கார்ட்டூனிஸ்ட்டுக்குள் ஓர் ஆன்மிகவாதி!

வெங்கட்ராகவன் என்கிற கார்ட்டூனிஸ்ட் கேஷவ்வை எனக்கு அதிகம் பழக்கம் இல்லை. ஆனந்த விகடனில் ‘பொக்கிஷம்’ பகுதியைத் தொகுப்பதற்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டியபோது அவரின் ‘தொண தொண தொளசிங்கம்’, ‘முழுச்சோம்பல் முருகேஷ்’ போன்ற கேரக்டர் ஜோக்குகளையும், அவர் வரைந்த கர்னாடக சங்கீத பாடகர்களின் கேரிகேச்சர்களையும் பார்த்தேன்.

அப்போது நான் வியந்ததைவிட அதிகம் வியந்தது, அவர் தனது ஓவியக் கண்காட்சிக்கு அழைப்பு வைக்க விகடன் அலுவலகத்துக்கு வந்தபோதுதான். அழைப்பிதழில் அவரின் கண்காட்சியில் இடம்பெறவிருக்கும் படங்களின் சாம்பிள்களை அச்சிட்டிருந்தார். அதைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு சொல்லில் அடங்காதது. அத்தனையும் ஆன்மிக ஓவியங்கள் என்பதோடு, அவை சம்பிரதாயமான முறையில் வரையப்படாமல், நவீன பாணியில் வரையப்பட்டிருந்தது. ஓவியர் கேஷவ்வை நான் நேரில் சந்தித்தது அப்போதுதான்.

சக்தி விகடன் இதழுக்குப் பொறுப்பேற்றதற்குப் பின்னர், எழுத்தாள நண்பர் சாருகேசி அவர்கள் மூலம் மீண்டும் கேஷவ்வை அவரது இல்லத்துக்கே சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. “ஸ்ரீமத் பாகவதத்தை முழுமையானதொரு பெரிய ஓவியமாக கேஷவ் வரைந்திருக்கிறார்; போய்ப் பார்ப்போம், வருகிறீர்களா?” என்று அழைத்தார் சாருகேசி. ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று போனேன்.

ஸ்ரீமத் பாகவதம் என்பது பகவான் விஷ்ணுவின் கதைகளையும், ஸ்ரீகிருஷ்ண லீலைகளையும் விவரிக்கும் தொகுப்பு. அதை ஓவியமாகக் காட்சிப்படுத்த தேர்ந்தெடுத்ததே, திரு.கேஷவ் தன் தூரிகை ஆற்றலின் மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கையைக் காட்டுவதாகும். பாகவதத்தில் அத்தனைச் சம்பவங்கள்; ஒவ்வொன்றிலும் புதைந்திருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்கள்... அத்தனையையும் ஒரு கேன்வாஸில் மெகா ஓவியமாகத் தீட்டுவதற்கு மகா பொறுமை வேண்டும்; ஆழ்ந்த அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும்.

அந்த பாகவத ஓவியத்தைக் கண்டு நான் விக்கித்து நின்றுவிட்டேன். அதுவொரு அசாத்தியமான உழைப்பில் விளைந்த அற்புதப் படைப்பு! ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, அதை அப்போதே சக்தி விகடன் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நான் பரபரத்தேன். அப்போது, சக்தி விகடனின் எட்டாம் ஆண்டு தொடக்க இதழை அதிக பக்கங்களுடன் டைஜஸ்ட் வடிவில் கொண்டு வருவதாக இருந்தோம். அதற்கு இந்த பாகவத ஓவியம் ஒரு வெயிட்டான மேட்டராக இருக்கும் என்று என் பத்திரிகை புத்தி கணக்குப் போட்டது.

ஆனால், கேஷவ் மறுத்துவிட்டார். காரணம், நாங்கள் போயிருந்த நேரத்தில், அந்த மெகா ஓவியத்தில் முக்கால்வாசிதான் பூர்த்தியாகியிருந்தது. “இதைப் பூர்த்தி செய்தவுடன் நானே கூப்பிட்டு சக்தி விகடனுக்கு இது குறித்து பேட்டி அளிக்கிறேன்” என்றார்.

அதன்பின், அவரோடு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், நானும் சாருகேசியும். அரசியல் கார்ட்டூன்கள் வரையும் கார்ட்டூனிஸ்ட்டுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு இல்லை. யாரோ ஒரு சாதுவிடம், மதத் தலைவரிடம், பழுத்த ஆன்மிகவாதியிடம் பேசிக்கொண்டிருப்பதான உணர்வு. பாகவதத்தில் தொடங்கி, புராணங்கள், இதிகாசங்கள், தத்துவங்கள் என சகலமும் பேசினார். ‘ஹா’வென்று வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, பாகவத படத்தைப் பூர்த்தி செய்தார் கேஷவ். முன்பு எங்களிடம் வாக்குத் தந்தபடி மறக்காமல் அழைப்பு விடுத்தார். அவரை பேட்டி கண்டார் எழுத்தாளர் திரு.சாருகேசி. சக்தி விகடனின் எட்டாம் ஆண்டு சிறப்பிதழுக்காக நான் திட்டமிட்டிருந்த கேஷவ்வின் பேட்டி, புத்தாண்டில் வெளியாகவிருக்கும் பொங்கல் சிறப்பிதழில் வெளியாகிறது.

பெங்களூரில், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கேஷவ். ஓவியத்தில் நாட்டம் அதிகம் என்றாலும், முறைப்படி கற்க வசதி இல்லை. தரமான காகிதம் வாங்கக்கூட இயலாமல், காலண்டர் தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றின் பின்புற வெள்ளைப் பகுதியில் வரைந்து பழகியவர்.

அவர் முதன்முதலில் படங்கள் வரைந்தது ஆனந்த விகடனில்தான். டிசம்பர் சீஸனின்போது ஒவ்வொரு கச்சேரிக்கும் நேரில் போய், பாடகர்களின் பாவனைகளை நேரடியாக ஸ்கெட்ச் பண்ணியது, தனது ஓவியத் திறனை வெகுவாக வளர்க்க உதவியது என்கிறார் கேஷவ்.

கிளுகிளு கதைகள் எழுதும் புஷ்பாதங்கதுரைக்கும் பக்தி மயமாக ஆன்மிகக் கட்டுரைகள், கதைகள் எழுதும் ஸ்ரீவேணுகோபாலனுக்கும் சம்பந்தமே இருக்காது. சிவாஜியின் அபாரமான டபுள்-ஆக்ட் போல இருக்கும். இருவரும் ஒருவரே என்பதை என்னால் ரொம்ப நாளைக்கு நம்பவே முடியவில்லை. அதேபோலத்தான் ‘தி ஹிந்து’ நாளேட்டில் அதிரடி அரசியல் கார்ட்டூன்கள் போடும் கேஷவ்வுக்குள்ளா இப்படியொரு ஆன்மிக ஓவியர் ஒளிந்திருக்கிறார் என ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

“இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அரசியல் கார்ட்டூன்கள் என்பது அடையாளக் குறியீடுகள்தான். அரசியல் நிகழ்வு குறித்த என் எண்ணத்தை அடையாளக் குறியீடாக வரைகிறேன். அவை அரசியல் கார்ட்டூன் ஆகிறது. புராணங்களில், இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களை அடையாளக் குறியீடாக வரைகிறேன். அவைதான் இந்த ஓவியங்கள்!” என்றார் கேஷவ்.

“என்ன சொல்கிறீர்கள்? இந்த ஓவியங்கள் அடையாளக் குறியீடுகளா?” என்றேன் வியப்புடன்.

“ஆமாம்! விஷ்ணு என்றால் எல்லாருக்கும் தெரிந்த மகாவிஷ்ணுவை அப்படியே நான் வரைவதில்லை. விஷ்ணு என்கிற உருவகத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் தத்துவத்தை, அதன் மையக் கருத்தையே ஓவியமாக வரைகிறேன். அனுமன் ஆற்றல் மிகுந்தவன்; அதே நேரம் அடக்கம் மிகுந்தவன். ஆகவே, என் பார்வையில் அனுமனை எப்படி வரைந்திருக்கிறேன், பாருங்கள்” என்று அழைத்துச் சென்று, ஓர் ஓவியத்தின் முன் நிறுத்தினார் கேஷவ்.

ராமன்,லட்சுமணன், சீதை எல்லோரும் சாதாரண மானுடர்கள் போன்று இயல்பான தோற்றத்தில் இருக்க, ராமனின் காலடியில் தன் உடம்பு மொத்தத்தையும் எண்சாணாகக் குறுக்கிக்கொண்டு மடிந்து வணங்கிக்கொண்டு இருந்தது - மன்னிக்கவும் - இருந்தார் அனுமன். என் கண்கள் வியப்பால் விரிந்தன.

“ஆனந்தத்தின் அடையாளக் குறியீடுதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எல்லோரையும் நாம் வெறுமே கடவுளர்களாக வைத்து வழிபடுகிறோமே தவிர, ஒவ்வொன்றின் மூலமும் சொல்லப்பட்டிருக்கும் தத்துவங்களைக் கோட்டை விட்டுவிடுகிறோம். நம் இந்துப் புராணங்களில் சொல்லப்படாத வாழ்க்கை நெறிமுறைகளே இல்லை...”

திரு.கேஷவ்வின் ஆன்மிக விளக்கங்கள் அபாரமானவை. அவற்றை ஒரே சந்திப்பில் அப்படியே உள்வாங்கிக்கொள்கிற பக்குவமும் தகுதியும் எனக்கு இல்லை.

கேஷவ் தனது அன்றாட வேலைகளுக்கிடையிலும், அலுவலகப் பணிகளுக்கிடையிலும், இந்த பாகவத ஓவியத்தை வரைவதற்கு எடுத்துக்கொண்ட காலம் சுமார் மூன்றரை ஆண்டுகள்.
இதை அவர் எதற்காக வரைந்தார்?

ஆத்ம திருப்திக்காக வரைந்தார் என்று நம்ப இடமுண்டு. ஆனால், இந்த அற்புதமான படைப்பை இனி அவர் என்ன செய்யப் போகிறார்?

அது பற்றி அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

காஞ்சி மகான் தற்போது நம்மிடையே இருந்திருந்தால், மறு யோசனையின்றி இந்த ஓவியத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பித்து, அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்திருப்பார் கேஷவ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

பின்குறிப்பு:

காஞ்சிப் பெரியவர் படத்தை மிக அற்புதமாக, தத்ரூபமாக வரைந்து, அதை அந்த காஞ்சி மகானிடமே காண்பித்து, அவரின் ஆசியாக மட்டைத் தேங்காயைப் பெற்றிருக்கிறார் கேஷவ். அந்தத் தேங்காயை இன்றைக்கும் பெரியவர் படத்தின் முன்பு வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு, திரு.கேஷவ்வை நான் சந்தித்தபோது, சாவியிடம் நான் பணியாற்றியதைச் சொல்லி, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது அவர் இந்தக் காஞ்சி மகான் படத்தைக் காண்பித்து, “இந்தப் படத்தைப் புகைப்படம் எடுத்து ஆசிரியர் சாவியிடம் கொண்டு காண்பித்து, அவரின் பாராட்டுக்களையும், ஆசிகளையும் பெற்றுக் கொண்டேன். அடுத்த வார சாவி இதழில் அட்டைப்படமாக இதை வெளியிட்டுவிட்டார் சாவி. அது எனக்குப் பெரிய தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ஏனென்றால், இங்கே நான் பணியாற்றும் இடத்தில் முன் அனுமதி பெறாமல் வெளியிடங்களில் படம் வரையக் கூடாது!” என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

எனக்குத் துணுக்கென்றது. அந்தப் படத்தை சாவி அட்டையில் வெளியிட்டவன் நான்தான். பத்திரிகைப் பணியில் சேர்ந்த புதிதாகையால், ஒருவர் தந்த படத்தை அவருக்கே சொல்லாமல், அவரின் முன் அனுமதி பெறாமல் பத்திரிகையில் வெளியிடக்கூடாது என்கிற பத்திரிகை தர்மம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

இருந்தாலும், அன்று கேஷவ்விடம் இந்த உண்மையை நான் சொல்லவில்லை. கொஞ்சம் பயம்தான்!

***
நமக்குத் தெரியாதவற்றிலிருந்து பயம் வளர்கிறது; நம்மால் செய்ய இயலுவதிலிருந்து நம்பிக்கை பிறக்கிறது.

கிறுக்குத்தனங்கள்!

சின்ன வயதில் என்னிடம் ஒரு கிறுக்குத்தனம் இருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில் ஏதேனும் ஓட்டாஞ்சில்லு கண்ணில் பட்டால், அதைக் காலால் உதைத்துத் தள்ளிக்கொண்டே, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள பள்ளிக்கூடம் வரைக்கும் கொண்டு போக முடியுமா என்று முயற்சி செய்வேன். பல நேரம் என் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.

அநேகமாக இதே போன்ற கிறுக்குத்தனங்கள் அந்த வயதுப் பிள்ளைகள் அனைவரிடமும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

சிறுவர்களிடம் மட்டுமல்ல; பெரியவர்களிடமும் சில கிறுக்குத்தனங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் நண்பர் ஒருவரோடு சாலையில் நடந்து போகும்போது, வழியில் கடக்கும் மரம், மட்டை, அறிவிப்புப் பலகை என கைக்குத் தட்டுப்படும் எல்லாவற்றையும் லேசாகத் தட்டிக்கொண்டே வருவார். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘டாக்டர் ஜான்சன் தெரியுமா, பெரிய மேதை! அவருக்கும் இப்படி ஒரு பழக்கம் இருந்ததாம்’ என்பார்; இந்த ஒரு விஷயத்திலாவது, ஒரு பெரிய மேதையோடு தன்னைச் சமமாக ஒப்பிட்டுக் கொள்ளும்படியான வாய்ப்பு கிடைத்ததே என்கிற திருப்தி அவருக்கு உள்ளூர இருந்திருக்குமோ, என்னவோ!

வேறு சிலர் இருக்கிறார்கள். தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறுமா என்பதை அறிய, ஜோசியம் போல சில பரீட்சைகள் செய்து பார்ப்பார்கள். “நான் அந்தப் பச்சைக் கட்டடத்தைத் தாண்டுவதற்குள், தெரு வளைவிலிருந்து ஒரு பஸ்ஸோ, காரோ எதிர்ப்பட்டுவிட்டால், நான் போகிற காரியம் ஜெயம் என்று அர்த்தம்” என்று மனசுக்குள் தீர்மானித்துக் கொள்வார்கள். எதிர்ப்படவில்லையென்றால், சற்றும் மனம் தளராமல், “நான் அந்தத் தெருவில் திரும்புவதற்குள் என்னைக் கடந்து ஏதேனும் வாகனம் முந்திச் சென்றால், நான் போகிற காரியம் வெற்றி!” என்று மறு தீர்மானம் செய்துகொள்வார்கள். தப்பித் தவறி, சைக்கிள் டயர் ஓட்டும் சிறுவன் யாராவது இவரைக் கடந்து போய்விட்டால், மனசுக்குள் ஒரே கொண்டாட்டம்தான்! காரியம் பழமாகும் என்பதற்கான சிக்னல் கிடைத்துவிட்டதே!

என்னிடமும் சமீப காலமாக ஒரு கிறுக்குத்தனம் இருந்தது. அதைக் கிறுக்குத்தனம் என்பதைவிட, ஏதோ அபூர்வமான திறமை (ஒன்றுக்கும் உதவாத திறமை அது!) என்பதாக எண்ணி, மனசுக்குள் பெருமைப்பட்டுக்கொள்வேன். இதனாலேயே அந்தக் கிறுக்குத்தனத்தைத் தொடர்ந்து செய்து வந்தேன்.

ஸ்கூட்டி ஓட்டிச் செல்லும்போது, என் முன்னால் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களைப் பார்த்து, அதன் சிறப்பம்சத்தைக் கண்டுபிடிப்பேன். சில மாதங்களுக்கு முன்பு, யதேச்சையாக ஒரே நம்பர் பிளேட் கொண்ட (உதாரணமாக, 9005 என்ற எண்; ரெஜிஸ்ட்ரேஷன் ஆங்கில எழுத்துக்கள் மாறுபட்டிருக்கும்.) மோட்டார் பைக், கார் மற்றும் ஒரு வேன் ஆகியவை பக்கத்துப் பக்கத்தில் சென்றதைப் பார்த்ததிலிருந்துதான் எனக்கு இந்தக் கிறுக்குத்தனம் தொற்றிக்கொண்டது. ஒருமுறை 2786 என்ற எண் கொண்ட வண்டியும், 6872 என்று உல்டாவாக எண் கொண்ட ஒரு வண்டியும் பக்கத்துப் பக்கத்தில் சென்றதைப் பார்த்தேன். இன்னொரு தடவை 1974 என்ற எண் கொண்ட ஒரு வாகனத்தைப் பார்த்தேன். அந்த எண்ணின் சிறப்பம்சம் உடனே என் புத்தியில் உறைத்தது. வேறொன்றுமில்லை; என் ஸ்கூட்டி எண் 7419. புரிகிறதா சிறப்பம்சம்? இன்னொரு முறை, ஒரு வாகனத்தின் பக்கத்தில் சென்ற மற்றொரு வாகனத்தின் எண், முந்தின வாகனத்தின் அதே எண்களையே மாற்றிப் போட்டதாக இருந்தது. அதாவது, ஒன்றின் எண் 3741 என்றால், அடுத்த வாகனத்தின் எண் 4317 என்பதாக இருந்தது. இந்தச் சிறப்பம்சங்களையெல்லாம், என் பின்னால் உட்கார்ந்து பயணிக்கும் என் மகளிடம் உடனுக்குடன் காட்டி, அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன்.

இது மட்டுமல்ல; என் முன் செல்லும் வாகனத்தின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களின் கூட்டுத் தொகையும், அதைத் தொடர்ந்து செல்லும் மற்றொரு வாகனத்தின் நம்பர் பிளேட்டிலுள்ள எண்களின் கூட்டுத் தொகையும் ஒன்றாக இருக்கிறது என்பது போன்ற சிறப்பம்சங்களையும் நான் கவனிப்பதுண்டு.

இந்தக் கிறுக்குத்தனம் முற்றிப்போய், வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்தில் கொண்டு தள்ளிவிடப் போகிறதே என்று பயம் வந்து, சுமார் ஏழெட்டு மாதங்களாக என்னிடம் இருந்த இந்தக் கிறுக்குப் பழக்கத்தைக் கடந்த பத்து நாட்களாக விட்டுவிட்டேன்.

என்னிடம் இது ஒரு கிறுக்குத்தனம் மட்டும்தானா, அல்லது என்னையும் அறியாமல் வேறு ஏதேனும் கிறுக்குத்தனம் என்னிடம் இருக்கிறதோ என்னவோ, தெரியவில்லை!

யார் அந்த அழகி? பரிசு யாருக்கு?

சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்குச் சரியான விடை: பூங்குழலி.

நிறையப் பேர் சரியான விடைகளை அனுப்பியிருக்கிறார்கள். என்றாலும், ஏற்கெனவே சொன்னது போல், சரியான விடையை முதலில் அனுப்பிய ‘யாழ் மைந்தன்’ அவர்களுக்கு விகடன் பிரசுர புத்தகம் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவர் தனது முகவரியை எனது இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கக் கோருகிறேன்.

இதில் எனக்குப் பெருமையும் சந்தோஷமும் அளித்த ஒரு விஷயம் என்னவென்றால், இந்தப் போட்டிக்கான விடையை என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் ஞாநியும் பின்னூட்டம் இட்டிருக்கிறார் என்பதுதான். திரு.ஞாநி அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்!

***

முட்டாளிடம் இருக்கும் குறை அவனுக்குத் தெரியாது; ஆனால், உலகுக்குத் தெரியும். புத்திசாலியிடம் இருக்கும் குறை அவனுக்குத் தெரியும்; ஆனால், உலகுக்குத் தெரியாது!

பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்!

பொன்னியின் செல்வன்- வாசிப்பு அனுபவம்

பேராசிரியர் அமரர் கல்கியின் எழுத்தாற்றல் பற்றிச் சிலாகித்துச் சொல்லவும் ஒரு தகுதி வேண்டும். அது எனக்கில்லை. என்றாலும், அவரது பொன்னியின் செல்வன் நாவல் முழுவதையும் சமீபத்தில் படித்துச் சிலிர்த்தவன் என்கிற முறையில், சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.

அமரர் கல்கியின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை ராமாயண, மகாபாரத இதிகாசங்களுக்கு நிகராக வைத்துப் போற்றத்தக்கவை. இன்றைக்கு அவற்றை எடுத்துப் படித்தாலும், அவற்றில் அமரர் கல்கி கையாண்டுள்ள வசீகரமான நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், ஒரு மாயச் சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவது போன்ற கதைப் பின்னல்களும் நம்மை அப்படியே கட்டிப்போடுவதை உணரலாம்.

குறிப்பாக, சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம்!

பல நூற்றாண்டுகளுக்கு முன், சோழர் காலத்தில் நடந்த சரித்திரச் சம்பவங்களை அருகே இருந்து பார்த்தது போல, ஒவ்வொன்றையும் நுணுக்கமாக அவர் விவரித்திருப்பதைப் படிக்கப் படிக்கப் பிரமிப்பும் பரவசமும் ஏற்படுகிறது. அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், யுத்த வியூகங்கள், சதியாலோசனைகள் எனப் படிக்கப் படிக்க, விறுவிறுப்பான ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற படபடப்பு ஏற்படுகிறது. எந்தெந்தச் சம்பவங்கள் நிஜ சரித்திரம், எவையெவை கற்பனைச் சம்பவங்கள், யார் யார் சரித்திர புருஷர்கள், எவரெல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! புத்தகத்தை முடித்துக் கொடுத்து ஒரு வார காலம் ஆகியும், இன்னமும் என் மனசுக்குள் சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன் என்கிற ராஜ ராஜசோழன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர்கள், பார்த்திபேந்திரன், கந்தமாறன், பூங்குழலி, மணிமேகலை என அத்தனைச் சரித்திரப் புருஷர்களும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்.

அமரர் கல்கி படைத்த கதாபாத்திரங்களை நம் கண் முன்னே உலவவிட்டு, அவர்கள் காலத்தில் நாம் வாழ்கிறோமா, நம் காலத்தில் அவர்கள் வாழ்கிறார்களா என்கிற மயக்கத்தைத் தரும்படியாக, அத்தனை உயிர்ப்போடு வடித்துக் கொடுத்த ஓவிய மேதை மணியம் அவர்களின் பங்கும் பிரமிக்க வைப்பது.

பொக்கிஷம் - என்னுரை

ந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவை கலந்த பார்வையோடு அணுகுவதன் மூலம், அதில் உள்ள நல்லது கெட்டதை மக்களுக்குத் தெளிவாகவும் சுலபமாகவும் புரிய வைக்கமுடியும். அப்படி ஒரு நோக்குடன், எல்லோரையும் இன்புற்றிருக்க வைப்பதற்குத் தொடங்கப்பட்ட பத்திரிகைதான் ஆனந்த விகடன். 1926-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதழின் அறிமுகக் கட்டுரையிலேயே, தனது நோக்கம் இதுதான் என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளான் விகடன். அந்த நோக்கம் ஒரு துளியும் சிதையாமல், 85 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையில் விகடன் பீடுநடை போட்டு வருவது, வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

‘‘அந்தக் காலத்துல காலங்கார்த்தால ரயில்வே ஸ்டேஷனுக்கே போய், ஆனந்த விகடன் பார்சல் எப்போதடா வரும் என்று காத்திருந்து, அங்கேயே காசு கொடுத்துக் கையோடு வாங்கி வந்து, ஒரு பக்கம்கூட விடாமல் படிச்சு முடிச்சப்புறம்தான் அடுத்த வேலையே ஓடும் எங்களுக்கு’’ என்று தங்கள் வாரிசுகளிடமும், பேரக் குழந்தைகளிடமும் பரவசம் ததும்பும் குரலில் சொல்லி மகிழ்கிற பெரியவர்கள், மதிப்புக்குரிய சீனியர் வாசகர்கள் அத்தனைத் தமிழ்க் குடும்பங்களிலும் உண்டு.

ஆனால், தகவல் தொழில்நுட்பம், புகைப்படக் கலையின் வளர்ச்சி, அச்சு நேர்த்தி, கம்ப்யூட்டர், இணைய தளம், டிஜிட்டல் புரட்சி என எல்லா வசதிகளோடும் மிகப் பிரமாண்டமாக விசுவரூபமெடுத்து நிற்கும் இன்றைய ஆனந்த விகடனை வாசிக்கும் இளைய தலைமுறையினரின் மனத்தில்... விகடனின் இத்தனை நாள் புத்துணர்வுத் தோற்றத்துக்கு அப்படி என்னதான் காரணம் என்கிற வியப்பு கலந்த சந்தேகம் தோன்றுவது இயல்புதான்.

‘பொக்கிஷம்’ என்கிற தலைப்பில், ஆனந்த விகடனின் கடந்த கால இதழ்களிலிருந்து சுவாரஸ்யமான பகுதிகளைத் தொகுக்கும் இந்தப் பணியை மேற்கொண்டபோது, மேற்கண்ட கேள்விக்கான முழு விடையும் எனக்குக் கிடைத்தது!

விகடன் இதழ்கள் ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க, பிரமிப்பு தாளவில்லை எனறுதான் சொல்ல வேண்டும். எத்தனை எத்தனை பிரமுகர்கள், எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள்... ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும், அந்தந்த கால கட்டத்தில் விகடனில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், இசை மேதைகள், நடன மாமணிகள், திரைக் கலைஞர்கள் என விகடன் தன் பட்டுக் கரங்களால் தட்டிக் கொடுக்காத பிரபலங்களே இல்லை!

தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல... அகில உலகத்தையும் தன் அகன்ற பார்வைக்குள் வளைத்து, அணைத்துக்கொண்டிருக்கிறான் விகடன்.

பொன்னும் மணியும் மின்னும் வைரக் கற்களுமாகக் கொட்டிக் கிடக்கும் அந்தப் புதையலிலிருந்து இன்றைய வாசகர்களுக்கு எதைக் கொடுப்பது, எதை விடுப்பது என்கிற மயக்கமும் திகைப்பும் என்னுள் உண்டாயிற்று. காரணம், எந்த ஒரு கட்டுரையை எடுத்துப் படித்தாலும், அது இன்றைக்கும் பொருந்துவதாக, அல்லது இப்போது படித்தாலும் அதன் சுவையில் குன்றிமணி அளவும் குன்றாததாக, பழைய நினைவுகளில் நம்மைத் திளைக்க வைத்துத் தாலாட்டுவதாகவே இருக்கிறது.

ஆனந்த விகடன் எனும் காலக் கண்ணாடி வழியே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் விதமாக, 1926 முதல் 2000-வது ஆண்டு வரையிலான விகடன் பதிவுகளை ஓர் ஆவணப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் எனும் நோக்கில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதுதான் ‘ஆனந்த விகடன் காலப் பெட்டகம்’. அதற்கு வாசகர்களாகிய உங்களிடமிருந்து ஏகோபித்த வரவேற்பு! அதன் தொடர்ச்சியாகத்தான் ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ என்கிற இந்தப் புத்தகத்தை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இதோ, உங்களின் கைகளில் தவழ்கிறது ரசனையும் பாரம்பரியமும் மிக்க, குடும்பப் பாங்கான, காலங்களை வென்ற ஆனந்த விகடனின் பொக்கிஷப் பக்கங்கள்.

வருடாந்திர வரிசைப்படி இல்லாமல், அரசியல், கலை, இலக்கியம், சினிமா, நகைச்சுவை என இந்த 85 ஆண்டு காலப் பதிவுகளில் இருந்து ஒரு கதம்பமாகவே தொடுத்துள்ளேன். இவற்றை நீங்கள் வாசிக்கிறபோதே த்ரில்லான ரோலர்கோஸ்டரில் மேலும் கீழும் பயணிக்கும் பரவசத்தை உணர முடியும்.

ஆனந்த விகடனின் முதல் இதழிலிருந்து நேற்று வெளியான இதழ் வரைக்கும் ஒரே மூச்சில் படித்தவன் என்கிற கர்வம் இப்போது எனக்கு! இந்த பொக்கிஷத்தைப் படித்து முடிக்கும்போது அதுவேதான் உங்களுக்கும்!

படித்தபின் தவறாமல் உங்கள் கூர்தீட்டிய விமரிசனங்களை அனுப்பி வைத்தால், பொக்கிஷத்தின் அடுத்த தொகுப்பை இன்னும் மெருகேற்ற அது பேருதவியாக அமையும்.

மிக்க அன்புடன்,

ரவிபிரகாஷ்

ஒரு கேள்வி: இந்தப் பதிவில் வைக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள அழகியின் பெயர் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள். முதலில் வரும் சரியான விடைக்கு விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்று பரிசு!

.

மகஸேஸே மாமனிதர் ஹரீஷ் ஹண்டே

ரீஷ் ஹண்டே. இந்த ஆண்டு மகஸேஸே விருது பெற்றவர். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னால் ‘தி ஹிண்டு’வில் இந்தச் செய்தியைப் பார்த்ததும், அவரைப் பற்றி எழுதத் தோன்றியது.

பெ
ங்களூரில் பிறந்து, ரூர்கேலாவில் வளர்ந்தவர் ஹரீஷ் ஹண்டே.

பல்கலைக்கழகத்தில் ஹரீஷின் ஆலோசகராக இருந்தவர் ஜோஸ் மார்ட்டின். ஹரீஷ் எம்.எஸ். படிப்பில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியிருந்த நிலையில், ஒரு நாள் அவர் ஹரீஷை அழைத்து, டொமினிகன் குடியரசுக்கு (ஹிஸ்பானியோலா தீவில் இருக்கும் ஒரு நாடு அது) அனுப்பி வைத்தார். மக்கள் தங்கள் வீடுகளில் சூரிய சக்தியைக் கொண்டு எப்படி வெளிச்சம் பெறுகிறார்கள் என்பதை அங்கேதான் ஹரீஷ் முதன்முறையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டார்.

பின்னர் ஹரீஷ், இலங்கையில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஒரு நண்பரைத் தொடர்புகொண்டு, அங்கே தான் வசிக்க ஏதாவது இடம் பார்த்துத் தரமுடியுமா என்று கேட்டார். ஆனால், அந்த அனுபவம் கடுமையானதாக இருந்தது. மொழிப் பிரச்னை, விடுதலைப் புலிகள் பிரச்னை மற்றும் கிராமப்புறங்களுக்கே உரிய வழக்கமான பிரச்னைகள் எல்லாம் இருந்தன. இலங்கையில் பல்லைக் கடித்துக்கொண்டு 6 மாத காலம் கழித்த பின்பு, இந்தியாவுக்கு வந்தார் ஹரீஷ். கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் குடியேறினார். கிராமவாசிகளின் வெளிச்சத் தேவைகள் என்னென்ன, அதற்கு அவர்கள் எவ்வளவு தொகை செலவழிக்கத் தயாராக இருப்பார்கள் என்பன போன்ற விஷயங்களை நேரடி அனுபவத்தில் கண்டறிந்தார்.

1994-ல், வாஷிங்டன் டிசி-க்குச் ஹரீஷ். அங்கே அவர் நெவில் வில்லியம்ஸ் என்பவரைச் சந்தித்தார். லாப நோக்கமற்ற ‘செல்ஃப்’ என்கிற நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் நெவில். ‘‘சூரிய சக்தி விளக்குத் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த உங்களுக்கு விருப்பம் உள்ளதா ஹரீஷ்?’’ என்று பேச்சுவாக்கில் கேட்டார் நெவில்.

‘‘ஆமாம். நிச்சயமாக!’’ என்றார் ஹரீஷ். கூடவே, ‘‘நாமே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கலாம்’’ என்ற யோசனையை முன்வைத்தார். அப்படித்தான்
1994-ல், ‘செல்கோ’ நிறுவனம் உதயமாகியது. ‘எடிசன் எலெக்ட்ரிக் லைட் கம்பெனி’ என்கிற நிறுவனத்தின் பெயரிலிருந்து உருவான பெயர் அது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஹரீஷ் தன்னுடைய சொந்தச் சேமிப்பைக் கொண்டே எப்படியோ சிரமப்பட்டு அதை நடத்தினார்.

கணிசமாக ஒரு 4 லட்ச ரூபாயைப் பெறுவதற்கு ஓராண்டு ஆகியது. 1995-ல், முறைப்படி பதிவு செய்யப்பட்டது ‘செல்கோ’. அந்த நிறுவனம் எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிக்கவில்லை. சூரியத் தகடு என்பது எப்போதும் உள்ளதுதான். அதாவது, கூரைமீது பொருத்தக்கூடிய ஒரு தகட்டின் மூலம் தினமும் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு, ஒளி வழங்கும். இந்தியாவில், ஒரு சில நிறுவனங்கள் சூரியத் தகடுகளைத் தயாரிக்கின்றன. செல்கோ அந்தத் தொழில்நுட்பத்தைச் சற்றே மேம்படுத்தித் தந்தது. அவ்வளவே!

கர்நாடகா- கேரளா எல்லையில் உள்ள முல்லேரி என்கிற கிராமத்தில் செல்கோவின் முதல் சோலார் அமைப்பு நிறுவப்பட்டது. முதல் ஆண்டில் கிட்டத்தட்ட 150 சூரிய ஒளி அமைப்புகளை நிறுவினார் ஹரீஷ். எல்லாமே, அவர் தன் சொந்தக் கைகளால் நிறுவியவையே! யாரையேனும் சம்பளத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளலாமென்றால், ஹரீஷிடம் அதற்கான பணம் இல்லை. ஆனால், இதையெல்லாம் தான் ஒருவராகவே செய்து முடித்தது, ஒரு விதத்தில் தனக்குப் பெரிய அனுகூலமாகத்தான் இருந்தது என்கிறார் ஹரீஷ். உதாரணமாக, நான்கு அறைகள் கொண்ட ஒரு வீட்டில் ஒரு சோலார் அமைப்பைப் பொருத்துவதற்குச் சரியாக எத்தனை மணி நேரமாகும் என்று அவருக்குத் தெரியும். இப்படியான விஷயங்களில் அவரை யாராலும் ஏமாற்ற முடியாதல்லவா?

1996-ன் துவக்கத்தில், முதன்முதலாக ஒருவர் செல்கோவில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இருவர் சேர்ந்தார்கள். ஸ்ரீதர் ராவ், குருபிரகாஷ் மற்றும் உமேஷ் என அந்த மூவரும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளவும், எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருந்தார்கள். இல்லை என்றால், யாருக்குமே தெரிந்திராத, சொற்பத் தொகை ஒன்றைச் சம்பளமாக வழங்கும் இந்தச் சிறு நிறுவனத்துக்காக, தாங்கள் பார்த்து வந்த வேலைகளை அவர்கள் கைவிடுவார்களா? இன்றைக்கு, 170 பேர் செல்கோவில் பணிபுரிகிறார்கள்.

செல்கோ தனது பயனாளிகளின் வட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், ஒரு விஷயம் தெளிவானது. சூரிய சக்தி விளக்குகள் என்பது, அவற்றை முழுமையாகவும் அதிகமாகவும் பயன்படுத்துபவர்களின் கைக்குச் சிக்காமல் எட்டத்திலேயே இருந்தது என்பதுதான் அது. காரணம், அவற்றை வாங்குவதற்கு வசதியின்மை.

‘‘உங்களால் ஏதும் நிதி வழங்க முடியுமா?’’ என்று பலர் கேட்டார்கள்.
செல்கோவிடம் முதலீடும் இல்லை; கடனுதவி வழங்குவதில் நிபுணத்துவமும் இல்லை. எனவே, இது சம்பந்தமாக வங்கி மேலாளர்களை அணுகினார் ஹரீஷ். அவர்கள் இதில் எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை. ‘‘வீடுகளுக்கான சூரிய விளக்குகள் வருமானத்தை ஈட்டாது. அது விவசாய நிதி இல்லை; எனவே, எங்களால் இதற்கு நிதி உதவி அளிக்க முடியாது!’’ என்று மறுத்துவிட்டார்கள். இருப்பினும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல், தொடர்ந்து இரண்டு ஆண்டுக் காலம் வரை, விடாமல் அவர்களைப் போய்ச் சந்தித்துப் பேசிக்கொண்டும், நச்சரித்துக்கொண்டும் இருந்தார் ஹரீஷ். இறுதியில், அவர்களை ஒருவாறு சம்மதிக்க வைத்துவிட்டார்.

மண்டல கிராமப்புற வங்கிகள், ரூ.5000 முதல் ரூ.7000 வரை சம்பளம் பெறும் செல்கோ வாடிக்கையாளர்களுக்குக் கடனுதவி அளிக்கத் தொடங்கின. ஆனால், அது போதுமானதாக இல்லை. மாதம் ரூ.3000 அல்லது அதற்கும் குறைவாகச் சம்பாதிக்கும் மக்களுக்கும் ஹரீஷ் சூரிய ஒளி அமைப்புகளை விற்க விரும்பினார்.

உண்மையில், நம்மைவிட மின்சக்திக்காக ஏழை மக்கள்தான் அதிகப் பணம் செலவழிக்கிறார்கள். சராசரியாக, பெங்களூரில் ஒரு தெரு வியாபாரி, மண்ணெண்ணெய்க்காக ஒரு நாளைக்கு 15 ரூபாய் செலவிடுகிறார்.
அதாவது, ஒரு மாதத்துக்கு ரூ.450. இந்தப் பணத்தைக் கொண்டு, ஐந்தாண்டுக் காலத்துக்கு சூரிய வெப்பத்தால் 6 விளக்குகளை எரிக்கச் செய்யலாம்.

2010-ல், செல்கோ 12,500 அமைப்புகளை கர்நாடகாவின் கிராமப்புறப் பகுதிகளில் நிறுவியது. அதன் வாடிக்கையாளர்கள் மிகச் சாதாரண தினக்கூலி தொழிலாளர்கள்; சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் கீழ்நிலையில் இருப்பவர்கள்.

15 ஆண்டுகளில், சுமார் 1,20,000 குடும்பங்களில் சூரிய விளக்கைக் கொண்டு வந்திருக்கிறது செல்கோ. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான இலக்கு, 2 லட்சம் குடும்பங்களை நெருங்கவேண்டும் என்பதுதான். ஆனால், வெறுமே எண்ணிக்கை மட்டும் ஹரீஷின் குறிக்கோள் இல்லை. இப்போது, செல்கோவின் வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 35% பேர், மாதம் ரூ.3000 முதல் ரூ.3500 வரை சம்பாதிப்பவர்கள்தான். 2012-ல், மாதம் ரூ.2000-க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் ஏழை மக்கள்தான் தனது பெரும்பான்மை வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஹரீஷ்.

2009-10-ல், ஆண்டு வருமானமாக ரூ.14.5 கோடி ஈட்டியது செல்கோ. 40 லட்சம் ரூபாய் லாபம் பெற்றது. இந்த லாபம் மேலும் புதிய மையங்களைத் திறக்கவும், தொழிலாளர்களுக்கான சம்பளங்களை உயர்த்தவுமே பயன்பட்டது.

எல்லாம் சரி; ஆனால், இந்த வெற்றிகரமான சூரிய அமைப்பை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் ஏன் கொண்டு செல்லவில்லை?

‘‘நிச்சயமாக செல்கோவை நாங்கள் மேலும் வளர்க்கவே விரும்புகிறோம். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் இதைச் செய்வதற்குத் தகுதியான நபர் எங்களுக்குத் தேவை. அத்தகையவர் கிடைத்தால், அவருக்கு எங்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.’’

ஹரீஷின் மனைவி ரூபால். அவர் பாஸ்டனில் பணியாற்றுகிறார். ஹரீஷ்- ரூபால் தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பெயர் அதிஸ்ரீ. ஒவ்வொரு கோடையிலும் அவள் இந்தியாவுக்கு வருவாள். ஹரீஷுடன் கிராமங்களுக்குச் செல்வாள். தன் அப்பாவின் இதயம் தோய்ந்திருக்கும் உலகத்தின் அனுபவங்களைத் தானும் பெறுவாள்.

‘‘இந்த ஆண்டு, கர்நாடக மாநிலத்தில் 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களில் முதன்மையான இடங்களில் வந்தது, எனது வாடிக்கையாளர்களில் ஒருவரின் மகள்தான்’’ என்று பூரிப்புடன் சொல்கிறார் ஹரீஷ். ரிசல்ட் வந்ததுமே, அவளின் பெற்றோர்கள் முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டது ஹரீஷைத்தான்.

‘‘உங்களின் விளக்குகளால்தான், எங்கள் மகள் இரவிலும் படிக்க முடிந்தது’’ என்று நெகிழ்ச்சியில் தழுதழுத்தர்கள் அவர்கள்.

ஹரீஷ் ஹண்டேவுக்கு மகஸேஸே விருது கிடைத்திருப்பதில் ஆச்சரியமில்லைதானே?

- ராஷ்மி பன்சால் எழுதிய 'I have a dream' என்னும் புத்தகத்திலிருந்து...

***
‘நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு!’ - கென்னடி

குடும்ப அட்டையோடு ஒரு குஸ்தி!

யில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் எல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே இணையத்தின் மூலம் வாங்கிவிடலாம்; டெலிபோன் பில், கரன்ட் பில், மின்சார வரி, சொத்து வரியெல்லாம்கூட நெட் மூலம் கட்டிவிடலாம்; தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டு இருக்கும் வேகத்தைப் பார்த்தால், கணினி மூலமே கல்யாணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி, குழந்தை பெற்று, வளர்த்து ஆளாக்கிவிடலாம் போலிருக்கிறது.

ஆனால்...

இன்றைக்குக் குடிமக்களின் அடிப்படை அத்தாட்சியாக விளங்குகிற, ஆதார தேவையாக விளங்குகிற ‘ரேஷன் கார்டு’ பெறுவதற்கு மட்டும், கால இயந்திரத்தில் ஏறி, சுதந்திரத்துக்கும் முந்தைய காலத்துக்குச் செல்ல வேண்டி இருப்பது பெரிய கொடுமை! புதிய கார்டு பெறுவதற்குத்தான் என்றில்லை; புதிய குடும்ப உறுப்பினர் பெயரைச் சேர்க்க வேண்டும், உறுப்பினர் பெயரை நீக்க வேண்டும், முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என எந்த ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும் சரி... லேசில் முடியாது. தாவு தீர்ந்துவிடும். அனுபவத்தில் சொல்கிறேன்.

‘உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை’ (என்ன பாதுகாப்போ?!) என்று பேர் மட்டும் பெத்த பேராக இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரேஷன் கொண்டு வரப்பட்டபோது என்னென்ன நடைமுறைகள், என்னென்ன சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டனவோ, அவையேதான் இன்னமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனவோ என்று எனக்குத் தோன்றுகிறது.

அசோக் நகரிலிருந்து மேற்கு மாம்பலம் குடிபெயர்ந்ததும், குடும்ப அட்டையையும் புதிய முகவரிக்கு மாற்றிவிடலாம் என்று நான் முயன்றபோது கிடைத்த அனுபவங்கள் பத்து பதிவுக்குத் தாங்கும். எனினும், சுருக்கமாகவே சொல்கிறேன்.

சென்ற மாதம் முதல் வாரத்தில், வழக்கமாக உணவுப் பொருள்கள் வாங்கும் அசோக் நகர் ரேஷன் கடைக்குப் போய், முகவரி மாறிவிட்டதைச் சொல்லி, அட்டையை எப்படி அங்கு மாற்றிக் கொள்வது என்று கேட்டேன். தெரியும். சும்மாதான், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்காகக் கேட்டேன்.
“தி.நகர்ல ரேஷன் ஆபீஸ் இருக்கு சார்! அங்கே போய் ஒரு அப்ளிகேஷன் எழுதிக் கொடுங்க. உடனே மாத்திக் கொடுத்துருவாங்க!” என்றார். “அந்த ஆபீஸ் அட்ரஸ் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் சார்!” என்றேன். “எல்லாத்தையும் இங்கேயே கேக்காதீங்க. போய் நாலு எடத்துல விசாரிங்க!” என்று சொல்லிவிட்டு, “கொஞ்சம் நகர்ந்து நில்லுங்கம்மா! இப்படி வெளிச்சத்தை மறைச்சுக்கிட்டு நின்னீங்கன்னா எப்படி பில் போடுறது!” என்று, என் மீது எழுந்த எரிச்சலை, அடுத்து பொருள் வாங்க வரிசையில் நின்றிருந்த பெண்களிடம் காட்டினார்.

தி.நகரில், கண்ணதாசன் சிலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில், சிறிது தூரத்தில் உள்ளது ரேஷன் ஆபீஸ். நெட்டின் மூலம் தெரிந்துகொண்டேன். காரை உதிர்ந்த பழைய கால கட்டடத்தில், குறுகலான மாடிப்படிகள் வழியே ஏறிச் சென்றால், அலுவலகம் வரும். சாலையில் கார்ப்பொரேஷன்காரர்கள் நீளமாகப் பள்ளம் தோண்டி ஏதோ வேலையில் ஈடுபட்டிருக்க, சின்ன மரப்பாலம் (1'X5' அளவுள்ள சின்ன மரப் பலகை) வழியாக அகழியைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. ஒரு ஆள் மட்டுமே ஏறிச் செல்லும்படியான (எஸ்.பி.பி. போன்ற சரீரம் உள்ளவர்களால் அதுவும் சத்தியமாக முடியாது.) படிகளில் நூறு பேர் ஏறி, இறங்கிக்கொண்டு இருந்தார்கள். இவற்றையெல்லாம் நெட்டில் தெரிந்துகொள்ள முடியாது. அனுபவத்தில்தான் அறிய முடியும்.

படிகளின் உச்சியில் அலுவலகம் இரண்டு பக்கமும் பிரிந்து கிடக்கிறது. ஆனால், எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்க வேண்டியதுதான். அத்தனைக் கூட்டம். தவிர, இறங்கத் துடிக்கும் ஜனங்களைச் சமாளித்து, கீழே விழாமல் சுதாரித்து நிற்கத் தனிச் சாமர்த்தியம் வேண்டும்.

இடம் செல்வதா, வலம் செல்வதா எனப் புரியாமல் விழித்தேன். யாரைக் கேட்டாலும், பாவம், அவர்களுக்கும் தெரியவில்லை. “உள்ளே போய்க் கேட்டுப் பாருங்க சார்!” என்றார்கள். ஆனால், எந்தப் பக்கம் உள்ளே போவது என்பதே பிரச்னையாக இருந்தது. குத்து மதிப்பாக வலப்புறம் நுழைய முயன்றேன். “சார்! க்யூவுல வாங்க சார்! காலையிலேர்ந்து நிக்கிறோமில்லே!” என்று இடப்பக்க அறைக்குள்ளிருந்து குரல் வந்தது. அதாவது, வலப்பக்க அறைக்குள்ளிருந்து புறப்பட்ட ஜன வரிசை, பொதுவான ஏரியாவையும் கடந்து, இடப் பக்க அறைக்குள் புகுந்து போயிற்று. சிவனின் அடி முடி காண முடியாத பிரம்மன் மாதிரி திணறினேன்.

அடுத்து, இடப் பக்க அறைக்குள் நுழைந்தேன். முன்னெல்லாம் நெரிசலான பஸ்ஸுக்குள் ஏறிப் பிதுங்கிப் பிதுங்கிப் பயணம் செய்திருந்த அனுபவம் இங்கே எனக்கு அந்த அறையில் நுழைவதற்குக் கைகொடுத்தது. கூட்டத்தில் என்னைத் திணித்துக் கொண்டு உள்ளே புகுந்துவிட்டேன். வவ்வால் புழுக்கை நாற்றம் வீசியது. மேலே கறுப்புக் கறுப்பாக ஒட்டடைகள் தொங்கின. கர்ரக்... கர்ரக்... என்று சீராகச் சத்தமிட்டபடி, அந்தக் கால சீலிங் ஃபேன்கள் விதியே என்று சுழன்றுகொண்டு இருந்தன.

ரங்க்நாதன் தெருவுக்குள் நுழைந்துவிட்டதான உணர்வு. தானாக நகர்த்தப்பட்டு, ஒரு மேஜைக்கு அருகில் போய்விட்டேன். விண்ணப்பத்தையும் ரேஷன் அட்டையையும் வாங்கிப் பார்த்த ஒரு பெண் ஊழியர், “எந்த ஏரியா?” என்றார். “அசோக் நகர்” என்றேன். “முன்னே எங்கே இருந்தீங்க?” என்றார். “அதான் சொன்னேனே, அசோக் நகர். இப்ப மாம்பலம் வந்திருக்கேன். இந்த அட்டையை அசோக் நகர்லேர்ந்து மாம்பலம் அட்ரஸுக்கு மாத்தணும்” என்றேன்.

“மாம்பலத்துல எங்கே?”

“கோவிந்தன் ரோடு!”

“கோவிந்தன் ரோடா?” என்றவர், யோசனையாக ரேஷன் அட்டையை முன்னும் பின்னும் புரட்டிவிட்டு, பக்கத்திலிருந்த ஊழியரிடம், “ஏம்மா, கோவிந்தன் ரோடு நம்ம சர்க்கிள்ளயா வருது?” என்று விசாரித்தார். அவர் உதட்டைப் பிதுக்கினார். “சார், நீங்க ஒண்ணு பண்ணுங்க. அதோ கடைசீல உட்கார்ந்திருக்காங்களே, அந்த மேடத்துக்கிட்ட போய், கோவிந்தன் ரோடு எந்த சர்க்கிள்ள வருதுன்னு கேட்டுக்கிட்டு வாங்க” என்று என்னைத் துரத்தினார்.

மறுபடியும் மனித வெள்ளத்தில் நீந்தி, அவர் குறிப்பிட்ட அந்த அம்மையாரை அணுகி, விசாரித்தேன். அவர் பக்கத்தில் இருந்தவரைக் கலந்தாலோசித்துக்கொண்டு, ‘சைதாப்பேட்டை சர்க்கிள்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

மீண்டும் க்யூவின் இடையில் புக முடியவில்லை. “நடுவுல பூராதேய்யா! வேலை வெட்டி இல்லாமயா இங்கே எல்லாரும் நின்னுட்டிருக்கோம்?” என்று சத்தம் வந்தது பின்னாலிருந்து. அப்புறம், எனக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவர், “சார் ரொம்ப நேரமா க்யூவுலதாம்ப்பா வராரு. ஏதோ விசாரிக்கச் சொன்னாங்கன்னு போனாரு” என்று சிபாரிசு செய்ய, மீண்டும் கவுன்ட்டரை அணுகி, ‘சைதாப்பேட்டை சர்க்கிளாம்’ என்றேன்.

“சரி, இங்கே அட்டையை கான்சல் பண்ணிக்குங்க. சைதாப்பேட்டை போய் புது முகவரிக்கு மாத்திக்குங்க” என்று ஒரு கூப்பன் கொடுத்தார் அந்தப் பெண்மணி.

“அட்ரஸ் ப்ரூஃப் இருக்குதா?” என்றார்.

“அட்ரஸ் ப்ரூஃபா? இப்பத்தாம்மா புது முகவரிக்கு வந்திருக்கேன்!” என்றேன்.

“இல்லீங்க. அட்ரஸ் புரூஃப் இல்லாம முடியாது. காஸ் ரசீது, பாங்க் புஸ்தகம், டெலிபோன் பில்னு ஏதாவது கொண்டு வந்து, இந்த கூப்பனோடு சேர்த்து, எதிர் ரூம்ல கவுன்ட்டர்ல கொடுங்க. மத்தியானம் ஒரு மணிக்குள்ள வரணும். இல்லேன்னா நாளைக்குதான்!”

அவர் அப்படிச் சொல்லும்போது மணி 12.

பைக்கில் வீட்டுக்குச் சென்று, காஸ் பில் (நல்லவேளையாக, புது வீடு போனதுமே புது காஸ், புது வீட்டுக்கு வந்திருந்தது!) எடுத்துக்கொண்டு மீண்டும் ரேஷன் ஆபீஸ் வந்தேன். மணி 12:30.

மீண்டும் நுழைவுப் போராட்டம். ஏகப்பட்ட கியூக்கள். இடமே இல்லாததால், எல்லாருமே நெருக்கியடித்து நின்றுகொண்டு இருக்க, எது மனு கொடுக்கும் க்யூ, எது முகவரி மாற்றும் க்யூ, எது ரிசல்ட் தெரிந்துகொள்ளும் க்யூ என்று வித்தியாசமில்லாமல் ஒரே கும்பல் போலத்தான் தெரிந்தது என் கண்ணுக்கு. அங்கே மணிக் கணக்காக நின்று பழகியவர்களுக்கு மட்டும்தான் எது எந்தக் க்யூ என்று இனம் காண முடிந்தது.

நான் மனு கொடுக்க வந்திருக்கிறேன் என்று தெரிந்து, இன்ன க்யூ என்று சொன்னார்கள். அது நேர் வரிசையாக இல்லாமல், இஷ்டத்துக்கு வளைந்து வளைந்து பாம்பு மாதிரி இருந்தது. போதாக்குறைக்கு குறுக்கேயும் நெடுக்கேயும் (வேறு வழியில்லாமல்) செல்கிறவர்களால் வரிசை அவ்வப்போது எறும்புக்கூட்டம் மாதிரிச் சிதறிச் சிதறி, மீண்டும் ஒன்றிணைந்துகொண்டு இருந்தது.

மதியம் 1:30 மணிக்கு கூப்பனையும் ரேஷன் கார்டையும் கொடுத்தேன். வாங்கி முத்திரையிட்டு, வேறு ஒரு கூப்பன் தந்து, பத்து நாள் கழித்து வரும்படி சொன்னார்கள்.

பத்து நாள் கழித்துப் போனபோதும், இதே அவதிகள்தான். ஆனால், அனுபவம் காரணமாக, இந்த முறை எந்த க்யூவில் நிற்க வேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. காலையில் 10 மணிக்கு நின்றவன், 12:30-க்கு கவுன்ட்டரை நெருங்கினேன்.

அவரும் ஒரு கூப்பன் தந்தார். “கான்சல் பண்ணியாச்சு! இதைக் கொண்டு போய் சைதாப்பேட்டை ஆபீஸ்ல கொடுத்து முகவரி மாத்திக்குங்க!” என்றார்.

அன்றைக்கே போக முடியவில்லை. இரண்டு நாள் கழித்துப் போனேன். இந்த முறையும் ரேஷன் ஆபீசில் யாரும் முகவரி சொல்லி உதவவில்லை. சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் விசாரித்ததில், ஆட்டோக்காரர் ஒருவர் சொன்னார்.

தி. நகர் ஆபீசுக்குக் கொஞ்சமும் சளைக்காமல், அதைப் பிரதியெடுத்த மாதிரிதான் இருந்தது சைதாப்பேட்டை அலுவலகமும், அங்குள்ள பணியாளர்களும்! பெரிய ஹால்; நடுநடுவே கான்க்ரீட் தூண்கள். அந்தத் தூண்களுக்கு இடையில் பழைய கால மர பீரோக்கள் அடைத்துக்கொண்டிருக்க, சுவர்களுக்குப் பதிலாக அவையே ஹாலை பல அறைகளாகத் தடுத்தாட்கொண்டிருந்தன.

மீண்டும் நீளமான வரிசையில் நின்றேன். நீளமான க்யூவில் நிற்கவேண்டுமே என்கிற கடுப்பில்தான் திருப்பதி வேங்கடாசலபதி போன்ற காஸ்ட்லி சாமிகளைத் தேடி நான் போவது இல்லை. அதே போல், சினிமா பார்க்கும் ஆசை நிறைந்த சின்ன வயதிலும்கூட தியேட்டர் க்யூவில் நின்றது இல்லை. இங்கே விதியே என்று நின்றேன்.

