எம்.பி-3 என்று ஒரு சமாசாரம் இப்போது இளைஞர்களிடையே பரவலாக உபயோகத்தில் உள்ளது. ஒரு சிடி-யில் எம்.பி-3 ஃபார்மேட்டில் இருநூறு பாட்டுக்களைப் பதிவு செய்வார்களே, அது அல்ல நான் சொல்வது. ஒரு சின்ன சதுர வடிவ ரப்பர் சைஸில் இருக்கும் இதை யு.எஸ்.பி எம்.பி-3 என்கிறார்கள். இந்தச் சின்னூண்டு சமாசாரத்துக்குள் நமக்குப் பிடித்தமான 200 பாட்டுக்களைப் பதிந்து வைத்துக்கொண்டு, சின்ன வேர்க்கடலை கேக் மாதிரி இருக்கும் அதைச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு, காதில் இயர் போன் சொருகிக்கொண்டு, காலை வாக் போய்க்கொண்டே, ஓடிக்கொண்டே, பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டே, படுத்துக்கொண்டே, சாப்பிட்டுக்கொண்டே, ஒன் பாத்ரூம் போய்க்கொண்டே என எப்பொழுதும், எல்லா நேரமும் சுகானுபவமாகக் கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம்.ரொம்ப நாள் நான் மற்றவர்கள் இயர் போன் சொருகியிருப்பதைப் பார்த்து, செல்போனில்தான் பாட்டு கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். என் பையன்தான் யு.எஸ்.பி. எம்.பி-3 பற்றிச் சொல்லி, “விலை ஒண்ணும் அதிகம் இல்லைப்பா. 300 ரூபாய் 400 ரூபாய்க்குள்தான் இருக்கும். எனக்கு ஒண்ணு வாங்கிக் கொடுப்பா” என்றான். “இந்தக் குவார்ட்டர்லியில நீ ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தேன்னா வாங்கித் தரேன்” என்று கண்டிஷன் போடுகிற அப்பா இல்லை நான். எனக்கே “அட, இது புதுசா இருக்கே!” என்று தோன்ற, பையனுக்கு ஒன்று, மகளுக்கு ஒன்று, மனைவிக்கு ஒன்று, என் அப்பாவுக்கு ஒன்று, எனக்கு ஒன்று என ஐந்து எம்.பி.3-க்களை ‘அப்படியே ஒரு கூறு என்ன விலைங்க?’ என்று பேரம் பேசி ரிச்சி ஸ்ட்ரீட்டில் ஒன்று 300 ரூபாய் மேனிக்கு 1,500 ரூபாய் கொடுத்து மறுநாளே வாங்கி வந்துவிட்டேன்.
மகன் மற்றும் மகளின் எம்.பி.3-யில் முழுக்க முழுக்க நிரம்பியிருப்பது லேட்டஸ்ட் பாடல்கள். ‘ஹசிலி பிசிலி’, ‘அட ரோஸு ரோஸு ரோஸு’, ‘கோடானுகோடி’, ‘மியாவ் மியாவ் பூனே’ இப்படி. மனைவியின் எம்.பி.3-யில் எல்லாமே எஸ்.பி.பி. பாடல்கள். ‘மங்கையரில் மகராணி’, ‘பொன்னாரம் பூவாரம்’ இப்படி. அப்பாவின் எம்.பி.3-யில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.கே.டி.பாகவதர், டி.எம்.சௌந்தர்ராஜனின் முருகன் பாடல்கள் இப்படியாக இருக்கின்றன.
என் எம்.பி-3 எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது. ‘டாடி மம்மி வீட்டில் இல்லே...’ என்று பாடி முடித்த கையோடு, ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’ என்று ஆரம்பிப்பார் டி.எம்.எஸ். அது முடிந்ததும், ‘தூ சீஸு படீஹே மஸ்து மஸ்து’ என்று மொஹ்ரா ஹிந்திப் பாட்டு ஓடும். அடுத்து ‘ஷீ ஈஸ் ஸோ லக்கி...’ என்று குரலைக் குழைப்பார் பிரிட்னி ஸ்பியர்ஸ். சட்டென்று, ‘சூ சூ மாரி...’ ஒலிக்கும். அடுத்து ‘பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்க’ என்பார் டி.எம்.எஸ். தடக்கென்று ‘அற்புதத் தீவு’ படத்தின் ‘சக்கரக் கட்டிக்கும்... வா... வா...’ பாட்டு ஓடும். ஆர்ப்பாட்டமான இந்தப் பாட்டு முடிந்த கையோடு, இதமும் பதமுமான குரலில் ‘மொஹப்பத்கி சாஹர்’ என்று கஸல் அமிர்தம் வழங்குவார் பீனாஸ் மஸானி. கேட்கக் கேட்கத் தமாஷாக இருக்கிறது.
எம்.பி.3-யால் பாட்டுக் கேட்டு ஆனந்திப்பது மட்டும்தான் உபயோகம் என்று நினைத்திருந்தேன். இல்லை. இன்னும் பல உபயோகங்களும் இருக்கின்றன என்பது நடைமுறையில் தெரிய வந்தது.
வீட்டில் இருக்கும்போது இயர்போனைக் காதில் மாட்டிக்கொண்டு எம்.பி.3-ஐ ஓடவிட்டால், உருப்படாத சீரியல்களிலிருந்து தப்பிக்கலாம். ‘உறவுகளாலே, உறவுகளாலே... உலகம் தொடர்கின்றது...’ என்று அலறும் நித்யஸ்ரீயின் ஹிஸ்டீரியா குரலையும், ‘யம்மா... ராஜேஸ்வரீ...’ என்கிற கதறலையும் காதுக்குள் நுழையாதவாறு தடுக்கலாம். தவிர, லபோ லபோ ஒப்பாரிகள்... உன்னைக் கொன்னுடுவேன், ஒழிச்சுடுவேன் போன்ற சவால்கள், அழுகைகள் ஒரு கண்றாவியும் காதில் ஏறாமல், நாம் நமக்குப் பிடித்தமான பாடலோடு ஐக்கியமாகலாம்.
வீட்டிலிருந்து பஸ் ஸ்டேண்ட் அவ்வளவு தூரமாயிற்றே என்று முன்பெல்லாம் சலிப்பாக இருக்கும் நடப்பதற்கு. எம்.பி-3 வந்ததிலிருந்து சலிப்பு போயே போச்சு! காதில் மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கிவிட்டால், பத்து மைல் கூட நடந்துவிடலாம் போன்ற உற்சாகம்!
பஸ்ஸில் கூட்டம், நெரிசல், உட்கார இடம் இல்லை; டிராஃபிக்கில் பஸ் மணிக்கணக்காக நிற்கிறது. முன்னெல்லாம் கடுப்பாக இருக்கும். எம்.பி-3 அந்தக் கடுப்பைப் போக்கிவிட்டது. ஒரு கம்பியைப் பிடித்துக்கொண்டு வாகாக நின்றுகொண்டுவிட்டால், பஸ் எப்போது வேண்டுமானாலும் கிளம்பட்டும் என்று கவலையே இல்லாமல், நாம்பாட்டுக்குச் சுகமாகப் பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கலாம்.
கூட்ட நெரிசலில், ‘நீ என்ன இடித்துவிட்டாய்... என் காலை மிதித்துவிட்டாய்... பையைத் தள்ளி வை... உன் பாட்டன் வூட்டு பஸ்ஸுன்னு நெனைப்பா... அவ்வளவு சொகுசா இருந்தா பிளஷர் கார் வெச்சுட்டுப் போக வேண்டியதுதானே... தா, பொம்பளைங்க நிக்குறாங்கன்னு அறிவிருக்குதா உனக்கு, சாயுறியே...’ என்பது மாதிரியான நாசூக்கான மற்றும் நாசூக்கில்லாத வசவுகளைக் காதிலேயே வாங்காமல் நாம் உண்டு, நம் எம்.பி-3 உண்டு என்று மோனத்தில் ஆழ்ந்திருக்கலாம்.
உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்தாலும், பல நேரங்களில் பக்கத்து ஸீட்காரரின் தொணதொணப்பைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும். “சார், அரசியல் இப்போ ரொம்பக் கெட்டுக் கூவம் மாதிரியாயிடுச்சு சார்! வர்றவன் அத்தனை பேரும், தான் எவ்வளவு கொள்ளையடிக்கலாம்னுதானே யோசனை பண்ணிக்கிட்டு வர்றான். பின்னே, ஒரு ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு செலவழிக்கிறவன் பதவிக்கு வந்ததும் அதை வட்டியும் முதலுமா எடுக்கணும்னு நினைப்பானா, மாட்டானா? பாலிடிக்ஸ் பிகேம் ப்யூர்லி பிசினஸ் நௌ எ டேய்ஸ்! காமராஜ், கக்கன் மாதிரி இன்னிக்கு இருக்கிறவங்கள்ல ஒருத்தனைச் சொல்லுங்க பார்ப்போம். இல்லியே சார்! எவனுமே இல்லியே?” ஒரு எம்.பி-3 இருந்தால் இவர் தொல்லை இல்லை. நாம் இயர்போனை எடுத்துக் காதில் மாட்டிக்கொண்டுவிட்டால், பக்கத்து ஸீட்காரர் பேச மாட்டார். அப்படியே ஏதாவது பேசினாலும், அது நம் காதில் விழாத மாதிரி ஒரு தியான பார்வையோடு அவரை ஏறிட்டால், அமைதியாகிவிடுவார். அப்படியும் விடாது அவர் தொணதொணத்தாலும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லையென்று, நம் சிந்தனையை வேறு இடத்தில் வலுவாக ஊன்றிக்கொள்ள ஒரு பிடிமானமாக நமது யு.எஸ்.பி. எம்.பி-3 பாடல்கள் நமக்குத் துணை நிற்கும்.
ஆபீஸிலும் சரி, வீட்டிலும் சரி... எம்.பி.3-யில் பாட்டுக் கேட்டபடியேதான் வேலை செய்கிறேன். இதனால் தேவையில்லாத போன்கால்களை அட்டெண்ட் செய்கிற தொல்லையும் ஒழிகிறது. அவசியம் பேச வேண்டிய நபர்கள் என்றால், மிஸ்டு கால் பார்த்துக் கூப்பிட்டுப் பேசிவிடலாம். மற்றபடி வேலை நேரத்தில் பிளேடு போடுகிற பேர்வழிகளிடமிருந்து தப்பிக்க எம்.பி-3 ரொம்பவே உதவியாக இருக்கிறது. ‘சரி, ரிங் அடித்தும் எடுக்காமல் சைலண்ட் மோடுக்கு மாற்றிவிட்டால் போகிறது’ என்று நினைக்கலாம். ஆனால், அப்புறம் ஒரு சமயம் மடக்கி, ‘என்ன சார், ரெண்டு மூணு தடவை ட்ரை பண்ணேன். எடுக்கவேயில்லையே?’ என்று கேட்பவர்களை எப்படிச் சமாளிப்பது? “அடடா! எம்.பி.3-யில பாட்டுக் கேட்டுட்டேயிருந்தேனா, ரிங் அடிச்சது காதுல விழலை!” என்று சொல்லிவிடலாம் அல்லவா?
மொத்தத்தில், ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்கிற வசனம் இந்த யு.எஸ்.பி. எம்.பி.3-க்குதான் கச்சிதமாகப் பொருந்தும்.
இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி யாராயிருந்தாலும், எங்கேயிருந்தாலும் வாழ்க, வளர்க!
*****
ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு ஏற்ற மிக நல்ல நாள் நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் இருக்கிறது.
ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு ஏற்ற மிக நல்ல நாள் நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் இருக்கிறது.
12 comments:
இங்கு சிங்கப்பூர் ல் நூற்றுக்கு என்பதுக்கும் மேலானோர் MP3 கேட்டவண்ணம் தான் பயணிப்பார்கள். நல்லதொரு செல் ஃ போனும், Bluetooth ஸ்டீரியோ ஹெட் ஃபோனும் இருந்தால் மிகவும் உபயோகமாயிருக்கும்.
பிரபாகர்.
எனக்கென்னவோ பாட்டு கேட்க ஒண்ணு, பேசுறதுக்கு ஒண்ணுன்னு தனித்தனியா வச்சுக்கிறதுக்கு விருப்பமில்லை.
8 ஜிபி அதிலேயே ஹசிலி பிசிலி, நறுமுகையே, ஏபிஸி நீ வாசி, ஏக் கஸல் பனாதி, கலபம் தராம் மட்டுமல்லாது குர்ஆனும் வைத்திருக்கிறேன். வகைப்படுத்தி வைத்து சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் கேட்பதால், ரசிக்க முடிகிறது.
கேட்கக் கேட்கத் தமாஷாவெல்லாம் இருப்பதில்லை. :)
முதல் ஒட்டு போட்ட கையோடு அந்த யு.எஸ்.பி. எம்.பி.3-யையும் வாங்கிடணும்னு தீர்மானிச்சுட்டேன்.
ரேகா ராகவன்
* சிங்கப்பூர் பத்தி அப்பப்போ சொல்றது சிறப்பா இருக்கு பிரபாகர்! நன்றி!
* உங்க பின்னூட்டத்துல ரெண்டு விஷயம் பீர்! எனக்குப் பாட்டுக் கேட்டுக்கிட்டிருக்கிறபோதே நடுவுல யாராவது பூந்து பேசுறது பிடிக்காது. அதனால எனக்குத் தனித்தனியா இருக்கிறதுதான் பிடிக்குது. வகைப்படுத்தி வெச்சுக் கேட்டால் இன்னது கேட்கப்போறோம்னு தெரிகிறதுனால ஒரு சுவாரசியமே எனக்கு இருக்கமாட்டேங்குது. சம்பந்தா சம்பந்தமில்லாம பாட்டுக்கள் வரபோதுதான் தமாஷா இருக்குது. சுவாரஸ்யமாகவும் இருக்குது. அது சரி, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வித ரசனை!
* ஒட்டு போட்ட கையின்னதும் நான் அப்படியே ஷாக்காயிட்டேன்! ஓட்டு போட்ட கைக்கு மோதிரம் செஞ்சு போட்டதா நினைச்சுக்கோங்க. நன்றி ராகவன்!
Dear Raviprakash,
Are all these songs that you (your family) have stored in the player - is it not pirated - i.e copied from different CDs and friends. I am sure you may have paid only Rs.300 for player. But how much for the songs ? It must have been free.
Imagine if we all start reading Vikatan free in Net or through friends (one person buying) and rest all are reading it.
Please share your thoughts on these.
thanks
Mahesh
அனானிமஸ்ஸாக வந்தாலும் அற்புதமான கேள்வியைக் கேட்டுப்புட்டீங்க. சொல்றேன். ஒரு படம் எடுக்கும்போதே பாடலை எழுதினவருக்கு இத்தனை ஆயிரம் ரூபா, இசையமைச்சவருக்கு இத்தனைக் கோடி ரூபான்னு கொடுத்து வாங்கிப் போட்டுப் படம் எடுத்து, அதைக் கோடிக்கணக்குல லாபம் வெச்சு வித்துப்புடறாங்க தயாரிப்பாளருங்க. அதை தியேட்டர்கள்ல ஓட்டி ஜனங்க கிட்டே காசு பார்த்துப்புடறாங்க டிஸ்ட்ரிப்யூட்டருங்க. அப்புறம் டி.வி-க்கும் வித்துப்புடறாங்க. ஸோ, அவங்கவங்க உழைப்புக்குண்டான பலன் (காசு) கிடைச்சுடுது. அதுக்கப்புறம் அந்தப் பாட்டை யார் எத்தனை முறை கேட்டாலும் ஃப்ரீதான்! பத்திரிகையைப் பொறுத்தவரைக்கும் அதன் விலைங்கிறது அதுல உள்ள சமாசாரத்துக்கு இல்லே. பத்திரிகை அச்சடிக்க உண்டான செலவுகளுக்கும், அதுல வேலை செய்யுறவங்களுக்குக் கொடுக்குற சம்பளத்துக்கும்தான். இப்பவே ஒரு பத்திரிகையை வாங்கி அஞ்சு பேர் படிக்கிறதா ஒரு கணக்கு இருக்கு. சரி, டி.வி-யில சினிமாக்களா, சீரியல்களா, பாடல் காட்சிகளா தெனம்தெனம் பார்த்துட்டேயிருக்கீங்களே, ஒவ்வொரு தடவையும் காசு கொடுத்துட்டா இருக்கீங்க? எப்பவோ ஒரு தடவை டி.வி. வாங்கிப் போட்டதோட சரி! அவ்வளவுதானே?
அருமையான பதிவு! நிற்க. அனானிமஸ்ஸாக வந்தவர் தன் பேரை மகேஷ்னு கொடுத்திருக்காரே, கவனிக்கலையா? அது இருக்கட்டும். அதென்ன வளவளன்னு ஒரு பதில். படப்பாடல் சிடி வெளியிட்டாங்கன்னா ஒரு லட்சமோ ரெண்டு லட்சமோ விற்பனையாகும். அதன் பிறகு, அதுலேர்ந்துதான் மத்தவங்கெல்லாம் கேட்பாங்க. பத்திரிகையும் அப்படித்தான். முதல்ல சில லட்சங்கள் விற்பனையாகுது. பிறகு அதையெல்லாம் மத்தவங்க ஃப்ரீயாகத்தானே படிக்கிறாங்க? இப்படி நச்சுனு பதில் சொல்வீங்களா? அதை விட்டு...
ஐயா எல்லாம் சரிதான்..!
கேட்க கேட்க இனிமையாக இருக்கும். வேலை செய்வதை சுலபமாக்கும். நேரம் போவதே தெரியாமல் போய் பொழுது போகும்..
ஆனால் இதில் இருக்கும் ஒரு ஆபத்தை உணராமல் இருக்கிறீர்கள்..
காதில் மாட்டும் ஒயர்போன் மைக்கினால் காதின் உட்புறச் செவி நரம்பில் நேரடியாக ஒலிகள் மோதுகின்றன. இதனால் அந்த நரம்புகள் மிக, மிக விரைவில் தனது பலத்தை இழந்து காது கேட்கும் திறன் குறையத் தொடங்கிவிடும்.
இன்னும் மோசமாக வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கு 40 வயதிலேயே இது தனது வேலையைக் காட்டிவிடும்.
இது புரியாமலோ, தெரியாமலோ இன்றைய இளைய சமுதாயத்தின் இதனை காதில் மாட்டிக் கொண்டே அலைகிறார்கள்.
இப்போதெல்லாம் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுக்கு வந்த பின்புதான் காது மந்தமாகிறது. ஆனால் வருங்காலத்தில் 40களிலேயே நமது வாரிசுகள் தங்களது காதினை இழக்கப் போவதென்னவோ உறுதிதான்.
அதனைப் பயன்படுத்துவோரில் 60 சதவிகிதத்தினரை நிச்சயம் இது பாதிக்கும்.
அனுபவப்பட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன்.. இது முற்றிலும் தவறான செயல்..
காது சம்பந்தமான மருத்துவர்களிடம் வேண்டுமானால் நீங்கள் ஆலோசித்துக் கொள்ளுங்கள்..!
முதல் முறையாக உங்களுக்கு இடும் பின்னூட்டமே நீண்டு போனதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்..!
அருமையான கருவி. ரெண்டொரு வருஷமா நான் எல்லாம் எம்பி எம்பி, நம் ஸ்டாப் வந்துட்டதா என்று பார்க்காமல் இருப்பதற்குக் காரணமே இந்த எம்.பி.த்ரீ தான்!
காசுக்கு பழுதில்லையானாலும் காதுக்கு பழுது என்று தெரிந்ததால் அளவோடு உபயோகம். இன்-டோரில் உபயோகிப்பதில்லை.-- கே.பி.ஜனா
Dear Raviprakash,
thanks for your detailed reply.
Appreciate your opinion.
Best wishes
Mahesh
* கிருபாநந்தினி மேடம், எனக்காக நீங்க பதில் சொன்னதுக்கு நன்றி!
* உண்மைத்தமிழன் ஐயா! நீங்க சொல்றதுலயும் உண்மை இல்லாம இல்லை! அதை நானும் கவனத்தில் வெச்சிருக்கேன். அது சரி, பின்னூட்டம் நீண்டு போனதுக்கு மன்னிக்கணுமா? அட என்னங்க... நீளமான பின்னூட்டத்துக்கு நான் உங்களுக்கு நீளமான நன்றியில்ல சொல்லணும். நன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி!
* திரு.கே.பி.ஜனா! எம்பி எம்பி எம்.பி.3; காசுக்குப் பழுதில்லைன்னாலும், காதுக்குப் பழுது! அடாடா! வார்த்தைகள் வந்து விழுதுங்க உங்களுக்கு!
* அனானிமஸ்னு சொன்னதுக்குக் கிருபா மேடம் கோவிச்சுக்கிட்டாங்க. ஆனா திரு.மகேஷ், நீங்க கோவிச்சுக்காம பின்னூட்டத்துக்கும் ஒரு பின்னூட்டம் போட்டதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை!
சார்,
திரு.மஹேஷ் சொன்னபடி, இயர் பிளக்ஸ் என்னும் சிறிய காதுக்குள் திணிக்கும் கருவி கண்டிப்பாக காதுகளை கேடு படுத்துமாம். அதற்குபதில் பின்னங்கழுத்து பகுதி வழியாக காது மடல்களை கவ்வும் ஸ்பாஞ்சு இயர் போன்ஸ் நல்லது, வெளிப்புறமாக வைத்துக்கொள்வதால் பிரச்சினை இருப்பதில்லையாம். நான் ஃபோன் ஸ்பீக்கரில் தான் கேட்கிறேன்.என் குல தெய்வம் எஸ்.பீ.பி, இளையராஜா,ரகுமான் பாடல்களோடு, கிரேஸி மோகன்,எஸ் வீ சேகர் காமடி நாடகங்கள் அடிக்கடி கேட்பதுண்டு.
Post a Comment