பத்திரிகையுலகப் பண்பாளர்!

 

லக்கியக் கூட்டம், கவியரங்கம், சினிமா டிஸ்கஷன், ஆன்மிக உபன்யாசம், அறிவியல் விளக்கக் கூட்டம், இயற்கை ஆர்வலர்களின் கருத்தரங்கு, வேளாண் அறிவியல் ஆலோசனைக் கூட்டம், சட்ட நுணுக்க விளக்கக் கூட்டம்... இத்தனையிலும் அடுத்தடுத்துக் கலந்துகொண்டுவிட்டு, கூடவே கொஞ்ச நேரம் சினிமா ஃபெஸ்டிவலில் உற்சாகமாக வலம் வந்து, டிஸ்கவரி சேனல் கண்டு ரசித்து, நகைச்சுவைப் பட்டிமன்றத்தைக் கேட்டு மகிழ்ந்து, புதிர் விளையாட்டில் கலந்துகொண்டு குதூகலித்தால், அந்த அனுபவம் எப்படி இருக்கும்?

விகடன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களுடன் இரண்டு மணி நேரம் உரையாடியது போன்று இருக்கும்.

என் வீட்டுக்கு லேண்ட் லைன் கிடைத்த புதிது. என் மகனுக்கு அப்போது மூன்று வயதுக்குள்தான் இருக்கும். ஒரு நாள், என்னுடன் பேசுவதற்காக விகடன் அலுவலகத்துக்கு டயல் செய்துவிட்டான். அப்போதெல்லாம் டெலிபோன் ஆபரேட்டர்தான் எடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு இணைப்பு கொடுப்பார். இவன் பிரமாதமாக ‘எடிட்டரோடு பேசணும்’ என்று சொல்லிவிட்டான். என்னை விகடன் எடிட்டர் என்றே நினைத்துக்கொண்டுவிட்டானோ என்னவோ! டெலிபோன் ஆபரேட்டரும் கேள்வி கேட்காமல், ஆசிரியரின் பேரக் குழந்தை யாரோ பேச விரும்புகிறதுபோல என்று எண்ணி, பாலு சாருக்கு கனெக்ஷன் கொடுத்துவிட்டார்.

நான் என்று நினைத்துக்கொண்டு பாலு சாரிடம் கடகடவென்று மழலை மொழியில் ஏதோ பேசியிருக்கிறான் என் மகன். அவரும் பொறுமையாகக் கேட்டுப் பதில் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு, என்னை அழைத்தார்.

“ரவிபிரகாஷ், வாங்கோ! சித்த முன்னே உங்க பையனோடதான் பேசிண்டிருந்தேன். அக்கா அவனைப் போட்டு அடிக்கிறாளாம். வீட்டுக்குப் போனதும் அவளைக் கண்டிக்கணுமாம் நீங்க. அப்புறம் மறக்காம... கலர் கலரா இருக்குமாமே, காத்து ஊதற பந்து, அதை அவனுக்குன்னு தனியா ஒண்ணு வாங்கிண்டு போங்கோ. அக்கா தன்னோட பந்தை அவனுக்கு விளையாடக் கொடுக்க மாட்டேனென்கிறாளாம்...” என்று அவர் பேசப் பேச, நடந்த விஷயத்தை என்னால் யூகிக்க முடிந்தது.

பதறிவிட்டேன். “சார், மன்னிக்கணும்! தெரியாம உங்களுக்குப் போன் பண்ணிட்டான். வீட்டுக்குப் போனதும், இனிமே போனையே தொடக் கூடாதுன்னு அவனை எச்சரிச்சு வைக்கிறேன்” என்றேன்.

“அடடா... தப்பு பண்றேளே! உங்க பையனுக்கு என்ன மூணு வயசு இருக்குமா... இதுக்குள்ள ஆபீசுக்குப் போன் பண்ணி உங்களோட பேசணும்னு தெரிஞ்சிருக்கே... குழந்தையை அப்ரிஷியேட் பண்ணுங்கோ!” என்று நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டி, “குழந்தைக்குப் பிடிச்சது ஏதாவது வாங்கிக்கொண்டு போய்க் கொடுங்கோ!” என்றார். “காத்து ஊதற பந்து... அதை மறந்துடப் போறேள்!” என்று சொல்லிச் சிரித்தார்.

நினைக்கும்போதெல்லாம் நெஞ்சை நெகிழ்த்தும் சம்பவம் இது.

எளிமையே பெருமை, எழுத்தே ஆயுதம் என வாழ்ந்தவர்; தாம் மறைந்த பின்பும் தமது உடலை மண்ணுக்குப் போகாமல் மருத்துவ மாணவர்களின் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் தானமாகத் தந்துவிட்டுப் போய்விட்டார் அந்தப் பத்திரிகையுலகப் பண்பாளர்!

அவரின் 84-வது பிறந்த நாள் இன்று. (28.12.2020)

0 comments: