வாவி என்றால் குளம். வாவிதான் சம்ஸ்கிருதத்தில் ‘வாபி’ என்றாகியதோ? எனில், ஞானவாபி என்றால் ஞானக் குளம். அறிவுக் குளம்.தி.நகரில் உள்ள ‘ஞானவாபி’க்குள் நுழைந்ததும், ஒரு பெரிய நகருக்குள் இருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில், பெரியதொரு கோயிலை ஒட்டிய சற்று விசாலமான மண்டபத்தில் இருப்பதான பிரமையே ஏற்பட்டது. சின்னச் சின்னதாக ஏராளமான அறைகள்; வசதியான குளியல் அறைகள்; கர்மாக்களைச் செய்வதற்கென பிரத்யேக இடங்கள்; உட்காருவதற்குத் தோதான மணைப் பலகைகள்; அக்னி வளர்த்து ஹோமம் செய்வதற்கான சிறு சிறு சதுர சிமெண்ட் தொட்டிகள்; அகன்ற கிணறு; ஓர் அறையில் ஹோமத்துக்குத் தேவையான வறட்டிகள், தர்ப்பைகள், சமித்துகள், தொன்னைகள்.
இரண்டு அழகான காளைக் கன்றுகளும் அங்கே இருந்தன.
ஒருவர் இறந்த ஒன்பதாம் நாளிலிருந்து அவருக்கான கர்மாக்களைச் செய்யத் தொடங்க வேண்டும் என்பது ஐதிகம். அடுத்த நாள் ‘பத்து’ எனப்படும். அதையடுத்து சோதகும்பம், சபிண்டீகரணம். அவை முடிந்து, அந்த ஆத்மா பிரிந்த அந்த இல்லத்தில் வைத்து கிரேக்கியம் என்கிற சடங்கைச் செய்யவேண்டும்.
ஒன்பதாம் நாளில் பிண்டம் வைப்பதில் தொடங்குகிறது கர்மா. சாதத்தை ஒன்பது சிறிய உருண்டைகள், ஒன்பது பெரிய உருண்டைகளாகப் பிடித்து வைத்து, மறைந்த ஆத்மாவுக்குப் படைப்பது. சோதகும்பம் என்கிற காரியம் செய்கிற சமயத்தில் ஞானவாபியிலேயே குளித்து, அங்கேயே டிபன், சாப்பாடு எல்லாம் முடித்துக் கொள்வதற்கு வசதியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம், காளைக் கன்றுக்கு ஒரு பூஜை நடந்தது. மறைந்த ஆத்மாவை ருத்ர பூமிக்கு அனுப்பி, சிவபெருமானிடத்தில் ஒப்படைப்பதாக ஐதிகம். அப்படி அனுப்புவதற்குரிய வாகனமான ரிஷபத்தை (காளை) மகிழ்வித்து, தாஜா செய்து, இந்த ஆத்மாவைப் பத்திரமாக எடுத்துச் சென்று சிவனிடத்திலே ஒப்படைத்துவிடு என்று கேட்டுக் கொள்கிற பூஜை அது.
மறுநாள், சபிண்டீகரணம் என்பதும் ஒரு முக்கியமான கர்மா. அன்றைய தினம் குத்துவிளக்கு, குடம், குடை, செருப்பு, வேட்டி, தலையணை என நம்மால் முடிந்த பொருள்களைத் தானம் செய்ய வேண்டும்.
மறுநாள் கிரேக்கியம். அப்படித்தான் சொல்லிப் பழக்கம். அதன் உண்மையான உச்சரிப்பை, பொருளை, இந்தக் காரியங்களை நடத்தி வைத்த வாசன் சாஸ்திரிகள் விளக்கமாகச் சொன்னார். பொதுவாகவே, ஒவ்வொரு நாளுமே அந்தக் கர்மா எதற்காகச் செய்யப்படுகிறது, சொல்கிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை முக்கியமான இடங்களில் விளக்கியபடியேதான் நடத்தி வைத்தார் அவர்.
நவகிரஹ யக்யம் என்பதுதான் பின்னர் கிரஹ யக்யம் என்று சுருங்கி, கிரேக்கியம் என்று மருவிவிட்டது என்று விளக்கினார். நேற்றைக்குத்தான் இந்த நவகிரக பூஜையும் ஹோமமும் வீட்டில் நடந்தது.
ஒரு கல்யாணத்துக்கு ஆகிற செலவு இந்தக் காரியங்களுக்கும் ஆகியது. ஆனால், இதை இப்படித்தான், இவ்வளவு விமரிசையாகத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நம் வசதிக்கேற்றபடி சிக்கனமாகவும் செய்யலாம். கல்யாணத்தைக்கூட ஒரு கோயிலில் வைத்து மஞ்சள் முடிந்த தாலியைக் கட்டிச் சிக்கனமாகச் செய்வதில்லையா? எதுவுமே கட்டாயம் இல்லை. எதை எந்த அளவில் செய்தாலும், அதில் நமக்குப் பரிபூரண மனத் திருப்தி கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம்.
எந்த ஒரு செயலைச் செய்தாலும், கடனே என்று செய்யக் கூடாது. ஒரு வேலையில் இருந்தால், மாதா மாதம் சம்பளம் வாங்குகிறோமே என்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு செய்யக் கூடாது. அப்படிச் செய்கிற செயலில் முழுமை இருக்காது.
கர்மாக்களும் அப்படித்தான்! சிலருக்கு இதில் நம்பிக்கை இருக்கலாம்; பலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்; ‘செத்துப் போன ஆத்மாவைக் குளிரப் பண்ணுகிறதாவது! எல்லாம் பேத்தல்!’ என்று நினைக்கலாம். சிலர், இத்தனைச் செலவு பண்ண வேண்டிய அவசியமில்லை; செய்ய வேண்டியதுதான். ஆனால், சிக்கனமாகச் செய்தால் போதும் என்று எண்ணலாம்.
எங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டுமென்று தோன்றியது; செய்தோம். மறைந்த ஆத்மா நல்ல கதியை அடையும் என்கிற ஆத்ம திருப்தி உண்டாகியிருக்கிறது.
மனித வாழ்க்கையில் இறுதியில் எஞ்சி நிற்பது அதுதானே!
***
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இரண்டு முக்கியமான நாட்கள் உண்டு. ஒன்று, அவன் பிறந்த நாள்; மற்றொன்று, எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்த நாள்!
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இரண்டு முக்கியமான நாட்கள் உண்டு. ஒன்று, அவன் பிறந்த நாள்; மற்றொன்று, எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்த நாள்!