இரண்டு மணி நேரம் நின்ற பிறகு, கவுன்ட்டரை நெருங்கி, தி. நகர் கான்சலேஷன் கூப்பனையும் ரேஷன் கார்டையும் நீட்டினேன். (மறந்துவிட்டேனே, அட்ரஸ் புரூஃப் இங்கேயும் கேட்டார்கள். முன்யோசனையாக எதற்கும் இருக்கட்டும் என்று, இந்த முறை வாடகை ஒப்பந்த பத்திரத்தின் ஜெராக்ஸை எடுத்துப் போயிருந்தேன்.) இங்கேயும் ஒரு கூப்பன் கொடுத்து, பத்து நாள் கழித்து வரச் சொன்னார்கள்.

அதே போல் பத்து நாள் கழித்துப் போய், கால் கடுக்க இரண்டு மணி நேரம் நின்று, (கவனிக்க: நான்காவது முறையாக, ரேஷன் கடை வரிசையில் இரண்டு மணி நேரம் நிற்கிறேன்.) அவர்கள் தந்த இன்னொரு கூப்பனையும் ரேஷன் கார்டையும் வாங்கி வந்தேன். அந்த கூப்பனைக் கடையில் கொடுத்துப் பதிந்து கொள்ள வேண்டுமாம்.

வீட்டு வாசலில் ஒரு ரேஷன் கடை உள்ளது. அங்கே போய் இந்த கூப்பனை நீட்டினால், “இதுல குறிச்சிருக்கிற கடை எண் இது இல்ல சார்! மேட்டுப்பாளையத்துல வரும்னு நினைக்கிறேன்” என்றார். மேட்டுப்பாளையத்தில் இரண்டு மூன்று கடைகளில் விசாரித்தும், இதில் குறிப்பிட்டிருந்த எண் கொண்ட கடை எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

திரும்பி வந்தேன். முதல் காரியமாக, வாசல் ரேஷன் கடை எண்ணை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டேன். மீண்டும் மறுநாள் சைதாப்பேட்டை அலுவலகத்துக்குப் படையெடுத்தேன்.

மீண்டும்... இதை எழுதும்போதே கால் வலிக்கிற மாதிரி ஓர் உணர்வு!

மணிக் கணக்காகக் காத்திருந்து, கவுன்ட்டரை நெருங்கி, கூப்பனை நீட்டி, “என்ன மேடம்... இப்படியொரு எண் கொண்ட கடையே எங்கே இருக்குன்னு தெரியலையே?” என்றேன். கூப்பனை வாங்கி அப்படியும் இப்படியும் புரட்டி ஏதோ கண்டுபிடித்துவிட்டது போன்ற பாவனையில், என்னவோ திருத்தம் செய்ய இருந்தவரைத் தடுத்து, “எங்கேயாவது போட்டுடாதீங்க. இந்த நம்பர் உள்ள கடைக்கு எழுதிக் கொடுங்க” என்று வாசல் கடை எண்ணை நீட்டினேன்.

ரெஜிஸ்டரில் எழுதிக்கொண்டு, கூப்பனிலும் மாற்றித் தந்தார்.

அதை வாங்கி வந்து, உடனடியாக ரேஷன் கடையில் முகவரி மாற்றிப் பதிந்துகொண்டால்தான் திருப்தியாக இருக்கும்போலிருந்தது.

ஆனால் பாருங்கள், கடைக்காரர் ஒரு வாரம் லீவில் போயிருந்தார். “25-ஆம் தேதிதாங்க வருவாரு. அப்ப வந்து ரெஜிஸ்டர்ல என்ட்ரி போட்டுக்குங்க!” என்று அனுப்பினார், கடையில் பொருள்களை நிறுத்துப் போடுபவர்.

அப்புறம் நாலைந்து தடவை நடையாய் நடந்து, (வாசல் கடை என்பதால் இது ஒரு சௌகரியம்!) ஒருவழியாக 30-ஆம் தேதி அவர் வந்ததும், போய்ப் பதிந்துகொண்டுவிட்டேன்.

இந்தப் புதிய ரேஷன் கடையில் இன்னும் பொருள்கள் வாங்கவில்லை.

இந்த அனுபவத்தில், எனக்குள் எழுந்த சில கேள்விகள்:

1) ரேஷன் ஆபீசில் வேலை செய்கிறவர்களுக்கே கூடவா எந்த ஏரியா, எந்த சர்க்கிளில் வரும் என்று தெரியாமல் இருக்கும்?

2) அனகோண்டா பாம்பு மாதிரி நீள நீள வரிசைகளில் மனிதக் கூட்டம் நிற்பதைப் பார்த்தும் சற்றும் பதற்றமோ பரபரப்போ இல்லாமல் எப்படி இவர்களால் சினிமா கதை, சீரியல் கதை பேசிக்கொண்டு, பஜ்ஜி தின்றுகொண்டு, சாவதானமாக வேலை செய்ய முடிகிறது?

3) சற்றும் சளைக்காமலும், பொறுமை இழக்காமலும், எப்படி ஜனங்களால் மணிக்கணக்காக வரிசையில் நிற்க முடிகிறது?

4) ரேஷன் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று ரேஷன் கடைக்காரர்களுக்குத் தெரியுமா, தெரியாதா? தெரிந்தேதான், அலையட்டுமே இவன் என்று அலைக்கழிக்கிறார்களா? அதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்?

5) எனக்குக் கொடுக்கப்பட்ட கூப்பன்களின் எல்லாம் பின்புறத்தில், ஒரே ஏரியாவுக்குள் மாற்ற 3 நாள், ஒரே ஊருக்குள், ஆனால் வேறு ஏரியாவுக்கு முகவரி மாற்ற 1 வாரம், வேறு ஊருக்கு மாற்ற 10 நாள் என்று காலக் கெடு அச்சிட்டிருந்தார்கள். ஆனால், என் ரேஷன் கார்டை அசோக் நகரிலிருந்து மாம்பலம் முகவரிக்கு மாற்றுவதற்கு எனக்கு ஆன நாட்கள், அவர்கள் கூப்பனில் மீண்டும் வரச் சொல்லித் தேத்ஹி குறித்துக் கொடுத்த கணக்குப்படி 20 நாள். எனில், கூப்பனின் பின்பக்கம் அச்சிடப்பட்டுள்ள காலக் கெடு, யார் காதில் பூ சுற்ற?

6) ரேஷன் அட்டைகளை எப்போது கணினிப்படுத்தப்போகிறார்கள்? இன்னுமொரு நூற்றாண்டு ஆகுமோ?

***

எதற்கும் தேவை பொறுமை. வேக வேகமாகப் பல குடங்கள் தண்ணீர் ஊற்றினாலும், ஒரு மரம் அதற்குரிய காலத்தில் வளர்ந்து உயரும்!

கல்கியின் மருமகள்!

சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி, ஒரு சில நாட்கள் வெட்டியாகப் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த சமயம் (1988-ல்)... என்னை உடனே வந்து பார்க்கச் சொல்லி, கல்கி ஆசிரியரிடமிருந்து கடிதம் வந்தது. அதில் ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்கள் சார்பாகக் கையெழுத்திட்டு, அலுவலக உதவியாளர் ஒருவர் மூலம நேரில் கொடுத்து அனுப்பியிருந்தார் கி.ரா-வின் மகள் சீதாரவி.

உற்சாகமாகி, உடனே கிளம்பிப் போனேன். அப்போது கி.ராஜேந்திரன் அவர்களின் வீடு, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்துக்குப் பக்கத்தில் ஏரிக்கரைச் சாலையில் இருந்தது.

நான் போனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். கீழே ஹாலில், முதிய பெண்மணி ஒருவர் சோபாவில் அமர்ந்து, டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். நான் போனதும், வாசலில் நிழலாடியதைக் கண்டு, கண்களை இடுக்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தவர், "யார்ரா... பேப்பர் போடுற பைய‌னா?" என்றார்.

"இல்லை பாட்டி! நேர்ல வந்து பார்க்கச் சொல்லி ஐயா லெட்டர் அனுப்பியிருந்தார்" என்று, சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்து, அவர் முன்பாகக் காட்டினேன்.

"என்னத்துக்கு வரச் சொன்னானோ... தெனம் நூறு பேர் வரா!" என்று சொல்லிவிட்டு, மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டார்.

நான் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், வாசலில் நின்றபடியே தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஏதோ சினிமா பாடல் காட்சி. பாட்டிக்கு அதில் மனம் லயிக்கவில்லை போலும்! சிறிது நேரத்துக்குப் பின்பு, "டீ... இது என்னமோ தத்தக்கா புத்தக்கான்னு ஆடறதுகள். வந்து கிரிக்கெட்டையானும் போடு! இது ஒண்ணும் நன்னால்லை" என்று குரல் கொடுத்தார்.

"தோ வரேம்மா" என்று குரல் கேட்டது.

நான் காத்திருந்தேன். அதற்குள் அந்த ஹாலை நோட்டம் விட்டேன். ஆடம்பரமோ படாடோபமோ இல்லை. சுவாதீனமாய் சமையல்கட்டு வரைக்கும் போய், "ஒரு தோசை கொடுங்க, மாமி" என்று உரிமையாய்க் கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் போன்ற தோரணையில் இருந்தது அந்த ஹால். சுவரில், கடல் அலை வெளேரென சீறி அடிக்கும் ஒரு சிறு பாறை மீது, நமக்கு முதுகு காட்டியபடி ஒருவர் அமர்ந்திருக்கும் ஆயில் பெயின்ட்டிங் ஒன்று காணப்பட்டது. வேட்டி அணிந்திருந்தார். கையில் தம்புரா வைத்திருந்தாரோ என்று ஞாபகம். சரியாக நினைவில்லை.

அந்தப் படத்தை வரைந்தவர் ஓவியர் மணியம். படத்தில் இருந்தவர் பேராசிரியர் கல்கி.

உள்ளிருந்து 'தோ வரேம்மா' என்று குரல் கொடுத்தவர் கல்கியின் மருமகள். அதாவது, கி.ராஜேந்திரனின் மனைவி.

ஹாலில் சோபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டி, கல்கியின் மனைவி. வாசலில், இவர்களின் அருமை பெருமை தெரியாத நான்.

"ஏண்டாப்பா! உனக்கு கிரிக்கெட் போடத் தெரியுமா?" என்று என்னிடம் ரிமோட்டை நீட்டினார் பாட்டி. நான் பகபகவென முழித்தேன். ஷோ-ரூம்களின் வெளியே நின்ற‌படி கிரிக்கெட் பார்க்கும் கும்பலில் ஒருத்தனாகக்கூட டி.வி. பார்த்தறியாதவன் நான். ரிமோட் என்கிற விஷயமே எனக்குப் புதுசு.

"இல்லை பாட்டி! எனக்குத் தெரியாது" என்றேன்.

"என்ன பிள்ளை நீ! நான்தான் வயசானவோ! தெரியாது. நீ இதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாமோ? போகட்டும், கிரிக்கெட்டாவது பார்ப்பியோ, மாட்டியோ?" என்றார் பாட்டி.

அதற்கும் நான் அசடு வழிய ஒரு பதிலைச் சொல்வதற்குள், உள்ளிருந்து கி.ராஜேந்திரனின் மனைவி வந்து, டி.வியில் கிரிக்கெட்டைப் போட்டுவிட்டு, பின்பு நான் நிற்பதைக் கவனித்தார்.

"சாரைப் பார்க்கணுமா? மேலே மாடிக்குப் போங்கோ. அவர் சாப்பிட்டுட்டு மாடிக்குப் போயிட்டார்னா அப்புறம் சாயந்திரம் நியூஸ் போடறச்சதான் இறங்கி வருவார். அங்கேயே போய்ப் பாருங்கோ!" என்றார்.

வாசல் ரேழியிலேயே மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் இருந்தன. மேலே ஏறிப் போனேன்.

கி.ரா. அமர்ந்திருந்தார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கடிதத்தைக் காட்டினேன்.

"உங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். சாவியிலே நீங்க பிரமாதமா வொர்க் பண்றதா சாரே சொல்லியிருக்கார். ஏன் வேலையை விட்டீங்கன்னு கேக்கப் போறதில்லே. கல்கியிலே சேர விருப்பமா?" என்றார்.

"விருப்பம்" என்றேன்.

"எடுத்த எடுப்பிலே உங்களை பர்மனென்ட் ஸ்டாஃபா சேர்க்க முடியாது. அதுக்கு எனக்கு ரைட்ஸ் கிடையாது. நிர்வாகக் குழு இருக்கு. எல்லாரும் சேர்ந்துதான் முடிவெடுக்கணும். என் பொண்ணையேகூட சட்டுனு இதுல சேர்த்துடலே நான்! படிப்படியாத்தான் வந்தா. அதனால, முதல்லே நீங்க வந்து போயிண்டிருங்கோ. மேட்டர் பண்ணுங்கோ. ஒரு ஆறு மாசம் போகட்டும். நீங்க எப்படி வேலை செய்யறீங்கன்னு அப்பத்தான் எங்களுக்கும் தெரியும். அப்புறமா உங்களை அப்பாயின்ட் பண்ணிக்கறோம்!" என்றார் கி.ரா.

"நன்றி!" என விடைபெற்று எழுந்தேன்.

கல்கியில் சேர வேண்டும் என நான் விண்ணப்பம் போடவில்லை. சாவியிலிருந்து நான் விலகியது தெரிந்து, அவர்களேதான் அழைப்பு அனுப்பினார்கள். அப்படியிருக்கையில், திரு.கி.ராஜேந்திரன் பேசியது எனக்கு உடன்பாடாக இல்லை.

கீழே வந்தேன்.

"பார்த்தாச்சா? கிளம்பிட்டேளா?" என்றார் விஜயாம்மா. கி.ரா-வின் மனைவி.

எதற்காக வந்தேன், வந்த காரியம் நிறைவேறியதா என்று கேட்கவில்லை.

"வேகாத வெயில்ல வந்திருக்கேள். கொஞ்சம் மோரானா சாப்பிட்டுட்டுப் போங்கோ!" என்று உள்ளே போய், ஒரு டம்ளர் நிறைய, கறிவேப்பிலையிட்ட மோருடன் வந்தார்.

குடித்துவிட்டு, நன்றி சொல்லிக் கிளம்பினேன். அந்தச் சில நிமிடங்கள்தான் அவரைப் பார்த்தது. அவர் முகம்கூட மனதில் பதியவில்லை.

எனவேதான்...

நேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில், சாஸ்திரிகள் ஐந்தாறு பேர் சுற்றிலும் நின்று மந்திரங்களை முழங்கிக்கொண்டு இருக்க, மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தவர் அவர்தானா என்று என்னால் முகத்தைப் பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள இயலவில்லை.

ஆமாம், நேற்று காலமாகிவிட்டார், காலத்தால் அழியாத அமர காவியங்களைப் படைத்த பேராசிரியர் கல்கியின் அருமை மாட்டுப் பெண்.

நான் போயிருந்தபோது மின் மயானத்தில் மந்திரம் ஓதும் சாஸ்திரிகள், மயான ஊழியர்கள் ஒரு சிலரைத் தவிர‌ யாருமே இல்லை. ஐந்து நிமிடம் கழித்து, தளர்ந்த நடையுடன் வந்தார் கி.ராஜேந்திரன். அவரோடு பத்துப் பதினைந்து பேர் வந்தார்கள். அவர்களில் பத்திரிகையாளர் சந்திரமௌலியைத் தவிர, எனக்குப் பரிச்சயமான முகம் வேறில்லை.

உடலுக்கு எரியூட்டும் வரை இருந்தேன். பின்னர், அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்த கி.ராஜேந்திரனிடம் சென்று, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

"எதிர்பார்க்காத மரணம் இது. நல்லாத்தான் சிரிச்சுப் பேசிண்டிருந்தா. திடீர்னு மாஸிவ் அட்டாக். போயிட்டா. நினைக்கவே இல்லே இவ போயிடுவான்னு!" என்றார்.

விடைபெறாமல் கிளம்பினேன்.

திருமதி விஜயா ராஜேந்திரனின் முகம் இப்போதும் என் நினைவில் இல்லை; அன்று அவர் தந்த மோரின் மணமும் சுவையும் மட்டும் ஞாபகம் இருக்கிறது!

***
பார்த்ததும் கேட்டதும் மறந்துவிடலாம்; உணர்வுகள் மறக்காது!

முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி!

மிகச் சிறந்த வைஷ்ணவ அறிஞரும் உபன்யாசகருமான வேளுக்குடி கிருஷ்ணன் பற்றி எனக்குத் தெரிய வந்தது, மிகச் சமீபத்தில்தான். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், கலைஞர் மு.கருணாநிதியின் 'போர்வாளும் பூவிதழும்' நாட்டிய‌ நாடக நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது, அன்றைய முதல்வர் கருணாநிதி கலந்துகொண்ட‌ அந்த விழாவில், அதே மேடையில், ஆச்சர்யப்படும் விதமாக, அரசியல் கலப்பில்லாத ஆன்மிகவாதிகளான திருச்சி கல்யாணராமனும், வேளுக்குடி கிருஷ்ணனும் கலந்துகொண்டு பேசியதை நாளேடுகளில் படித்தேன்.

கம்பராமாயணத்தில் வரும் 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்' என்கிற பாடலைப் பாடிய திருச்சி கல்யாணராமன், அந்தப் பாடலின் இறுதி வரியான 'அன்னவர்க்கே சரண் நாங்களே' என்பதை, கலைஞரைக் கைகாட்டி, அவருக்குச் சரண் நாங்கள் என்று ஜாடையாகக் குறிப்பிடும் விதமாகச் சொல்லி முடித்தார். அத்தோடு விட்டாரா? ஜால்ராவின் உச்சத்துக்கே போய், 'பிள்ளைக்குட்டி இல்லாதவர்களையெல்லாம் அம்மா என்று சொல்கிறார்கள்' என்று ஜெயலலிதாவையும் வம்புக்கு இழுத்தார்.

அடுத்துப் பேச வந்த வேளுக்குடி கிருஷ்ணன், இதற்கு நேர்மாறாக, தனி மனித புகழ்ச்சியோ, அரசியல் கலப்போ இன்றி, வைஷ்ணவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை மட்டும் அழகாகப் பேசி முடித்தார். மேடையிலேயே கலைஞர் அதை 'தேனினும் இனிய தமிழ்' என்று பாராட்டினாலும்கூட, தன்னை அவர் பாராட்டிப் புகழ்ந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே என்கிற ஆதங்கம் தாங்கவில்லை அவருக்கு. அதனால், "இந்த மேடையில் எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால் யார் யாரைச் சந்திக்க நேரிடுமோ என்கிற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கிறார்" என்று பூடகமாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலப் பேசினார் கலைஞர்.

இந்த நிகழ்வுதான் எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஆரம்பப் புள்ளி. சக்தி விகடனில் 'கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்' எனும் தலைப்பில் அவரது சொற்பொழிவுகளைக் கட்டுரைத் தொடராகப் பிரசுரிக்கலாம என்கிற பேச்சு வந்தபோது, இணையத்தில் வேளுக்குடி கிருஷ்ணனைப் பற்றிய தகவல்களைத் தேடிப் பிடித்துப் படித்தேன்.

சக்தி விகடனுக்குப் பொறுப்பேற்றிருக்கிறேனே தவிர, நான் ஆன்மிகவாதி அல்ல! திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்கள் தவிர, வேறு யாருடைய சொற்பொழிவுகளையும் நான் கேட்டது இல்லை. ஆன்மிகக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டு பேசுவதற்காகக் கம்பராமாயணம், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்பாவை, திருவெம்பாவை, வள்ளலார் பாடல்கள் போன்று ஒரு சில‌ ஆன்மிக இலக்கியங்களைப் படித்திருக்கிறேன். கடவுள்- அதாவது நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு என்கிற அளவில் நம்பிக்கை கொண்டவன். அந்தக் கடவுளை நம‌க்குப் பிடித்த மாதிரி ரூபத்தில் வணங்குவதற்கான சுதந்திரத்தையும், தேர்ந்தெடுத்துக்கொள்ள வசதியாகப் பல்வேறு வித கடவுளர் வடிவங்களையும் நமக்கு அளித்திருக்கிறது இந்து மதம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிவன், கிருஷ்ணன், முக்கியமாகப் பிள்ளையார் ஆகிய வடிவங்களை இறைச் சக்தியின் குறியீடுகள‌கக் கொண்டு வணங்கி வருகிறேன். எனக்குத் தெரிந்த‌ ஆன்மிகம் அவ்வளவுதான்! மிகச் சிறு வட்டம்.

வேளுக்குடி கிருஷ்ணன் பொதிகை சேனலிலும், விஜய் டி.வியிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றுவதைப் பின்னர் அறிந்து, நானும் சில நாட்கள் கேட்டேன். 'முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி' என்று ஒரு சொலவடை உருவாகுமளவுக்கு, அவரது பேச்சு அத்தனை ரசிக்கத்தக்கதாக இருப்பதையும், மிகப் பெரிய‌ ரசிகர் வட்டம் அவருக்கு இருப்பதையும் அறிந்தேன். வெளிநாடுகளுக்கும் பறந்து பறந்து சொற்பொழிவாற்றி, உலகமெலாம் தமிழின் இனிமையைப் பரப்பி வருகிறார் வேளுக்குடி.

இவரின் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை. இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேசவேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை இவருக்கு. அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ, அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப் பாண்டித்யம்!

ஒருமுறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள், 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்" என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டிவிட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர். ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்ததுபோல், அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

"தலையை மொட்டை அடித்துக்கொள்வது எதற்குத் தெரியுமா? நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான். ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டால் மொட்டையடித்துக் கொள்வான். இவன் அவனிடத்தில் தோற்றுவிட்டான் என்பதற்கான அடையாளம் அது. திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு? ‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’ என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு. அப்படிச் செய்துவிட்டானானால், அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும். இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன், வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி, ‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும், இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச் செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’ என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிவிட்டார்.

இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு ‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.

நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார்திருநகரியில், அவர் அருளிச் செய்த திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். இது ஒரு சாதனை!

இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின் பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60. சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உபன்யாசம் செய்துகொண்டு இருந்தார். மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக்கொண்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப் பரிசோதித்துவிட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள். ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.

1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி 30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர். அதை முடித்துவிட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார். அங்கே ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது. அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்துவிட்டு, பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார். ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்; அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!

***
கடவுள் இல்லாமல் உங்களால் செயல்பட முடியாது; நீங்கள் இல்லாமல் கடவுள் செயல்பட மாட்டார்!

மதிப்புக்குரிய வாசகர்களே..!

திவு எழுதி ரொம்ப நாளாகிவிட்டது. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 'ஆமா! என்னத்தைப் பெரிசா எழுதிக் கிழிக்கப் போறோம்!' என்கிற எண்ணம்தான். தவிர, ஊக்கப்படுத்துவோர் இல்லையென்றால், சோம்பேறித்தனம் வந்துவிடுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால், அலுவலக நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து, "ஏன் சார் ரொம்ப நாளாவே நீங்க‌ பதிவு எதுவும் எழுதலை?" என்று அக்கறையோடு விசாரித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "என் வலைப்பூக்களை நீங்க படிக்கிறீங்களா என்ன?" என்று கேட்டேன். "தொடர்ந்து படிக்கிறேன் சார்! பழைய சாவி கால நினைவுகளை நீங்க பகிர்ந்துக்கிற விதம் நல்லாருக்கு!" என்றார். ஆச்சரியமாக அதே நாளில் வேறொரு நண்பரும் என்னிடம், "சார்! நீங்க பிளாக் எழுதறீங்களா சார்? துபாய்ல எனக்கொரு ஃப்ரெண்டு உண்டு. அவன் நேத்து என்னோட பேசிட்டிருக்கும்போது, உங்க பிளாகைப் பத்திச் சொன்னான். தொடர்ந்து படிக்கிறானாம். கொஞ்ச நாளா சார் எதுவும் எழுதக் காணோமே, என்ன விஷயம்னு கேட்டான்" என்றார். வெறுமே புன்னகைத்து வைத்தேன். வேறு என்ன பதில் சொல்வது?

சிறுகதையோ, கவிதையோ நம் உள்ளிருந்து 'எழுது... எழுது...' என்று நம்மை உந்தித் தள்ள வேண்டும். அனுபவப் பகிர்வுகளும் அப்படித்தான்! எழுதித்தான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. எழுதப்படாமல் விட்ட சிறுகதைகளாலோ, கவிதைகளாலோ, அனுபவப் பகிர்வுகளாலோ யாருக்கும் எந்த நட்டமும் இல்லை என்பது என் கருத்து. எதையாவது எழுதினால், அதன் மூலம் எழுதுபவருக்கோ படிப்பவருக்கோ ஏதாவது பலன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மனத் திருப்தியாவது ஏற்பட வேண்டும்.

அப்படியொரு மனத் திருப்தி கிடைக்கும் என்பதால்தான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

கடந்த சனிக்கிழமையன்று, தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டலில், விகடன் குழும முக்கியஸ்தர்களின் கூட்டம் நடந்தது. Know your customer என்பதுதான் கூட்டத்துக்கான பிரதான நோக்கம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த ஆனந்த விகடன் பத்திரிகைக்கும், பிற்பாடு நான் கதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில், அதாவது 80-களில் நான் கண்ட விகடன் பத்திரிகைக்கும், பின்னர் விகடனில் நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் (90-கள்) நான் பார்த்த விகடனுக்கும், இப்போதைய விகடனுக்கும் அபார மாற்றம்; அபார வளர்ச்சி! தவிர, விகடனின் ஆரம்ப கால இதழ்களிலிருந்தே நான் பார்த்திருப்பதால், இந்த மாற்றம் அசுரத்தனமான மாற்றமாக, விகடன் விசுவரூபம் எடுத்திருப்பது எனக்குத் தெளிவாகவே தெரிகிறது.

விகடனின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்ன? பல காரணங்களைச் சொல்லலாம். முக்கியமாக இரண்டு காரணங்கள் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று... வாசன் காலத்திலிருந்து இன்று வரைக்கும் வாசகர்களோடு விகடன் கொண்டிருக்கும் அந்நியோன்னிய உறவு. மற்றொன்று... இளமையாக இருப்பது.

முன்னெல்லாம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, விகடன் எடிட்டோரியல் குழுவினர், ஊர் ஊராகத் தமிழகம் முழுக்கச் சென்று, விகடன் பற்றிய‌ வாசகர்களின் கருத்துக்களைச் சேகரிப்போம். அப்போது வாசகர்களிடம் 'கண்டிப்பான தமிழ் வாத்தியார்' போன்ற இமேஜ்தான் விகடனுக்கு இருந்தது. இன்றைக்கு அது முற்றிலும் மாறி, 'சுறுசுறுப்பும் துடிப்பும் நிறைந்த இளம் பெண்' இமேஜ் கிடைத்திருக்கிறது.

இதற்குக் காரணம், விகடனின் இன்றைய நிர்வாக இயக்குநரும், அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் பேரனுமான ஸ்ரீனிவாசன்தான். அவரே ஓர் இளைஞர். அவரின் துடிப்பான வழிகாட்டுதலில், இன்று விகடனில் இளைஞர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கிறது. எனில், பத்திரிகை இளமைத் துடிப்போடு திகழ்வதில் வியப்பென்ன?

இளமையை உயர்த்திப் பிடிக்கும் அதே நேரத்தில், விகடனுக்குள்ள பழம் பெருமையையும் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறவராக திரு.ஸ்ரீனிவாசன் இருப்பது போற்றுதலுக்குரியது. விகடனை ஒரு சரியான சமன்பாட்டில் எடுத்துச் செல்வது அதுதான்!

மற்ற பத்திரிகைகளுக்கும் அவற்றின் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கத்தைவிட, ஆனந்த விகடனுக்கும் அதன் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கம் ஆயிரம் மடங்கு அதிகம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். மற்ற பத்திரிகைகளுக்கு இருப்பவர்கள் வெறும் வாசகர்கள்தான். ஆனால், விகடன் வாசகர்களுக்கு விகடன் வெறுமே ஒரு பத்திரிகை மட்டுமல்ல; அவர்களின் குடும்பத்தில் ஒரு அங்கம்!

ஒரு சின்ன உதாரணம் சொன்னால் விளங்கும். ஒரு முறை சர்வே எடுக்கப் போயிருந்தோம். ஆனந்த‌ விகடன் உள்பட ஏழெட்டுப் பத்திரிகைகள் வாங்கிப் படிக்கும் ஒரு குடும்பத்துக்குச் சென்று, அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன்.

அந்த நேரத்தில், ஆனந்த விகடனில் ஒரு நடிகையின் படம் கொஞ்சம் கிளாமராகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. சினிமா ஸ்டில்தான் அது! என்றாலும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதை ஜீரணிக்கவில்லை. கடுங்கோபத்துடன் என்னிடம் பேசினார்கள். "இப்படித்தான் படம் போடுவீங்களா? வயசுப் புள்ளைங்க, பொண்ணுங்க இருக்கிற வீட்டில் இதை எப்படி நடு ஹால்ல போட முடியும்? நாங்க ஐம்பது வருஷத்துக்கு மேலா விகடனை வாங்கிப் படிச்சுக்கிட்டிருக்கோம். முன்னெல்லாம் குழந்தைங்க பார்த்தா பார்க்கட்டும்னு தைரியமா விகடனை மேஜை மேல போட முடிஞ்சுது. இன்னிக்கு ஒளிச்சு வைக்க வேண்டியிருக்கு" என்று கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்தார்கள்.

சினிமாவிலிருந்து, இன்றைய பெண்கள் உடுத்துகிற உடைகளிலிருந்து, தினம் தினம் நம் வீட்டு வரவேற்பறைக்கே வருகிற தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலிருந்து அத்தனையும் மாறி இருப்பதையும், அவற்றோடு விகடனும் சற்று மாற வேண்டிய சூழ்நிலை உருவானதையும் அவர்களுக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னேன். "என்னமோ சமாதானம் சொல்றீங்க! ஆனா, விகடன் இப்படிப் பண்ணும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லீங்க. தப்பு தப்புதான். அதை ஒத்துக்கோங்க!" என்றார் அந்த வீட்டம்மா கறாராக!

அப்போது, எதிரே டீப்பாய் மீது இருந்த வேறொரு பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன். அந்தம்மா இவ்வளவு நேரம் எந்த ஸ்டில்லுக்காக விகடனைச் சாடு சாடு என்று சாடினாரோ, அதே படத்தின் வேறொரு ஸ்டில் அந்தப் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. இன்னும் கவர்ச்சியாக! நான் புன்னகையோடு அதை அவர்களிடம் காண்பித்து, "விகடனை மேஜையில் வைக்க முடியலைன்னு கோபிச்சுக்கிறீங்களே! இதை மட்டும் எப்படி வெச்சிருக்கீங்க?" என்று கேட்டேன்.

"அவன் எப்படி வேணா போடலாங்க. அது பத்தி நமக்கென்ன கவலை? தெருவுல எவளோ ஒருத்தி கிளாமரா டிரெஸ் பண்ணிக்கிட்டுப் போனா, போகட்டும் கழுதைன்னு விட வேண்டியதுதான். அதுவே எம் பொண்ணு அப்படி டிரெஸ் பண்ணா பார்த்துக்கிட்டுச் சும்மா இருப்பேனா? அடி பின்னிட மாட்டேன்!" என்றார். "அந்தப் பத்திரிகையில் வர்ற வேற சில நல்ல விஷயங்களுக்காகத்தான் அதை நாங்க வாங்கிப் படிச்சுக்கிட்டிருக்கோம். மத்தபடி, அது எப்படியோ தொலையட்டும்னு விட்டுருவோம். லெட்டர் கூட எழுதிப் போட மாட்டோம். ஆனா, விகடனை எங்களால அப்படி விட முடியாது. இந்தப் படத்தைப் பார்த்ததுலேர்ந்து விகடனா இப்படி, விகடனா இப்படின்னு பொங்கிப் பொங்கி வருதுங்க. சொன்னா நம்ப மாட்டீங்க, முத முதல்ல இந்தப் படத்தை விகடன்ல பார்த்ததும் அழுகையே வந்துருச்சு எனக்கு!" என்றார் அந்தம்மா.

நம்பினேன். காரணம், என்னோடு பேசிக்கொண்டு இருந்தபோதே அந்தம்மாவின் கண்கள் கசிந்தன. சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டார்.

இப்போது புரிகிறதா, விகடனுக்கும் அதன் வாசகர்களுக்கும் உள்ள நெருக்கம்?

வாசன் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இந்த இறுக்கத்தை, நெருக்கத்தை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கும், விகடன் வாசகர்களோடு மேலும் ஐக்கியமாவதற்கும், அவர்களைப் பற்றி இன்னும் விரிவாகப் புரிந்து கொள்வதற்கும் தனியாக ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும் என்பது திரு.ஸ்ரீனிவாசனின் விருப்பம். அதற்கான ஆலோசனைக் கூட்டம்தான் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் எமரால்டு ஹாலில் நடந்த கூட்டம்.

இந்தக் கூட்டத்தில், மதியம் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர், நம் எல்லோருக்கும் தெரிந்த நகைச்சுவை நடிகர் திரு.மோகன்ராம் அவர்கள். தொடர்ந்து சீரியல் பார்ப்பவர்களுக்கு இவரைத் தெரியாமல் இருக்க முடியாது. இப்போது வரும் 'மாமா மாப்ளே'விலும் இவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Customer Relationship பற்றி இவர் எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி கொடுத்தார்.

அதுவரை இவரை வெறும் அசட்டுக் காமெடி நடிகராகவே எண்ணிக்கொண்டு இருந்த நான், அன்றைய தினம் இவருடைய மற்றொரு பக்கத்தைப் பார்த்து அசந்து போனேன். வியப்பில் மூழ்கி, திக்குமுக்காடிப் போனேன்.

அந்த அனுபவம் பற்றி விரைவில் எனது 'உங்கள் விகடன்' வலைப்பூவில் எழுதுகிறேன்.

***
பல சமயம் 'First impression best impression'- ஆக அமைவதில்லை!

இசைஞானச் சித்தர் டி.எம்.எஸ்!

(மார்ச் 24, 2011‍-ல் டி.எம்.எஸ். தம்பதியிடம் ஆசி பெற்றபோது...)

மார்ச் 24.

என் அபிமான பாடகர் திரு.டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் பிறந்த நாள்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் குரலைக் கேட்டு வளர்ந்திருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆன்மிகச் செம்மல் திரு. பி.என்.பரசுராமன் அவர்களின் துணையோடு சென்று அவரை நேரில் சந்தித்து, அவரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரோடு பேசிப் பழகும் பேறு பெற்றேன். டி.எம்.எஸ். அவர்களின் இல்லத்தில் எனக்குக் கிடைத்த இனிய நண்பர் இயக்குநர் விஜய்ராஜ். 'இமயத்துடன்' என்னும் தலைப்பில், டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை மெகா சீரியலாக எடுத்திருப்பவர்.

டி.எம்.எஸ்ஸோடு பழகத் தொடங்கிய பின்னர், பலமுறை அவரது இல்லம் சென்றிருக்கிறேன். குறிப்பாக, அவரது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவரது இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து, ஆசி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்த இடத்தில் எனக்கு நானே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன். என் தாய், தந்தையின் பிறந்த நாட்களில் அவர்களின் கால்களில் விழுந்து வணங்கியிருக்கிறேனா? ஆசி பெற்றிருக்கிறேனா?

இல்லை. அவர்கள் வேறு, நான் வேறு இல்லை. அப்படி அவர்களை விழுந்து வணங்குவது ஒரு நாடகம் மாதிரி எனக்குப் படுகிறது. செயற்கைத்தனமாகத் தோன்றுகிறது. அதே மாதிரிதான் என் குழந்தைகளும் என் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. சொல்லப்போனால், அது கொஞ்சம் அருவருப்பாகக்கூட இருக்கிறது. திருமணச் சடங்கின்போது, சம்பிரதாயப்படி என் காலில் விழுந்து வணங்கினாள் என் மனைவி. அப்போதே உறுத்தலாக இருந்தது எனக்கு. இருந்தாலும் சூழ்நிலைக்கைதியாகி, பேசாமல் இருந்தேன். அதன்பின், இன்றுவரை சடங்கு, சம்பிரதாயம் என எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மனைவியோ, குழந்தைகளோ, தங்கைகளின் குழந்தைகளோ என் காலில் விழ அனுமதித்தது இல்லை.

ஆனால் சாவி, டி.எம்.எஸ். போன்று நான் மதிக்கும் ஒரு சில பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றிருக்கிறேன்.

அப்படித்தான் இந்த மார்ச் 24 அன்றும் திரு.டி.எம்.எஸ். அவர்களை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து, கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றேன்.

டி.எம்.எஸ்ஸுக்கு வயது 89 என்றால் நம்பவே முடியவில்லை. அத்தனைத் துடிப்பாக, சுறுசுறுப்பாக இருந்தார்.

நான் சென்றதும், "ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் வருகிறது... வாங்க, வாங்க!" என்று புன்னகையோடு வரவேற்றார். ஆனந்த விகடன் பத்திரிகையைச் சேர்ந்தவன் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார்.

"சார்! நான் இப்போது ஆனந்தவிகடனில் இல்லை; சக்தி விகடனைத்தான் பார்த்துக்கறேன்!" என்றேன்.

"சரிதான்! ஆனந்தம் இருந்தா சக்தி தன்னால வரும்; சக்தி இருந்தா ஆனந்தம் தன்னால வரும்!" என்று சொல்லிச் சிரித்தார்.

சுற்றியிருந்தவர்களிடம், "இவர் எழுத்துல ஜீவன் இருக்கு. சத்தியம் இருக்கு. ஆன்மா இருக்கு. இவர் ஒண்ணு எழுதினா அது சரியாத்தான் இருக்கும்னு மத்தவங்க நம்பிக்கை வைக்கிற அளவுக்கு ஓர் அழுத்தம் இருக்கு" என்று என்னைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னார்.

தனது அடுத்த பிறந்தநாளின்போது, அதாவது 90-வது வயதில் சித்தராகிவிடப் போகிறாராம். 'இசைஞானச் சித்தர்' என்றுதான் உலகம் தன்னை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாகச் சொன்னார். அவருடைய மூத்த உறவினர் ஒருவர் அப்படித்தான் பழநியில் சித்தராகிவிட்ட கதையைச் சொன்னார்.

அந்த உறவினர் ஒருநாள் மற்றவர்களை அழைத்து, குறிப்பிட்ட‌ தேதியில் தான் உடலைத் துறக்க எண்ணியுள்ளதாகவும், அதற்கு முன்னதாக பழநியில் ஓர் இடம் வாங்கி, அங்கே சதுர வடிவில் ஒரு பள்ளம் வெட்டி, அதனுள் சலவைக் கற்கள் பதித்து, தான் உடலைத் துறந்ததும், தனது உடம்பை அதில் மெதுவாக இறக்கி வைத்து, வில்வம், மிளகு, விபூதி ஆகியவற்றைக் கொண்டு தனது கழுத்து வரையிலும் அந்த பள்ளத்தை நிரப்பி, பின்பு சிறிய தடியால் குத்திக் குத்தி அந்த விபூதிக் கலவையை இறுக்கமாகக் கெட்டித்து, தலைக்கு மேலே கூம்பு வடிவில் ஒரு அமைப்பு செய்து, அதன் வழியாக தன் முகத்தை இந்த உலகம் காணும்படியாக அதிஷ்டானம் போன்று ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

அந்த உறவினர் ஒருநாள் தியானத்தில் அமர்ந்தவர், அப்படியே பேச்சு மூச்சற்றுப் போனார். நாள்கணக்காக எழுந்திருக்கவே இல்லை. உடம்பில் சலனம் சிறிதுகூட இல்லை. சுவாசமோ, இதயத் துடிப்போ இல்லை. ஆனால், உடம்பு சரிந்து விழவும் இல்லை. சூடு மட்டும் இருந்தது. மருத்துவர் வந்து பார்த்து, அவர் உடம்பில் ஊசியால் குத்தியபோது, சிவப்பு மொட்டாக ரத்தம் வெளிப்பட்டது. 'இது ஓர் அபூர்வம்! ஆச்சரியம்! மிராக்கிள்!' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் அவர்.

இரண்டு மூன்று நாள் ஆகியும் உறவினர் உட்கார்ந்த மாதிரியே நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்துபோனதால், வேறு வழியின்றி அவரது கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்தார்களாம்.

"அவரைப் போலவே நானும் சித்தராகிவிடுவேன். நாளைக்கு உலகம் என்னை நல்லதொரு பாடகன் இருந்தான் என்று நினைவில் கொள்ளாது. இசை ஞானச் சித்தர் டி.எம்.எஸ் என்றுதான் நினைவில் கொள்ளும். என் சமாதிக்கு வந்து என்னை வணங்கும். அவர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கவேண்டும், அவ‌ர்கள் எந்தவிதக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று என் ஆன்மா பிரார்த்திக்கும். அந்தப் பிரார்த்தனை பலிக்கும்!" என்று என்னென்னவோ சொன்னார்.

அதெல்லாம் சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் சோர்ந்திருந்த காலங்களில் என்னை உற்சாகப்படுத்தியதும், துயருற்றிருந்த சமயங்களில் ஆறுதல்படுத்தியதும், மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் என் சந்தோஷத்தை அதிகப்படுத்தியதும், குழப்பத்தில் இருந்த நேரங்களில் தெளிவைக் கொடுத்ததும், பயத்தில் மூழ்கியிருந்த பொழுதுகளில் தைரியம் ஊட்டியதும், தன்னிரக்கம் நிறைந்திருந்த‌ வேளைகளில் தன்னம்பிக்கை ஏற்படுத்தியதும் டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரல்தான் என்று நிச்சய‌மாகச் சொல்வேன்.

***

உண்டென்றால் அது உண்டு; இல்லையென்றால் அது இல்லை!

அடைமழை, அர்த்தராத்திரி, அவள்!

‘1977-ஆம் ஆண்டு டயரியில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது. அத்தனை முக்கியமானது இல்லை என்றாலும், படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அது அடுத்த பதிவில்’ என்று குறிப்பிட்டு, ஜனவரி முதல் தேதியன்று ஒரு பதிவு போட்டிருந்தேன். (சில ஆண்டுகளுக்கு முன், ‘ஏடாகூடம்’ என நான் எழுதிவந்த வலைப்பூவில் போட்டிருந்த பதிவின் மறுபிரசுரம் அது. இப்போது ‘ஏடாகூடம்’ வலைப்பூ இல்லை.) ஆனால், அதற்கு அடுத்து வேறு சில பதிவுகளைப் போட்டுவிட்டேன். யதேச்சையாக எடுத்துப் பார்க்கும்போதுதான், தொடர்ச்சி போடுவதாகச் சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. இதோ, அந்தத் தொடர்ச்சி...

