
இரண்டு நாட்களுக்கு முன்னால், அலுவலக நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து, "ஏன் சார் ரொம்ப நாளாவே நீங்க பதிவு எதுவும் எழுதலை?" என்று அக்கறையோடு விசாரித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "என் வலைப்பூக்களை நீங்க படிக்கிறீங்களா என்ன?" என்று கேட்டேன். "தொடர்ந்து படிக்கிறேன் சார்! பழைய சாவி கால நினைவுகளை நீங்க பகிர்ந்துக்கிற விதம் நல்லாருக்கு!" என்றார். ஆச்சரியமாக அதே நாளில் வேறொரு நண்பரும் என்னிடம், "சார்! நீங்க பிளாக் எழுதறீங்களா சார்? துபாய்ல எனக்கொரு ஃப்ரெண்டு உண்டு. அவன் நேத்து என்னோட பேசிட்டிருக்கும்போது, உங்க பிளாகைப் பத்திச் சொன்னான். தொடர்ந்து படிக்கிறானாம். கொஞ்ச நாளா சார் எதுவும் எழுதக் காணோமே, என்ன விஷயம்னு கேட்டான்" என்றார். வெறுமே புன்னகைத்து வைத்தேன். வேறு என்ன பதில் சொல்வது?
சிறுகதையோ, கவிதையோ நம் உள்ளிருந்து 'எழுது... எழுது...' என்று நம்மை உந்தித் தள்ள வேண்டும். அனுபவப் பகிர்வுகளும் அப்படித்தான்! எழுதித்தான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. எழுதப்படாமல் விட்ட சிறுகதைகளாலோ, கவிதைகளாலோ, அனுபவப் பகிர்வுகளாலோ யாருக்கும் எந்த நட்டமும் இல்லை என்பது என் கருத்து. எதையாவது எழுதினால், அதன் மூலம் எழுதுபவருக்கோ படிப்பவருக்கோ ஏதாவது பலன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மனத் திருப்தியாவது ஏற்பட வேண்டும்.
அப்படியொரு மனத் திருப்தி கிடைக்கும் என்பதால்தான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
கடந்த சனிக்கிழமையன்று, தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில், விகடன் குழும முக்கியஸ்தர்களின் கூட்டம் நடந்தது. Know your customer என்பதுதான் கூட்டத்துக்கான பிரதான நோக்கம்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த ஆனந்த விகடன் பத்திரிகைக்கும், பிற்பாடு நான் கதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில், அதாவது 80-களில் நான் கண்ட விகடன் பத்திரிகைக்கும், பின்னர் விகடனில் நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் (90-கள்) நான் பார்த்த விகடனுக்கும், இப்போதைய விகடனுக்கும் அபார மாற்றம்; அபார வளர்ச்சி! தவிர, விகடனின் ஆரம்ப கால இதழ்களிலிருந்தே நான் பார்த்திருப்பதால், இந்த மாற்றம் அசுரத்தனமான மாற்றமாக, விகடன் விசுவரூபம் எடுத்திருப்பது எனக்குத் தெளிவாகவே தெரிகிறது.
விகடனின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்ன? பல காரணங்களைச் சொல்லலாம். முக்கியமாக இரண்டு காரணங்கள் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று... வாசன் காலத்திலிருந்து இன்று வரைக்கும் வாசகர்களோடு விகடன் கொண்டிருக்கும் அந்நியோன்னிய உறவு. மற்றொன்று... இளமையாக இருப்பது.
முன்னெல்லாம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, விகடன் எடிட்டோரியல் குழுவினர், ஊர் ஊராகத் தமிழகம் முழுக்கச் சென்று, விகடன் பற்றிய வாசகர்களின் கருத்துக்களைச் சேகரிப்போம். அப்போது வாசகர்களிடம் 'கண்டிப்பான தமிழ் வாத்தியார்' போன்ற இமேஜ்தான் விகடனுக்கு இருந்தது. இன்றைக்கு அது முற்றிலும் மாறி, 'சுறுசுறுப்பும் துடிப்பும் நிறைந்த இளம் பெண்' இமேஜ் கிடைத்திருக்கிறது.
இதற்குக் காரணம், விகடனின் இன்றைய நிர்வாக இயக்குநரும், அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் பேரனுமான ஸ்ரீனிவாசன்தான். அவரே ஓர் இளைஞர். அவரின் துடிப்பான வழிகாட்டுதலில், இன்று விகடனில் இளைஞர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது. எனில், பத்திரிகை இளமைத் துடிப்போடு திகழ்வதில் வியப்பென்ன?
இளமையை உயர்த்திப் பிடிக்கும் அதே நேரத்தில், விகடனுக்குள்ள பழம் பெருமையையும் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறவராக திரு.ஸ்ரீனிவாசன் இருப்பது போற்றுதலுக்குரியது. விகடனை ஒரு சரியான சமன்பாட்டில் எடுத்துச் செல்வது அதுதான்!
மற்ற பத்திரிகைகளுக்கும் அவற்றின் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கத்தைவிட, ஆனந்த விகடனுக்கும் அதன் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கம் ஆயிரம் மடங்கு அதிகம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். மற்ற பத்திரிகைகளுக்கு இருப்பவர்கள் வெறும் வாசகர்கள்தான். ஆனால், விகடன் வாசகர்களுக்கு விகடன் வெறுமே ஒரு பத்திரிகை மட்டுமல்ல; அவர்களின் குடும்பத்தில் ஒரு அங்கம்!
ஒரு சின்ன உதாரணம் சொன்னால் விளங்கும். ஒரு முறை சர்வே எடுக்கப் போயிருந்தோம். ஆனந்த விகடன் உள்பட ஏழெட்டுப் பத்திரிகைகள் வாங்கிப் படிக்கும் ஒரு குடும்பத்துக்குச் சென்று, அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன்.
அந்த நேரத்தில், ஆனந்த விகடனில் ஒரு நடிகையின் படம் கொஞ்சம் கிளாமராகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. சினிமா ஸ்டில்தான் அது! என்றாலும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதை ஜீரணிக்கவில்லை. கடுங்கோபத்துடன் என்னிடம் பேசினார்கள். "இப்படித்தான் படம் போடுவீங்களா? வயசுப் புள்ளைங்க, பொண்ணுங்க இருக்கிற வீட்டில் இதை எப்படி நடு ஹால்ல போட முடியும்? நாங்க ஐம்பது வருஷத்துக்கு மேலா விகடனை வாங்கிப் படிச்சுக்கிட்டிருக்கோம். முன்னெல்லாம் குழந்தைங்க பார்த்தா பார்க்கட்டும்னு தைரியமா விகடனை மேஜை மேல போட முடிஞ்சுது. இன்னிக்கு ஒளிச்சு வைக்க வேண்டியிருக்கு" என்று கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்தார்கள்.
சினிமாவிலிருந்து, இன்றைய பெண்கள் உடுத்துகிற உடைகளிலிருந்து, தினம் தினம் நம் வீட்டு வரவேற்பறைக்கே வருகிற தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலிருந்து அத்தனையும் மாறி இருப்பதையும், அவற்றோடு விகடனும் சற்று மாற வேண்டிய சூழ்நிலை உருவானதையும் அவர்களுக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னேன். "என்னமோ சமாதானம் சொல்றீங்க! ஆனா, விகடன் இப்படிப் பண்ணும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லீங்க. தப்பு தப்புதான். அதை ஒத்துக்கோங்க!" என்றார் அந்த வீட்டம்மா கறாராக!
அப்போது, எதிரே டீப்பாய் மீது இருந்த வேறொரு பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன். அந்தம்மா இவ்வளவு நேரம் எந்த ஸ்டில்லுக்காக விகடனைச் சாடு சாடு என்று சாடினாரோ, அதே படத்தின் வேறொரு ஸ்டில் அந்தப் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. இன்னும் கவர்ச்சியாக! நான் புன்னகையோடு அதை அவர்களிடம் காண்பித்து, "விகடனை மேஜையில் வைக்க முடியலைன்னு கோபிச்சுக்கிறீங்களே! இதை மட்டும் எப்படி வெச்சிருக்கீங்க?" என்று கேட்டேன்.
"அவன் எப்படி வேணா போடலாங்க. அது பத்தி நமக்கென்ன கவலை? தெருவுல எவளோ ஒருத்தி கிளாமரா டிரெஸ் பண்ணிக்கிட்டுப் போனா, போகட்டும் கழுதைன்னு விட வேண்டியதுதான். அதுவே எம் பொண்ணு அப்படி டிரெஸ் பண்ணா பார்த்துக்கிட்டுச் சும்மா இருப்பேனா? அடி பின்னிட மாட்டேன்!" என்றார். "அந்தப் பத்திரிகையில் வர்ற வேற சில நல்ல விஷயங்களுக்காகத்தான் அதை நாங்க வாங்கிப் படிச்சுக்கிட்டிருக்கோம். மத்தபடி, அது எப்படியோ தொலையட்டும்னு விட்டுருவோம். லெட்டர் கூட எழுதிப் போட மாட்டோம். ஆனா, விகடனை எங்களால அப்படி விட முடியாது. இந்தப் படத்தைப் பார்த்ததுலேர்ந்து விகடனா இப்படி, விகடனா இப்படின்னு பொங்கிப் பொங்கி வருதுங்க. சொன்னா நம்ப மாட்டீங்க, முத முதல்ல இந்தப் படத்தை விகடன்ல பார்த்ததும் அழுகையே வந்துருச்சு எனக்கு!" என்றார் அந்தம்மா.
நம்பினேன். காரணம், என்னோடு பேசிக்கொண்டு இருந்தபோதே அந்தம்மாவின் கண்கள் கசிந்தன. சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டார்.
இப்போது புரிகிறதா, விகடனுக்கும் அதன் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கம்?
வாசன் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இந்த இறுக்கத்தை, நெருக்கத்தை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கும், விகடன் வாசகர்களோடு மேலும் ஐக்கியமாவதற்கும், அவர்களைப் பற்றி இன்னும் விரிவாகப் புரிந்து கொள்வதற்கும் தனியாக ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும் என்பது திரு.ஸ்ரீனிவாசனின் விருப்பம். அதற்கான ஆலோசனைக் கூட்டம்தான் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் எமரால்டு ஹாலில் நடந்த கூட்டம்.
இந்தக் கூட்டத்தில், மதியம் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர், நம் எல்லோருக்கும் தெரிந்த நகைச்சுவை நடிகர் திரு.மோகன்ராம் அவர்கள். தொடர்ந்து சீரியல் பார்ப்பவர்களுக்கு இவரைத் தெரியாமல் இருக்க முடியாது. இப்போது வரும் 'மாமா மாப்ளே'விலும் இவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
Customer Relationship பற்றி இவர் எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி கொடுத்தார்.
அதுவரை இவரை வெறும் அசட்டுக் காமெடி நடிகராகவே எண்ணிக்கொண்டு இருந்த நான், அன்றைய தினம் இவருடைய மற்றொரு பக்கத்தைப் பார்த்து அசந்து போனேன். வியப்பில் மூழ்கி, திக்குமுக்காடிப் போனேன்.
அந்த அனுபவம் பற்றி விரைவில் எனது 'உங்கள் விகடன்' வலைப்பூவில் எழுதுகிறேன்.
***
பல சமயம் 'First impression best impression'- ஆக அமைவதில்லை!
பல சமயம் 'First impression best impression'- ஆக அமைவதில்லை!