பகவான் ரமணர்!


 ‘நான் யார்?’ என்ற கேள்வியைத் தனக்குள் எழுப்பிக்கொண்டு, ஆத்ம தரிசனம் தேடிப் புறப்பட்டு, அண்ணாமலையாரின் பாதங்களைச் சரணடைந்து, தாம் வேறு, தமது உடல் வேறு, அழியாத ஆத்மாவே நாம் என்னும் ‘அபரோக்ஷ அனுபூதி’ நிலையை எய்தியவர் பகவான் ரமண மகரிஷி. நம் காலத்தில் வாழ்ந்த மகான் இவர் என்பதால், நாம் உள்ளபடியே பாக்கியவான்களாவோம்.

திருச்சுழி கிராமத்தில் சுந்தரமய்யர், அழகம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ரமணர். இயற்பெயர் வெங்கட்ராமன். இவர் தன் தந்தையை ‘அப்பா’ என்று அழைக்காமல் ‘நாயனா’ என்று தெலுங்கில்தான் அழைப்பார். உறவினரான லட்சுமண அய்யர் என்பரிடமிருந்துதான் தெலுங்கு மொழி இவருக்கும் தொற்றிக்கொண்டது. இவரை ‘ரமணா’ என்று முதன்முதலில் அழைத்தவர் லட்சுமண அய்யர்தான்.

தன் காதுகளில் ‘வா, வா’ என்று அழைத்துக்கொண்டிருந்த அருணாசலேஸ்வரரைத் தேடிச் சென்று கோயிலுக்குள் நுழைந்தவுடனே ரமணர் கூறிய முதல் வார்த்தைகள்... “அப்பா, நான் வந்துவிட்டேன்!”

கோயிலை விட்டு வெளியே வந்தவுடன், அய்யங்குளம் புஷ்கரணிக்கு அருகே, தன் கருமையான கேசத்தை வெட்டி எறிந்தார். பூணூலைக் கழற்றிப் போட்டார். தன்னிடம் மிச்சம் மீதி இருந்த காசுகள், பண்டங்கள் எல்லாவற்றையும் வீசி எறிந்தார். தான் உடுத்தியிருந்த வேட்டியிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்துக் கோவணமாக அணிந்து கொண்டார். மொட்டை அடித்த பிறகு குளிக்க வேண்டும் அல்லவா... ஆனால், அதையும் ஆடம்பரமாகக் கருதிய ரமணர் குளிக்காமலே புறப்படத் தயாரானபோது, வருணபகவான் பொழிந்து ரமணரைக் குளிப்பாட்டினார்.

தன் வாழ்நாளில் 38 வருடங்களை ரமணருக்கும் மற்ற ஆசிரம அன்பர்களுக்கும் சமைத்துப் போடுவதையே தன் பிறவிப் பயனாகக் கருதியவர் லட்சுமி அம்மாள். எல்லாரும் இவரை எச்சம்மாள் என்று அழைப்பர். எச்சம்மாளின் முதிய வயதையும் உடல்நிலையையும் மனதில் கொண்டு, ‘இனி ரமணருக்கு உணவு கொண்டு வர வேண்டாம்’ என்று ஆசிரம அன்பர்கள் ஒருமுறை சொல்லிவிட, பெருந்துக்கத்தோடு தன் வீட்டில் அடைந்து கிடந்தார் லட்சுமி அம்மாள். அன்றிலிருந்து தான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லிவிட்டார் ரமணர். ஆசிரமவாசிகள் பின்னர் வழக்கம்போல் லட்சுமி அம்மாளை உணவு கொண்டுவரச் சொல்லிப் பணித்த பின்புதான் உண்ணத் தொடங்கினார் ரமணர். லட்சுமி அம்மாள் ரமணர் மீது வைத்திருக்கும் பக்தியையும், ரமணர் லட்சுமி அம்மாள் மீது வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் அப்போதுதான் புரிந்துகொண்டார்கள் ஆசிரம அன்பர்கள்.

அதே போன்று, கீரைப்பாட்டி என்னும் ஏழைப் பெண்மணி மீதும் பரிவு காட்டுவார் ரமணர். அவள் தினமும் கொண்டு வந்து தரும் கீரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தக் கீரைப் பாட்டிதான் பின்னாளில் ஆசிரமத்தில் ‘லட்சுமி’ என்னும் பசுவாகப் பிறந்தாள் என்பது ஆசிரம அன்பர்களின் நம்பிக்கை.

