பார்த்து மகிழ்வார்தான். ஆனால், அப்போது அவர் முகத்தில் ஏற்படுகிற பரவசத்தை என்னால் பார்த்து ரசிக்க முடியாதே என்கிற ஏக்கம்தான் எனக்கு. ரொம்ப அழகான பதிவு ரவி சார்!
***
வயது என்பது மனதைப் பொறுத்த விஷயம். மனதாலும் நினைக்கவில்லை எனில், வயது ஒரு விஷயமே அல்ல!
............இந்த அனுபவ பொன் மொழிக்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு: T.M.S.
இந்த பதிவை ஒரு சிறப்பு நிகழ்ச்சி பார்ப்பது போல வழங்கி உள்ளீர்கள்.
சார், இதைப் படிக்கும்போதே ஒன்று புரிகிறது. இதை எழுதும்போதே நீங்கள் மிக்க மகிழ்ச்சியாக இருந்ததை உணர முடிகிறது.
மிக நல்ல பதிவு சார்.
நீங்கள் டி.எம்.எஸ் அவர்களை சந்திக்க விரும்புவது, கரும்பு தின்ன கூலியா? என்பது போலல்லவா.
விடமாட்டீங்க போல, டி.எம்.எஸ்.ஸை! இருந்தாலும், தகவல்களுக்கு நன்றி!
நிறைய எழுதுங்கள் சார்!
i cannot read your posts with your recent lay out , ravi sir.
thick brown background is the reason i think.
make a kind note of it sir.
-thodar vasagan.
அருமையான வலைத்தளம், மிக நல்ல பதிவு.டி.எம்.எஸ்ஸின் வளமான வாழ்விற்கு பிரார்த்திக்கிறேன்.
Nice post. I have a request (again, I am writing something irrelevant to this post). Is it possible for you to write a post about how you all discuss on what contents will an issue of vikatan carry? I am sure it is a very difficult thing to do, given that you have page limits, and some reservations on the kinds of things that should go into each vikatan magazine (junior vikatan, anandha vikatan, etc). For instance, there have been several important news articles that have been published in JV, AV and Aval (one such example is the news about Hidendran). I can very well see the importance of this news and why it should be given prominence, but in general, how do you all decide what should go into each issue. As an example, if you consider about movies, there is Mr. Miao in JV and inbox/movie sections in AV. How do you decide what news should go where? Similarly, there are some political news segments that are published both in AV and JV. Where is the line drawn? As a long time fan of vikatan magazines, I have always been curious about this. If you can write a post about this, it might be interesting to many curious readers like me. Thanks.
(கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் வந்த பின்னூட்டத்திற்கு பின்னூட்டமாக) கல்யாணி கேட்கவந்த விஷயம் .. எல்லா விகடன் வாசகர்களுக்குள்ளும் இருக்கும் கேள்விகள் ... ஆனால் இதற்க்கு பதில் கிடக்க பெற்று, அந்த ரகசிய சுவாரசியத்தை இழக்க விரும்பவில்லை .... வார வாரம் அனுபவிக்கத்தான் பெரும்பாலான வாசகர்களுக்கு பிடிக்கும் ... சுவாரசியம் குறையாமால் அந்த தொழில் நுட்பத்தை ரவி பிரகாஷால் சொல்லமுடியும் .... கல்யாணி மன்னிக்க ... ஏனோ விரும்பவில்லை .... நல்ல சினிமா பார்க்க ஆசை இருக்கும் ..சூட்டிங்கை அல்ல ... ( என் போன்று உதகையில் இருந்தவர்களுக்கு தெரியும்
சூட்டிங்கில் படும்பாடு ) அதே போல் தான் பத்திரிக்கையில் அவர்கள் படும் பாடு .... முடிவு ரவிப்ரகாஷ் கையில் .. வந்தால் நன்றாக ரசிப்பதை தவிர வேறு வழியில்லை .
* வாங்க அரும்பாவூர்! தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்!
* நன்றி ரேகா ராகவன்!
* ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது தங்கள் பின்னூட்டத்தைப் படிக்கும்போது, ஜீவன்பென்னி!
* ஆமாம், ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி, அவரது பாடல்களைப் போலவே! :)
* நன்றி பத்மநாபன்!
* நன்றி கிருபாநந்தினி! உங்கள் கணவர் முகத்தில் ஏற்படுகிற பரவசம் உங்களின் பின்னூட்ட வரிகளில் தெரிந்தது! :)
* ஷிர்டி சாய்சதன்! தேங்க்ஸ்!
* சித்ரா! தங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்கு என் இதயங்கனிந்த நன்றி!
* \\நீங்கள் டி.எம்.எஸ் அவர்களை சந்திக்க விரும்புவது, கரும்பு தின்ன கூலியா? என்பது போலல்லவா!// ஆமாம். சரியாகச் சொன்னீர்கள் பொன்னியின் செல்வன்!
* நன்றி ரவிஷா!
* Mr.Suresh! I think it will take some time to open the blog completely! Thanks for your opinion.
* Thanks Kalyani for your suggestion!
* நன்றி ராதாகிருஷ்ணன்!
* நன்றி பத்மநாபன்! கல்யாணி அவர்களுக்கு நான் சொல்லாமல் மழுப்பிய பதிலைத் தாங்கள் உடைத்துச் சொல்லிவிட்டீர்கள்! :)
இந்தப் பதிவுக்கு தமிழிஷ்-ஷில் ஓட்டளித்து முன்னிலைக்குக் கொண்டு வந்த அனைத்து அன்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி!
@ நன்றி அனன்யா!
Post a Comment