நாஞ்சில் நாடனும் விகடனும் பின்னே நானும்!

 

நான் சிறுகதை எழுதத் தொடங்கிய புதிது. கல்கியில் தொடங்கிய என் எழுத்துப் பயணம் ஆனந்த விகடன், சாவி, குங்குமம், தினமணி கதிர் எனத் தொடர்ந்தது. ஒருமுறை என்னுடைய ஏழு சிறுகதைகள் அடுத்தடுத்து ஆனந்த விகடன் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரசுரத்துக்காகக் காத்திருந்தன. அடுத்ததாக விகடன் ஆசிரியரிடமிருந்து வந்த ஒரு கடிதம் என் மீது நெருப்பை அள்ளி வீசியது.

நான் விகடன் பரிசீலனைக்காக அனுப்பிய ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ என்னும் தலைப்பிலான சிறுகதை ‘தீபம்’ இதழில் நாஞ்சில் நாடன் எழுதியிருந்த ‘முரண்டு’ சிறுகதையை 100 சதவிகிதம் ஒத்திருப்பதாகச் சொல்லி, ‘அவர் வட்டார வழக்கில் எழுதியுள்ளார். நீங்கள் பிராமண நடையில் எழுதியுள்ளீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம். காப்பியடித்து எழுதியதோடல்லாமல் அதை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பியும் வைத்துள்ளீர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களின் மற்ற கதைகளையும் ஏன் நிராகரிக்கக் கூடாது?’ என்று கேட்டிருந்தார்.

நான் உடனே கோபமாக, ‘தீர்மானமே செய்துவிட்டீர்கள் நான் காப்பிதான் அடித்தேன் என்று. ‘அனுப்பியும்’ என்பதில் உள்ள ‘உம்’ என்னைக் குத்துகிறது. உங்களுக்கு எந்த விளக்கமும் அளிக்க நான் தயாராக இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என் கதைகள் அனைத்தையும் உடனே திருப்பிவிடுங்கள். எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. எழுத்துக் கடலில் ஒரு துளி குறைந்தால் இலக்கியத்துக்கு என்ன நஷ்டம்?’ என்று பதில் அனுப்பினேன்.

ஆனால், விகடன் ஆசிரியரோ ‘இலக்கியச் சிந்தனை’ தொகுப்புப் புத்தகம் ஒன்றை எனக்கு அனுப்பிவைத்து, ‘இதில் இடம்பெற்றிருக்கும் நாஞ்சில் நாடணின் ‘முரண்டு’ சிறுகதையைப் படியுங்கள். எங்கள் சந்தேகம் சரி என்று புரிந்துகொள்வீர்கள்’ என்று எழுதியிருந்தார். படித்தேன். அந்தக் கதையில் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான்; என் கதையிலும் ஒருவன் மனைவியின் பயத்தைப் போக்குவதற்காக கு.க. ஆபரேஷன் செய்துகொள்கிறான். இந்த ஒரு ஒற்றுமையைத் தவிர, கதையின் போக்கும் நோக்கும் வெவ்வேறு.

இதை என் கடிதத்தில் குறிப்பிட்டு, “நான் வசிப்பது ஒரு குக்கிராமத்தில். ஆனந்த விகடன், குமுதம், கல்கி ஆகிய மூன்று பத்திரிகைகள் தவிர வேறு பத்திரிகைகள் பற்றி எனக்குத் தெரியாது. ‘தீபம்’ என்றொரு பத்திரிகை வருவதையே உங்கள் கடிதத்தின் மூலம்தான் அறிகிறேன். இதையெல்லாம் என் விளக்கத்துக்காகச் சொல்லவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட என் சிறுகதைகளை தயவுசெய்து எனக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள். சந்தேக முள் ஒன்று தைத்துவிட்டால், அடுத்து நான் என்ன கதை அனுப்பினாலும் இதை இவன் சுயமாகத்தான் எழுதினானா, அல்லது எங்கிருந்தாவது சுட்டானா என்று உங்கள் மனத்தில் ஒரு சந்தேகம் நெருடிக்கொண்டே இருக்கும். இப்படியான நிலையில் ஆனந்த விகடனில் என் சிறுகதைகள் வெளியாவதை நான் விரும்பவில்லை. பெரும் இலக்கியவாதி நாஞ்சில் நாடனின் எழுத்தின் தரத்துக்கு நிகராக என் சிந்தனையும் இருந்திருக்கிறது என்கிற ஆத்ம திருப்தியோடு, என் சிறுகதைகளைத் தங்களிடமிருந்து திரும்பப் பெறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று எழுதினேன்.

ஆனால், விகடன் ஆசிரியர் என் சிறுகதைகள் எதையும் திருப்பி அனுப்பவில்லை. “உங்கள் கதைகளை நாங்கள் திருப்பி அனுப்புவதாக இல்லை. அவை கட்டாயம் விகடனில் பிரசுரமாகும். உங்கள் மீது எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல், வழக்கம்போல் உங்கள் படைப்புகளை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பிக் கொண்டிருங்கள்” என்று எழுதியிருந்தார்.

அதன் பின்பே நாஞ்சில் நாடன் பற்றியும் அவரின் படைப்புகள் பற்றியும் நான் அறிந்துகொண்டேன்.

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர் நாஞ்சில் நாடன். நாஞ்சில் பிரதேச மக்களும் குமரி மாவட்டத்து மண்ணும் கலந்து உருவானவை இவரது படைப்புகள். இவரின் எழுத்துகளில் நகைச்சுவையும் சமூகத்தின் மீதான விமர்சனமும் கலந்து இழையோடும்.

இயற்பெயர் சுப்பிரமணியன். வேலை காரணமாகப் பல வருட காலம் மும்பையில் வசித்தவர். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.

இவரின் ‘தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்’ சிறுகதைத் தொகுதி, புகழ்பெற்றதொரு தொகுப்பு. இவரின் முதலும் முக்கியமுமான நாவல் ‘தலைகீழ் விகிதங்கள்’. இதைத்தான் இயக்குநர் தங்கர்பச்சான் ‘சொல்ல மறந்த கதை’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்தார். மிதவை, பேய்க்கொட்டு, சதுரங்கக் குதிரைகள், என்பிலதனை வெயில் காயும், எட்டுத் திக்கும் மதயானை என நாஞ்சில் நாடனின் பல நாவல்கள் பிரபலமானவை. இவரது ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்கு 2010-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

நாஞ்சில் நாடன் என்னைவிட 10 வயது மூத்தவர். அவரின் 73-வது பிறந்த நாள் இன்று.
(31.12.2020)

 

பகவான் ரமணர்!


 ‘நான் யார்?’ என்ற கேள்வியைத் தனக்குள் எழுப்பிக்கொண்டு, ஆத்ம தரிசனம் தேடிப் புறப்பட்டு, அண்ணாமலையாரின் பாதங்களைச் சரணடைந்து, தாம் வேறு, தமது உடல் வேறு, அழியாத ஆத்மாவே நாம் என்னும் ‘அபரோக்ஷ அனுபூதி’ நிலையை எய்தியவர் பகவான் ரமண மகரிஷி. நம் காலத்தில் வாழ்ந்த மகான் இவர் என்பதால், நாம் உள்ளபடியே பாக்கியவான்களாவோம்.

திருச்சுழி கிராமத்தில் சுந்தரமய்யர், அழகம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ரமணர். இயற்பெயர் வெங்கட்ராமன். இவர் தன் தந்தையை ‘அப்பா’ என்று அழைக்காமல் ‘நாயனா’ என்று தெலுங்கில்தான் அழைப்பார். உறவினரான லட்சுமண அய்யர் என்பரிடமிருந்துதான் தெலுங்கு மொழி இவருக்கும் தொற்றிக்கொண்டது. இவரை ‘ரமணா’ என்று முதன்முதலில் அழைத்தவர் லட்சுமண அய்யர்தான்.

தன் காதுகளில் ‘வா, வா’ என்று அழைத்துக்கொண்டிருந்த அருணாசலேஸ்வரரைத் தேடிச் சென்று கோயிலுக்குள் நுழைந்தவுடனே ரமணர் கூறிய முதல் வார்த்தைகள்... “அப்பா, நான் வந்துவிட்டேன்!”

கோயிலை விட்டு வெளியே வந்தவுடன், அய்யங்குளம் புஷ்கரணிக்கு அருகே, தன் கருமையான கேசத்தை வெட்டி எறிந்தார். பூணூலைக் கழற்றிப் போட்டார். தன்னிடம் மிச்சம் மீதி இருந்த காசுகள், பண்டங்கள் எல்லாவற்றையும் வீசி எறிந்தார். தான் உடுத்தியிருந்த வேட்டியிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்துக் கோவணமாக அணிந்து கொண்டார். மொட்டை அடித்த பிறகு குளிக்க வேண்டும் அல்லவா... ஆனால், அதையும் ஆடம்பரமாகக் கருதிய ரமணர் குளிக்காமலே புறப்படத் தயாரானபோது, வருணபகவான் பொழிந்து ரமணரைக் குளிப்பாட்டினார்.

தன் வாழ்நாளில் 38 வருடங்களை ரமணருக்கும் மற்ற ஆசிரம அன்பர்களுக்கும் சமைத்துப் போடுவதையே தன் பிறவிப் பயனாகக் கருதியவர் லட்சுமி அம்மாள். எல்லாரும் இவரை எச்சம்மாள் என்று அழைப்பர். எச்சம்மாளின் முதிய வயதையும் உடல்நிலையையும் மனதில் கொண்டு, ‘இனி ரமணருக்கு உணவு கொண்டு வர வேண்டாம்’ என்று ஆசிரம அன்பர்கள் ஒருமுறை சொல்லிவிட, பெருந்துக்கத்தோடு தன் வீட்டில் அடைந்து கிடந்தார் லட்சுமி அம்மாள். அன்றிலிருந்து தான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லிவிட்டார் ரமணர். ஆசிரமவாசிகள் பின்னர் வழக்கம்போல் லட்சுமி அம்மாளை உணவு கொண்டுவரச் சொல்லிப் பணித்த பின்புதான் உண்ணத் தொடங்கினார் ரமணர். லட்சுமி அம்மாள் ரமணர் மீது வைத்திருக்கும் பக்தியையும், ரமணர் லட்சுமி அம்மாள் மீது வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் அப்போதுதான் புரிந்துகொண்டார்கள் ஆசிரம அன்பர்கள்.

அதே போன்று, கீரைப்பாட்டி என்னும் ஏழைப் பெண்மணி மீதும் பரிவு காட்டுவார் ரமணர். அவள் தினமும் கொண்டு வந்து தரும் கீரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தக் கீரைப் பாட்டிதான் பின்னாளில் ஆசிரமத்தில் ‘லட்சுமி’ என்னும் பசுவாகப் பிறந்தாள் என்பது ஆசிரம அன்பர்களின் நம்பிக்கை.

மகா பூஜை போன்ற விசேஷ நாள்களில் ஆசிரமத்தில் அனைவருக்கு விருந்துச் சாப்பாடு உண்டு. ஆனால், ஏழை எளியவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுச் சென்ற பிறகுதான் ஆசிரமவாசிகள் சாப்பிட வேண்டும் என்னும் ஒரு விதி அங்கே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்துக்குப் பின்பு இந்த விதியை மீறி, ஏழை எளிய மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே இன்னொரு புறத்தில் ஆசிரமவாசிகளுக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதனால் ஒருமுறை, உணவு தீர்ந்துபோய் ஓர் ஏழைக்கு உணவு கிடைக்காமல் போய்விட்டது. இதை அறிந்து பகவான் ரமணர் பெரிதும் மனம் வருந்தினார். அடுத்த நாள், உணவு பரிமாறப்படும்போது, பகவான் ரமணரும் உணவுக்காகக் காத்திருக்கும் ஏழைகள் நிற்கும் வரிசையில் ஒருவராகத் தாமும் போய் நின்றுகொண்டார். ஆசிரமவாசிகள் எவ்வளவு வருந்தி அழைத்தும் முதலில் சென்று உண்ண மறுத்துவிட்டார். ஏழை எளிய மக்கள் முதலில் உணவருந்த வேண்டும் என்னும் வழக்கம் அன்றிலிருந்து மீண்டும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

பவ நகர் ராணி ஒரு வெள்ளை மயிலை ரமணருக்குப் பரிசாகக் கொடுத்தாள். அது அடிக்கடி எங்கேயாவது பறந்து போய்விடும். ஆசிரமத்தினர் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருவார்கள். அந்த மயிலைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, “சுட்டிப் பயலே, எங்கேடா போயிட்டே? காட்டுல நிறைய துஷ்ட மிருகங்கள் இருக்கு. அதனால, எங்கேயும் போகாதே, சமர்த்தா இங்கேயே இரு, என்ன?’ என்று கொஞ்சுவார் ரமணர். மயிலுக்கு இசை பிடிக்கும், குறிப்பாகப் புல்லாங்குழல் இசை பிடிக்கும் என்பார் ரமணர்.

ரமணருக்கு இடது முழங்கால் அருகே ‘சர்கோமா’ என்ற புற்றுநோய்க் கட்டி வந்தது. அது பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால், பக்தர்கள் வாய்விட்டுக் கதறி அழுதார்கள். ஒருநாள் ரமணர் தன் சாப்பாட்டுக்கான இலையைத் தைத்துக்கொண்டு இருந்தபோது, அருகில் இருந்த பக்தர்களிடம் சொன்னார்... ‘கஷ்டப்பட்டுத் தையல் இலையை உருவாக்குகிறோம். சாப்பிட்டு முடித்ததும் இலையை வீசி எறிகிறோம். அப்படித்தான் இந்த உடம்பும்!” என்றார்.

1950 ஏப்ரல் 14-ம் தேதி, பகவான் ரமணர் சித்தியடைந்தார்.

ரமணர் குறித்து கிரேஸி மோகன் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. ரமணர் களைப்புடன் இருப்பதாக அறிந்த ஒரு பக்தர், “சுவாமி, உடம்புக்கு என்ன பண்ணுகிறது? தெம்பாக திடமாக இருக்கிறீர்களா?” என்று கவலையுடன் விசாரித்தாராம். அதற்கு ரமணர் சிரித்துக்கொண்டே, “இந்த உடம்புக்கு என்ன கேடு? நாலு பேர் தூக்கிக்கொண்டு போக வேண்டிய இந்த உடம்பை நான் ஒருவன் மட்டுமே தூக்கிக்கொண்டு போகிறேனே... தெம்புக்கு என்ன குறைச்சல்?” என்றாராம். அவரல்லவோ மகான்!

பகவான் ரமணரின் 141-வது ஜயந்தி தினம் இன்று! (30.12.2020)

 

 

 

 

 

 

 

ஆ(ஹா)ராதனா!


னக்குத் தெரிந்து ஆராதனாபடத்துக்குப் பின்புதான் இந்திப் படங்களையும் ரசிக்கும் மனோபாவம் தமிழ்நாட்டில் வளர்ந்தது. ‘ஆராதனா’ ரிலீஸானபோது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் மனதில் முதன்முதலில் இடம் பிடித்த இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாதான். ‘மேரே சப்புனோக்கி ரானி கபு ஆயே கீது’ பாடலை மொழி தெரியாமல் தப்புத் தப்பாகவேனும் அடிக்கடி பாடி மகிழ்ந்திருக்கிறேன். இந்திப் பாடகர்கள் கிஷோர் குமார், முகம்மது ரஃபி ஆகியோரை ரசிக்கத் தொடங்கியதும் ‘ஆராதனா’ காலத்திலிருந்துதான்.

ராஜேஷ் கன்னாவுக்கு 70-களில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. குறிப்பாக, ரசிகைகள் அதிகம்! ரத்தத்தால் கையெழுத்திட்டுக் கடிதம் அனுப்பும் அளவுக்கு அதி தீவிர ரசிகைகள் அவருக்கு இருந்ததுபோல் வேறு எந்த நடிகருக்காவது இருந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ‘ஒரு படப்பிடிப்புக்காக சென்னை வந்திருந்த ராஜேஷ் கன்னாவைப் பார்ப்பதற்காக, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நடு ராத்திரி சுமார் 600 பெண்கள் வரை வந்திருந்ததைக் கண்டு ஆடிப் போனேன்என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், அப்போது அவருடன் சென்னை வந்திருந்த இந்தி நடிகை மும்தாஜ். இவரும் ராஜேஷ் கன்னாவும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்! ராஜேஷ் கன்னாவும் மும்தாஜும் நடித்த ‘ஆப் கி கஸம்’ படத்தில்ஜெய் ஜெய் ஷிவ ஷங்கர்பாடல்,தோ ராஸ்தே’ படத்தில் ‘பிந்தியா சம்க்கேகி’, ‘சுப் கயே ஸாரே’ எனப் பலப்பல பாடல் காட்சிகளை எத்தனையோ முறை பார்த்து ரசித்திருக்கிறேன்.

கிஷோர் குமார் அதிகம் பின்னணி பாடியது ராஜேஷ் கன்னாவுக்குதான். 92 படங்களில் சுமார் 245 பாடல்கள் பாடியிருக்கிறார். ‘ஜிந்தகி ஏக் சஃபர் ஹைசுஹானா...’, ‘சலா ஜாதா ஹூன்..’ போன்ற பாடல்களில் ‘யோட்லிங்’ செய்து பாடியதும் ராஜேஷ் கன்னாவுக்குதான்.

பொதுவாக, பாடல் காட்சிகளில் ஓரிடத்திலாவது ராஜேஷ் கன்னா கண்களை மெல்ல மூடி, தலையை ரசிக பாவனையில் ஓர் அசை அசைப்பார் பாருங்கள், அத்தனை அழகாக இருக்கும்!

வெகு காலம் கழித்து, ஹேவல்ஸ்ஃபேன் விளம்பரங்களில் திடுமென ராஜேஷ் கன்னாவின் முதிய தோற்றத்தைப் பார்த்து மனம் மிக சங்கடப்பட்டது. பழைய துறுதுறுப்பு அகன்று ரொம்பவே தளர்ந்திருந்தார் ராஜேஷ் கன்னா.

வயது முதிர்ச்சியினாலும் தள்ளாமையினாலும் மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அட்மிட் ஆனபோது ஒரு ரசிகனாக வருந்தினேன். தான் பூரண நலம் பெற்றுவிட்டதாகவும்,இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வந்துவிடுவேன்’ என்றும் அவரே அறிக்கை விட்டபோது மனம் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது. ஆனால், 2012-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி அவர் மரணமடைந்ததைக் கேள்விப்பட்டுத் துயருற்றது மனம்.

இன்று ராஜேஷ் கன்னாவின் 78-வது பிறந்த நாள். (29.12.2020)

 

 

பத்திரிகையுலகப் பண்பாளர்!

 

லக்கியக் கூட்டம், கவியரங்கம், சினிமா டிஸ்கஷன், ஆன்மிக உபன்யாசம், அறிவியல் விளக்கக் கூட்டம், இயற்கை ஆர்வலர்களின் கருத்தரங்கு, வேளாண் அறிவியல் ஆலோசனைக் கூட்டம், சட்ட நுணுக்க விளக்கக் கூட்டம்... இத்தனையிலும் அடுத்தடுத்துக் கலந்துகொண்டுவிட்டு, கூடவே கொஞ்ச நேரம் சினிமா ஃபெஸ்டிவலில் உற்சாகமாக வலம் வந்து, டிஸ்கவரி சேனல் கண்டு ரசித்து, நகைச்சுவைப் பட்டிமன்றத்தைக் கேட்டு மகிழ்ந்து, புதிர் விளையாட்டில் கலந்துகொண்டு குதூகலித்தால், அந்த அனுபவம் எப்படி இருக்கும்?

விகடன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களுடன் இரண்டு மணி நேரம் உரையாடியது போன்று இருக்கும்.

என் வீட்டுக்கு லேண்ட் லைன் கிடைத்த புதிது. என் மகனுக்கு அப்போது மூன்று வயதுக்குள்தான் இருக்கும். ஒரு நாள், என்னுடன் பேசுவதற்காக விகடன் அலுவலகத்துக்கு டயல் செய்துவிட்டான். அப்போதெல்லாம் டெலிபோன் ஆபரேட்டர்தான் எடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு இணைப்பு கொடுப்பார். இவன் பிரமாதமாக ‘எடிட்டரோடு பேசணும்’ என்று சொல்லிவிட்டான். என்னை விகடன் எடிட்டர் என்றே நினைத்துக்கொண்டுவிட்டானோ என்னவோ! டெலிபோன் ஆபரேட்டரும் கேள்வி கேட்காமல், ஆசிரியரின் பேரக் குழந்தை யாரோ பேச விரும்புகிறதுபோல என்று எண்ணி, பாலு சாருக்கு கனெக்ஷன் கொடுத்துவிட்டார்.

நான் என்று நினைத்துக்கொண்டு பாலு சாரிடம் கடகடவென்று மழலை மொழியில் ஏதோ பேசியிருக்கிறான் என் மகன். அவரும் பொறுமையாகக் கேட்டுப் பதில் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு, என்னை அழைத்தார்.

“ரவிபிரகாஷ், வாங்கோ! சித்த முன்னே உங்க பையனோடதான் பேசிண்டிருந்தேன். அக்கா அவனைப் போட்டு அடிக்கிறாளாம். வீட்டுக்குப் போனதும் அவளைக் கண்டிக்கணுமாம் நீங்க. அப்புறம் மறக்காம... கலர் கலரா இருக்குமாமே, காத்து ஊதற பந்து, அதை அவனுக்குன்னு தனியா ஒண்ணு வாங்கிண்டு போங்கோ. அக்கா தன்னோட பந்தை அவனுக்கு விளையாடக் கொடுக்க மாட்டேனென்கிறாளாம்...” என்று அவர் பேசப் பேச, நடந்த விஷயத்தை என்னால் யூகிக்க முடிந்தது.

பதறிவிட்டேன். “சார், மன்னிக்கணும்! தெரியாம உங்களுக்குப் போன் பண்ணிட்டான். வீட்டுக்குப் போனதும், இனிமே போனையே தொடக் கூடாதுன்னு அவனை எச்சரிச்சு வைக்கிறேன்” என்றேன்.

“அடடா... தப்பு பண்றேளே! உங்க பையனுக்கு என்ன மூணு வயசு இருக்குமா... இதுக்குள்ள ஆபீசுக்குப் போன் பண்ணி உங்களோட பேசணும்னு தெரிஞ்சிருக்கே... குழந்தையை அப்ரிஷியேட் பண்ணுங்கோ!” என்று நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டி, “குழந்தைக்குப் பிடிச்சது ஏதாவது வாங்கிக்கொண்டு போய்க் கொடுங்கோ!” என்றார். “காத்து ஊதற பந்து... அதை மறந்துடப் போறேள்!” என்று சொல்லிச் சிரித்தார்.

நினைக்கும்போதெல்லாம் நெஞ்சை நெகிழ்த்தும் சம்பவம் இது.

எளிமையே பெருமை, எழுத்தே ஆயுதம் என வாழ்ந்தவர்; தாம் மறைந்த பின்பும் தமது உடலை மண்ணுக்குப் போகாமல் மருத்துவ மாணவர்களின் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் தானமாகத் தந்துவிட்டுப் போய்விட்டார் அந்தப் பத்திரிகையுலகப் பண்பாளர்!

அவரின் 84-வது பிறந்த நாள் இன்று. (28.12.2020)

நடிகையர் திலகம்!

 

நடிகையர் திலகம் சாவித்திரி – 26.12.2020

‘கோமா’ என்ற சொல் பிரபலமானது, நடிகையர் திலகம் சாவித்திரி உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஒன்றரை வருடங்களுக்கு மேல் கோமாவில் படுக்கையில் வீழ்ந்திருந்தபோதுதான். தமிழ்த் திரையுலகில் முடிசூடா ராணியாக வலம் வந்த சாவித்திரியின் மறைவு ஒரு துயரமான நிகழ்வு. சாவித்திரி மறைந்தபோது அவருக்கு வயது 45-தான்!

‘சரஸ்வதி சபதம்’ படத்தில் சரஸ்வதியாக வந்து வீணையை மீட்டியபடி சாவித்திரி பாடும் அந்த அழகுக் காட்சி இன்னும் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது. ‘நவராத்திரி’ படத்தில் நடிகர் திலகத்தின் ஒன்பது வேடங்களுக்கும் ஈடு கொடுத்து நடித்திருப்பார். குறிப்பாக, கூத்துக் கலைஞராக வரும் சிவாஜியுடன் தெருக்கூத்து ஆடும் காட்சியின் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ‘திருவிளையாடல்’, ‘அமர தீபம்’, ‘ஆயிரம் ரூபாய்’, ‘மிஸ்ஸியம்மா’ எனப் பல படங்கள் சாவித்திரியின் அபார நடிப்பாற்றலுக்குக் கட்டியம் கூறுபவை. கடைசியாக அவரைத் திரையில் நான் பார்த்தது ‘நட்சத்திரம்’ படத்தில் நடிகை சாவித்திரியாகவே அவர் தோன்றியதைத்தான். அதன்பின்பும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எனினும், அவை மனதில் தங்கவில்லை.

குழந்தை மனசு கொண்டவர் சாவித்திரி. ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிப்பதென முடிவானபோது, அதில் முதலில் சாவித்திரியைத்தான் நடிக்க வைக்கத் திட்டமிட்டார்கள் தயாரிப்பாளர் பெருமாள் முதலியாரும், இயக்குநர்கள் கிருஷ்ணன்–பஞ்சுவும். இதற்காக, சென்னையில் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை எம்.ஆர்.ராதா நடத்தியபோது, அதைப் பார்ப்பதற்காக சாவித்திரியை அழைத்துச் சென்றார்கள். அப்போது அவருக்கு 16, 17 வயசு இருக்கும். ஆரம்பத்தில் நாடகத்தைக் குதூகலமாக ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த சாவித்திரி, எம்.ஆர்.ராதா குஷ்டரோகியாக வேடம் பூண்டு நடிக்கத் தொடங்கியவுடன் நடுங்கத் தொடங்கிவிட்டார். கை கால்கள் உதறலெடுத்தன. மாடிப்படியில் உதைத்துத் தள்ளும் காட்சியில், ‘அடியே காந்தா…’ என்று எம்.ஆர்.ராதா அலறிக்கொண்டே படிகளில் உருண்டு விழுந்தபோது, பயந்தடித்துக்கொண்டு வெளியேறி வீட்டுக்குப் போய்விட்டார் சாவித்திரி. அந்தப் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தந்துவிட்டார்.

நடிகையர் திலகத்தின் நினைவு நாள் இன்று.