மகா பூஜை போன்ற விசேஷ நாள்களில் ஆசிரமத்தில் அனைவருக்கு விருந்துச் சாப்பாடு உண்டு. ஆனால், ஏழை எளியவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுச் சென்ற பிறகுதான் ஆசிரமவாசிகள் சாப்பிட வேண்டும் என்னும் ஒரு விதி அங்கே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்துக்குப் பின்பு இந்த விதியை மீறி, ஏழை எளிய மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே இன்னொரு புறத்தில் ஆசிரமவாசிகளுக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதனால் ஒருமுறை, உணவு தீர்ந்துபோய் ஓர் ஏழைக்கு உணவு கிடைக்காமல் போய்விட்டது. இதை அறிந்து பகவான் ரமணர் பெரிதும் மனம் வருந்தினார். அடுத்த நாள், உணவு பரிமாறப்படும்போது, பகவான் ரமணரும் உணவுக்காகக் காத்திருக்கும் ஏழைகள் நிற்கும் வரிசையில் ஒருவராகத் தாமும் போய் நின்றுகொண்டார். ஆசிரமவாசிகள் எவ்வளவு வருந்தி அழைத்தும் முதலில் சென்று உண்ண மறுத்துவிட்டார். ஏழை எளிய மக்கள் முதலில் உணவருந்த வேண்டும் என்னும் வழக்கம் அன்றிலிருந்து மீண்டும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

பவ நகர் ராணி ஒரு வெள்ளை மயிலை ரமணருக்குப் பரிசாகக் கொடுத்தாள். அது அடிக்கடி எங்கேயாவது பறந்து போய்விடும். ஆசிரமத்தினர் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருவார்கள். அந்த மயிலைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, “சுட்டிப் பயலே, எங்கேடா போயிட்டே? காட்டுல நிறைய துஷ்ட மிருகங்கள் இருக்கு. அதனால, எங்கேயும் போகாதே, சமர்த்தா இங்கேயே இரு, என்ன?’ என்று கொஞ்சுவார் ரமணர். மயிலுக்கு இசை பிடிக்கும், குறிப்பாகப் புல்லாங்குழல் இசை பிடிக்கும் என்பார் ரமணர்.

ரமணருக்கு இடது முழங்கால் அருகே ‘சர்கோமா’ என்ற புற்றுநோய்க் கட்டி வந்தது. அது பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால், பக்தர்கள் வாய்விட்டுக் கதறி அழுதார்கள். ஒருநாள் ரமணர் தன் சாப்பாட்டுக்கான இலையைத் தைத்துக்கொண்டு இருந்தபோது, அருகில் இருந்த பக்தர்களிடம் சொன்னார்... ‘கஷ்டப்பட்டுத் தையல் இலையை உருவாக்குகிறோம். சாப்பிட்டு முடித்ததும் இலையை வீசி எறிகிறோம். அப்படித்தான் இந்த உடம்பும்!” என்றார்.

1950 ஏப்ரல் 14-ம் தேதி, பகவான் ரமணர் சித்தியடைந்தார்.

ரமணர் குறித்து கிரேஸி மோகன் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. ரமணர் களைப்புடன் இருப்பதாக அறிந்த ஒரு பக்தர், “சுவாமி, உடம்புக்கு என்ன பண்ணுகிறது? தெம்பாக திடமாக இருக்கிறீர்களா?” என்று கவலையுடன் விசாரித்தாராம். அதற்கு ரமணர் சிரித்துக்கொண்டே, “இந்த உடம்புக்கு என்ன கேடு? நாலு பேர் தூக்கிக்கொண்டு போக வேண்டிய இந்த உடம்பை நான் ஒருவன் மட்டுமே தூக்கிக்கொண்டு போகிறேனே... தெம்புக்கு என்ன குறைச்சல்?” என்றாராம். அவரல்லவோ மகான்!

பகவான் ரமணரின் 141-வது ஜயந்தி தினம் இன்று! (30.12.2020)

 

 

 

 

 

 

 

0 comments: