சென்ற பதிவின் தொடர்ச்சி...
தூரத்தே தெரிந்த கொள்ளிவாய்ப் பிசாசுகளைக் கொஞ்ச நேரம் உன்னித்துப் பார்த்தார் அப்பா. பின்பு, பயங்கரமான காரியம் ஒன்றைச் செய்தார்.“அப்பா... அப்பா... வேண்டாம்ப்பா!” என்று நான் அலறினேன். அப்பா கேட்காமல், “சீ! நான் இருக்கேன்ல... அப்புறம் என்ன பயம்? வா, இப்பவே அங்கே போய் அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பார்த்துட்டு வருவோம்!” என்று என்னை இழுத்துக் கொண்டு கீழே இறங்கினார்.
படிகளில் இறங்கிக் கீழே வந்தோம். பாதுகாப்புக்கு அப்பா ஒரு பெரிய கழியைக் கையில் எடுத்துக் கொண்டார். அந்தத் தெருவில் முனை வீடு எங்களுடையது. அடுத்து ஒரு பெரிய குப்பை மேடு. அதிலிருந்துதான் வயல்களுக்கு வண்டிகளில் உரம் எடுத்துப் போவார்கள். அத்தனை பிரமாண்ட குப்பை மேடு. அதையடுத்து ஒரு மணல் பாதை போகும். அதன் வழியே சென்றால், நேரே ஏரி. தண்ணீர் இல்லாக் காலத்தில் ஏரி வழியே நடந்து, சுடுகாட்டைக் கடந்து, நங்காத்தூர் என்கிற குக்கிராமத்தை அடையலாம். சுடுகாடு மூணு பர்லாங் தூரத்தில் இருந்தது. (பர்லாங் கணக்கு தெரியாதவர்களுக்காக: எட்டு பர்லாங் கொண்டது ஒரு மைல். ஐந்து மைல் என்பது எட்டு கிலோ மீட்டர்.)
அன்றைக்கு அந்த ஊரில் மின் வசதி இருந்ததென்றாலும், ஏரியில் எந்த விளக்குக் கம்பம் இருக்கும்? இங்கேயிருந்து பார்க்கும்போது அந்தக் கருங்கும்மிருட்டே வயிற்றைப் பிசைந்தது. அப்பா என் கையை இறுகப் பற்றிக் கொண்டு தெருவுக்கு வந்தார். அங்கே வீட்டு வாசலில் வீட்டுக்கார அம்மாள். சற்று கனத்த சரீரம். நல்ல உயரமும்கூட. தலைமுடி அவிழ்ந்து, கத்தாழை நார் போல தோளில் வழிந்து கிடந்தது. இம்சை அரசனில் ராஜகுரு நாசரின் தலைமுடியைப் பார்த்திருக்கிறீர்கள்தானே, அப்படி இருந்தது. பொதுவாகப் பகலிலேயே அந்த அம்மாளைப் பார்க்க எனக்குப் பயமாக இருக்கும். அந்த ராத்திரியில், அந்தக் கோலத்தில் பார்க்க திகிலாக இருந்தது.
“என்ன வாத்தியாரே! சொன்னாக் கேக்க மாட்டீங்க போல! அங்கே பாருங்க, பிசாசுங்க என்னமா ஆட்டம் போடுதுன்னு! போன மாசம் செத்துப் போனானே பால்காரன் முத்து, எப்படிச் செத்துப் போனான்கிறீங்க? அகால நேரத்துல பஸ்ஸை விட்டு இறங்கி, அந்த சுடுகாட்டு வழியா நடந்து வர்றப்போ, பிசாசு அறைஞ்சதுல ரத்தக் கக்கியில்ல செத்துப் போனான்!” என்றார் அந்த அம்மாள்.
“அப்படியா! அந்தப் பிசாசுங்கள்ல ஒண்ணைக் கையோட கூட்டி வரத்தான் இப்ப நாங்க போறோம்!” என்றுவிட்டு, என்னை அழைத்துக் கொண்டு அந்த மண் பாதையில் இறங்கினார் அப்பா. க்ரிச்... க்ரிச்... கர்க்குர்ர்... கர்க்குர்ர்... க்கும்... க்கும்... என்கிற நானாவித வண்டுச் சப்தங்களே என் மன பீதியை அதிகரிக்கப் போதுமானவையாக இருந்தன. ‘பிள்ளையாரப்பா! நீதான் எங்களைக் காப்பாத்தணும்!’ என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டே அப்பாவுடன் நடந்தேன்.
கொஞ்ச தூரம் போனதும், ‘கீய்ய்க்க்க்... இச்சுக்... இச்சுக்... க்ரங்க்... கீய்ய்க்க்க்...’ என்று விதவிதமான இனம்புரியாத சப்தங்கள் தொலைவிலிருந்து மெல்லியதாகக் கேட்டன. நரிகளின் ஊளை வேறு. மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. பிசாசுகளின் சிரிப்பாக இருக்குமோ!
இரண்டு பர்லாங் தூரம் சென்றுவிட்டோம். நல்ல இருட்டு. ஒரு விசித்திரம் கவனித்திருக்கிறீர்களா? தூரத்திலிருந்து பார்க்கும்போது கடும் இருட்டாக இருக்கும் பகுதி, நாம் நெருங்க நெருங்க அத்தனை இருட்டாக இல்லாமல் பாதை தெரியும் அளவுக்கு வெளிச்சமுள்ளதாக மாறும். கிராமத்தில் இதைப் பலமுறை கண்டு அதிசயித்திருக்கிறேன். நடந்துகொண்டே இருந்தோம்.
தூரத்தே சுடுகாடு தெரிந்தது. அதில் ஏதாவது பிணம் எரிகிறதோ, அந்த வெளிச்சம்தான் கொள்ளி வாய்ப் பிசாசு போல நம் கண்ணுக்குத் தெரிகிறதோ என்று என் மனசு கொஞ்சம் லாஜிக்கலாக யோசனை செய்யத் தொடங்கியதும் பயம் கொஞ்சம் விலகின மாதிரி இருந்தது.
சுடுகாட்டை நெருங்கிவிட்டோம். அங்கே பிணம் எதுவும் இல்லை. ஆனால், சற்றுத் தள்ளி செடி கொடிகளும், புதர்களும், வரிசையாகத் தென்னை மரங்களுமாக இருந்த பகுதியிலிருந்து சிவப்பு வெளிச்சம் விட்டு விட்டு வந்துகொண்டு இருந்தது. அப்பா என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனார். புதர்களைக் கடந்து, தென்னந்தோப்பின் ஊடாகக் கொஞ்ச தூரம் போனதும், ஒரு பெரிய பரந்த வயல் வெளி. அங்கே இரண்டு மூன்று டிராக்டர்கள் சுறுசுறுப்பாக நிலத்தை உழுதுகொண்டு இருந்தன. அவை பிரேக் பிடிக்கும் சத்தம், திரும்பும் சத்தம்தான் இவையெல்லாம்தான் ‘இச்சுக்... இச்சுக்... க்ரங்க்... கீய்ய்க்க்க்’ போன்ற ஒலிகளுக்குக் காரணம்.
அவற்றின் ஹெட்லைட் மங்கலாக இருந்தது. பின்புற சிவப்பு லைட் பளீரென்று இருந்தது. நேரே வரும்போது மஞ்சள் வெளிச்சம் பாய்ச்சிய அந்த டிராக்டர்கள் திரும்பிச் செல்லும்போது சிவப்பு ஒளியை உமிழ்ந்தன. அதுதான் சிவப்பு வெளிச்சம் அணைந்து அணைந்து தெரிந்ததற்குக் காரணம்.
எங்களைப் பார்த்ததும், “என்னா சார் இந்நேரத்துல! தூக்கம் வர்லியா?” என்று விசாரித்தார் டிராக்டர் ஓட்டிக்கொண்டு இருந்த ஒருவர்.
“இவன் ராத்திரியில இந்த சிவப்பு வெளிச்சத்தைப் பார்த்துப் பேய்னு பயந்துட்டான். பேயாவது, பிசாசாவது! அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு இவனுக்குக் காட்டத்தான் இங்கே கூட்டிட்டு வந்தேன். ஆமா, ஏன் இந்த ராத்திரியில உழறீங்க?” என்று கேட்டார் அப்பா.
“என்ன சார் பண்றது? பகல் பூரா நெசவுத் தொழில் பார்க்கவே சரியாப் போகுது. தவிர, இப்ப வந்து உழுதோம்னா வெயிலும் இல்லாம இருக்கும். பெரும்பாலும் நாங்க ராத்திரியிலதான் உழுறது. மத்தபடி, பேய் என்ன சார் பேய்! மனுஷன்தான் பேய், பிசாசு எல்லாமே! அவன் கிட்டதான் பயப்பட வேண்டியிருக்குது” என்றார் டிராக்டரோட்டி சிரித்துக் கொண்டே.
நாங்கள் விடைபெற்று எங்கள் ஊருக்கு, வந்த வழியே அதே இருளில் திரும்பி நடந்தபோது, என் மனதில் இம்மியளவுகூட பேய் பயமே இல்லை.
சரி, த்ரில்லாக ஒரு நிஜ அனுபவத்தை வர்ணித்துவிட்டேன். இனி, ஜாலியாக சில பேய்க் கேள்விகள்...
‘பேயறைந்தாற்போல்...’ என்று வர்ணித்து எழுதுகிறார்களே சில கதாசிரியர்கள்; பேயறைந்தால் எப்படி இருக்கும் என்று அவர்களில் யாருக்காவது சொந்த அனுபவம் இருக்குமா?
‘பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரம் ஏறித்தான் ஆக வேண்டும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறதே... அதென்ன பேய்க்கும் புளிய மரத்துக்கும் அப்படி ஒரு ராசி?
விக்கிரமாதித்தான் சுமந்து செல்லும் உடலில் இருக்கும் வேதாளமும் பேய், பிசாசு வகைகளில் ஒன்றா?
‘பெண்ணென்றால் பேயும் இரங்கும்’ என்கிறார்களே... இந்தக் காலத்துப் பெண்களைக் கண்டால்கூடவா?
பன்னிரு ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்றெல்லாம்கூடப் பெயர்கள் இருக்கிறதே, அவை நிஜப் பெயர்களா? புனைபெயர்களா? புனைபெயர்கள் என்றால், பேய், பூதம் என்று பயமுறுத்தும் பெயர்களாகத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
‘பூத்து ஆரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும் பேதை குணம் ஆகாதே
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி கூடும் வண்ணம் தோள் நோக்கம்’
- என்கிறார் மாணிக்கவாசகர். பொய்கை என நம்பி கானல் நீரைத் தேடி ஓடாதே என்கிறார். பேய்த்தேர் என்றால் கானல் நீர். சரி, பேய்க்கும் கானல் நீருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
‘எனக்கு இன்னிக்கு ஒரே பேய்ப் பசி!’ என்று சமயங்களில் நாமே சொல்கிறோமே; பேய்ப் பசி என்பது எவ்வளவு கடுமையானது? ஒரு சராசரி மனிதனைப் போல ஒரு பேய் எத்தனை மடங்கு உணவு உட்கொள்ளும்? அது செரிப்பதற்கு இரைப்பை, குடல், சீரண உறுப்புகள் எல்லாம் பேய்க்கு இருக்கிறதா?
ஸாரி... ரொம்ப அறுத்துட்டேனோ? பேயே தேவலை என்கிற அளவுக்கு ஆக்கிட்டேனோ? பேய்ட்டு வரேன்! பை... பை..!
‘எனக்கு இன்னிக்கு ஒரே பேய்ப் பசி!’ என்று சமயங்களில் நாமே சொல்கிறோமே; பேய்ப் பசி என்பது எவ்வளவு கடுமையானது? ஒரு சராசரி மனிதனைப் போல ஒரு பேய் எத்தனை மடங்கு உணவு உட்கொள்ளும்? அது செரிப்பதற்கு இரைப்பை, குடல், சீரண உறுப்புகள் எல்லாம் பேய்க்கு இருக்கிறதா?
ஸாரி... ரொம்ப அறுத்துட்டேனோ? பேயே தேவலை என்கிற அளவுக்கு ஆக்கிட்டேனோ? பேய்ட்டு வரேன்! பை... பை..!
*****
தைரியம் என்பது வேறில்லை; நம் பயத்தை எதிராளிக்குத் தெரியாமல் மறைப்பது!
5 comments:
\\பேய் என்ன சார் பேய்! மனுஷன்தான் பேய், பிசாசு எல்லாமே! அவன் கிட்டதான் பயப்பட வேண்டியிருக்குது”\\
நச்.
இப்படி ஓர் அப்பாவுக்கு மகனாக இருக்க நீங்க உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும்! என்ன செய்யணுமோ அதை சிரமம் பாராமல் செய்து எதைப் போக்கவேணுமோ அதைப் போக்கிவிட்டார்! Kudos to him!
பேய்க் கேள்விகளுக்கு பதில்கள்: 1. பேயறைந்த அனுபவம் எழுத்தாளர்களுக்கு இருந்தால்தான் அவர்கள் ‘மனைவி அறைந்தாற்போல’ என்று மாற்றி எழுத ஆரம்பித்து விடுவார்களே? 2. பேய்க்கே வாழ்க்கைப்பட்ட பிறகு புளியமரம் ஏறுவது புளியோதரை சாப்பிடற மாதிரி! 3.வேதாளம் பேயில் எழுத்தாளர் இனத்தை சேர்ந்தது. கதை சொல்லி கழுத்தை அறுக்கும். 4. பெண்ணென்றால் பேயும் 'இறங்கும்' ஆக இருக்கலாம். அதாவது அவங்க பவர் முன்னாடி நம்மது சாதா என்று மரத்திலிருந்து கீழே இறங்கிவிடும். 5.இந்தக் காலத்திலும் கூட மாத்ருபூதம் என்று பேர் இருக்கே? பஞ்சபூதம் என்றால் அவற்றின் விசுவ அளவைக் குறிக்கிறதே தவிர விஷயம் பயம் என்பதை அல்ல. 6. பேய்க்கும் கானல் நீருக்கும் சம்பந்தம் 'உண்டு', இரண்டுமே 'இல்லை' என்பதால். --கே.பி.ஜனா
முதல் பகுதியில் நான் சொன்ன மாதிரி பேய் இல்லே பாத்தீங்களா சார் ? பரபரப்பான காட்சிகளுடன் இரண்டாம் பகுதி படு சூப்பர்.
ரேகா ராகவன்.
ராஜு! கட்டுரையில் ஜீவனான இடத்தைப் பிடித்துப் பாராட்டியிருக்கிறீர்கள். நன்றி!
கே.பி.ஜனா! (பதில் கிடையாது என்று எண்ணி) ஜாலியாக எழுதிய கேள்விகளுக்கு ஜாலியாகவே பதில்கள் சொல்லி அசத்திய உங்கள் திறமை என்னை வியக்க வைக்கிறது.
‘பேய் இல்லே, பார்த்தீங்களா சார்?’னா, இல்லாததை எப்படிப் பார்க்க முடியும் ராகவன் சார்? ஹி.. ஹி..!
http://ta.wikipedia.org/கொல்லி வாய்ப் பிசாசு
மேலுள்ள இணைப்பிலுள்ள கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்குமாறு உங்களை த்iகிலுடன் வேண்டுகிறேன். ஹி ஹி
Post a Comment