நான் வேலை வெட்டியில்லாத தண்டச் சோறாகப் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்த காலம் அது. அப்போது நாங்கள் சங்கீதமங்கலம் என்கிற அழகான பெயர் கொண்ட கிராமத்தில் இருந்தோம். அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அனந்தபுரம் என்கிற மேஜர் பஞ்சாயத்து டவுன். அங்கே பனமலை குமரன் என்று ஒரு சின்ன தியேட்டர் உண்டு. மழைச்சாரல் விழுகிற மாதிரியான, ஓடித் தேய்ந்த பழைய ரீல் படங்களை அங்கே போடுவார்கள்.

அதற்கு எதிர்த்தாற்போல் இருந்த கட்டடத்தில் குணசேகரன் என்பவர் தட்டச்சுப் பயிலகம் நடத்தி வந்தார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர். நாத்திக வாதம் பேசுபவர். ஆனால், அத்தனை இனிமையானவர். என்னை ரவி என்று கூப்பிடாமல், பிரகாஷ் என்று என் பெயரின் பின்பாதியைச் சொல்லி அழைத்தவர் அவர் ஒருவர்தான். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஜாலியாக இருக்கும் சமயங்களில், 'ஐயிரே!' என்று அழைப்பார்.

பொதுவாக, திராவிடர் கழகத்தினர் ஒரு கூட்டமாகத் திரளும்போதுதான் பிராமண எதிர்ப்புக் கோஷங்களைக் கிளப்பி மனம் புண்படச் செய்கிறார்களே தவிர, தனித் தனி நபராக என்னோடு பழகிய தி.க. நண்பர்கள் அனைவரும் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். தமாஷுக்குக்கூட யாரும் என் சாதியை இழித்துப் பேசியது இல்லை. என் தமிழ் ஆசான் அ.க.முனிசாமி அவர்கள்கூட தி.க-தான். அவர் வீட்டில் தொங்குகிற திரைச்சீலை ஒன்றில் அண்ணா, கையில் புத்தகத்தோடு நடந்து வருவார்; மற்றொன்றில், பெரியார் கைத்தடியோடு நிற்பார். பின்னாளில் இவர் ஆஸ்திகவாதியாக மாறிவிட்டார். கோயில்களில் பட்டிமன்றங்கள், புராணச் சொற்பொழிவுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு பேசுவார்.

தனித்தனியாக ஒவ்வொரு மனிதனும் பண்பட்டவனே! ஒரு கூட்டமாகத் திரளும்போதுதான் கட்டுப்பாடு இழக்கிறான். இது தி.க-வினருக்கு மட்டுமல்ல; எந்த ஒரு கட்சிக்கும், எந்த ஒரு இனத்துக்கும், எந்த ஒரு சமுதாயத்துக்குமே பொதுவானது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். வெட்டியாகத் திரிகிறோமே, தட்டச்சு கற்போமே என்று அந்த இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன். சங்கீதமங்கலத்திலிருந்து தினமும் நடந்தேதான் வருவேன்; நடந்தேதான் போவேன். இரண்டு ஆண்டு காலத்தில் ஆங்கிலம் ஹையர், தமிழ் ஹையர் இரண்டும் அவரிடம் பயின்று, பாஸ் செய்தேன். பயிற்சி நேரம் ஒரு மணி என்று பெயர்; நான் நாளெல்லாம் அவர் பயிலகத்திலேயே கிடந்ததால், எந்த மெஷின் காலியானாலும் உட்கார்ந்து பயிற்சி செய்வேன். அவரும் ஒன்றும் சொல்லமாட்டார். அவர் தம்பி இளங்கோ என் நண்பன். தமிழ்ச்செல்வி என்கிற பெண்ணை அவன் லவ் பண்ணி, அதற்கு நான் தூது போனது தனிக் கதை!

நான் டயரியில் எழுதி வைத்த சுவாரஸ்யமான விஷயம் அதுவல்ல.

ஒரு மழைக்காலத்தில் டைப்ரைட்டிங் முடிந்து, மாலையில் எதிரே உள்ள தியேட்டரில் படம் பார்க்கப் போனேன். 'அன்பளிப்பு' என்பது படத்தின் பெயர். சிவாஜிகணேசன், சரோஜாதேவி, ஜெய்சங்கர் நடித்த படம் அது. 'வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே... வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்... நான் வந்திருக்கும் வேலனைப் பாக்கப் போறேன்... அத்திரி மாத்துப் பத்திரி பொண்ணு ஐஸுபக்கா பக்காடி...' என்று ஒரு மாட்டுவண்டியில் சிவாஜியும் சரோஜாதேவியும் ஜாலியாகப் பாடி வரும் காட்சி இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

படம் முடிந்து ஒன்பது மணிக்கு வெளியே வந்தபோது, மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டு இருந்தது. நல்ல இருட்டு. பஸ் கிஸ் எதுவும் வருகிற மாதிரி தெரியவில்லை. நான் குடை கொண்டு வந்திருந்தேன். எனவே, வழக்கம்போல நடராஜா சர்வீஸில் கிளம்பிவிட்டேன். இடியும் காற்றுமாகப் புரட்டியெடுத்துக்கொண்டு இருந்தது. பளீர் பளீரென்று மின்னல் வெட்டுக்கள். இருட்டாக இருந்தாலும், பழகிய ரோடு ஆதலால் வேகமாக நடையை எட்டிப் போடமுடிந்தது. முன்னே பின்னே ஒருத்தரும் இல்லை. நான் மட்டும் தனியனாக நடந்துகொண்டு இருந்தேன்.

கொஞ்ச தூரம் போனதுமே குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. சீக்கிரமாக வீடு போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று கால்களை எட்டிப் போட்டேன். எங்கோ குழந்தை சிணுங்குகிற சத்தம் கேட்டது. இந்த வேளையில், இந்த இருட்டில் குழந்தையா! அடுத்த ஒரு மின்னல் வெட்டில், சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில், இளம்பெண் ஒருத்தி கையில் குழந்தையுடன் நின்றிருப்பது தெரிந்தது. அருகில் போனேன். அந்தப் பெண்ணின் உடம்பு நடுங்கிக்கொண்டு இருந்தது.

"நீங்க சங்கீதமங்கலம் போகணுமா? நானும் அங்கேதான் போறேன். வாங்க, குடையிலேயே போயிடலாம்!" என்று அழைத்தேன்.

அவள் கொஞ்சம் தயங்கினாலும், சூழ்நிலை கருதி என்னோடு வரச் சம்மதித்தாள். அவளுக்குக் கிட்டத்தட்ட என் வயசுதான் இருக்கும். ஆனால், ஆண்களைவிடப் பெண்கள் முதிர்ச்சியாக, அதுவும் புடவையில் என்றால் கேட்கவே வேண்டாம். பெரியவர்களாகத் தெரிவார்களே! அவள் வெள்ளைக் கோடுகள் போட்ட கறுப்புப் புடவையில் அழகாக இருந்தாள். (அது சரி, அந்த வயசில் எனக்கு எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் தெரிந்தார்கள்!) அந்தப் பெண்ணின் சேலை, ஜாக்கெட் முழுவதும் மழையில் நனைந்து, உடம்போடு ஒட்டியிருந்தது. தலைமுடி ஈரத்தில் நனைந்து, முகத்தில் கேச இழைகள் படிந்திருந்தது கூட அழகாகத் தோன்றியது. குடைக்குள் எனக்கு மிக நெருக்கமாக அவள் நடந்தபோது, இனம்புரியாத உணர்வுகள் என்னுள் படபடத்தன. அவள் கையில் இருந்த குழந்தை மீது சாரல் அடிக்கக்கூடாது என்கிற அக்கறையில் நான் அவளோடு இன்னும் நெருங்கி நடக்க, அவள் அடுத்த ஆண் என்கிற கூச்சத்தோடு விலகி நடந்தாள்.

"எங்கே இந்த ராத்திரியில இங்கே வந்து மாட்டிக்கிட்டீங்க?" என்றேன், ஏதாவது பேசவேண்டுமே என்று.

"சினிமாவுக்கு நானும் என் வூட்டுக்காரரும் வந்தோம். நடுவுல அவருக்கு சோலி வந்துடுச்சி. 'நீ படம் பார்த்துட்டு வூட்டுக்குப் போ! நான் சிறுவாலை வரைக்கும் போய் ஒரு சோலிய முடிச்சுட்டு ராவிக்கா வூட்டுக்கு வந்துடறேன்'னு சொல்லிட்டுப் போயிட்டாரு. மழை வலுக்கறதுங்காட்டியும் வூட்டுக்குப் போயிடணும்னு, படம் முடியறதுக்கு மிந்தியே பொறப்டேன். இங்க வசமா வந்து மாட்டிக்கிட்டேன்" என்றாள்.

"பெரியவங்க பரவால்ல... சமாளிச்சுக்கலாம்! குழந்தைக்கு ஒண்ணரை வயசுதான் ஆவும்போலிருக்கு. அது இப்படி மழையில நனைஞ்சுதுன்னா என்னத்துக்காகுறது? குடையாச்சும் கொண்டு வந்திருக்கலாமில்லே?" என்றேன்.

"குடை இல்லியே! இருந்தா கொண்டு வந்திருப்போம்" என்றாள் பாவமாக. அவளுக்கும் அவள் கையிலிருந்த குழந்தைக்கும் சாரல் படாதவாறு குடை பிடித்தபடி நெருக்கமாக நடந்தபோது, அகஸ்மாத்தாக அவ்வப்போது அவள் மீது நான் உரச நேர்ந்தது. தவிர, அவள் வேகத்துக்கேற்ப நான் நடக்கும் வேகமும் குறைந்தது.

"நீங்க வாத்தியார் வூடா?" என்றாள். "ஆமா!" என்றேன். "ஐயர் வாத்தியார் மவன்தானே நீங்க?" என்றாள் மறுபடி. "ஆமா!" என்றேன். "உங்க அப்பா கிட்டதான் என் தம்பி படிக்குறான். மணின்னு பேரு" என்றாள்.

அவள் இப்படிச் சொன்னது, 'என்னிடம் ஏதாவது தப்புத்தண்டாவாக நடக்க முயற்சி செய்தால், மாட்டிக்கொள்வாய். நீ யாரு, என்னன்னு உன் ஜாதகமே எனக்குத் தெரியும்' என்று மறைமுகமாக எனக்கு எச்சரிக்கை விடுப்பது போல் இருந்தது.

அதன்பின் அதிகம் பேசாமல் நடந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்திருப்போம்... அடிக்கிற மழையில், எதிரே பலகீனமான டைனமோ வெளிச்சத்தோடு ஒரு சைக்கிள் வந்துகொண்டு இருந்தது.

அது வேறு யாருமில்லை; அவளின் கணவன்தான். நல்ல கிராமத்து தேகம். அவன் என்னைவிட நாலைந்து வயதுதான் பெரியவனாக இருப்பான். ஆனால், உடலுழைப்பால் கைகளும் கால்களும் முறுக்கேறியிருந்தன. கட்டுமஸ்தாக, பெரிய ஆள் போல இருந்தான்.

எங்கள் இரண்டு பேரையும் அத்தனை நெருக்கமாகப் பார்த்தவன் என்ன நினைப்பானோ என்று என் மனதில் ஒரு குறுகுறுப்பான உணர்வு ஓடியது. எல்லாம், நிறையக் கதைகள் படித்ததால் வந்த அதிகப்படியான கற்பனை! அவன் பார்க்கத்தான் பட்டிக்காட்டானாக இருந்தானே தவிர, பக்கா ஜென்டில்மேனாக இருந்தான்.

"தம்பி, ரொம்ப டாங்க்ஸ் தம்பி! அவசர ஜோலியா போயிட்டேன். பாவம் புள்ள, கையில குழந்தையோடு எங்கே மாட்டிக்கிச்சோ என்னமோன்னு பதறிப்போய் ஓடியாறேன்! காப்பாத்திக் கர சேத்துட்டீங்க!" என்றவன், அந்தப் பெண்ணிடம், "வா புள்ள! கேரியர்ல உக்காந்துக்க. வெரசா போயிரலாம்" என்றான்.

"நீங்களும் வாங்க தம்பி, முன்னாடி பார்ல உக்காருவீங்கள்ல?" என்றான்.

"இருக்கட்டுங்க! இந்த மழையில அவங்கள வெச்சு ஓட்டுறதே பெரிய காரியம். நீங்க போங்க, நான் வரேன். அது இருக்கட்டும், இவ்ளோ தூரம் இவங்களை நனையாம கூட்டி வந்தது வீணாப் போயிடும் போலிருக்கே. இந்த மழையில எப்படிப் போவீங்க?" என்றேன்.

"மழையப் பாத்தா முடியுங்களா? போய்த் துவட்டிக்க வேண்டியதுதான். ஈரம் பட்டா உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?" என்று சிரித்தான்.

"சரி, இந்தக் குடையை எடுத்துக்கிட்டுப் போங்க! நாளைக்கு வாங்கிக்கிறேன்" என்றேன்.

"இதெல்லாம் ரொம்ப அநியாயம் தம்பி! நீங்க நனைஞ்சு வருவீங்க, நாங்க பாட்டுல கண்டுக்காம போகணுமா? என்ன புள்ள, வாயில கொழுக்கட்டையா? தம்பிக்கு எடுத்துச் சொல்றது!" என்றான்.

இவ்வளவு நேரமும் அந்தப் பெண், குடையின் கீழ் பாதுகாப்பாக என்னை ஒட்டித்தான் நின்றுகொண்டு இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

"நீங்களும் வாங்க! பார் கட்டைல உட்கார்ந்துக்குங்க. பயப்படாதீங்க. இவரு எட்டு ஆளை வெச்சுக்கூட ஓட்டுவாரு!" என்று சிரித்தாள்.

அவன் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு, தரையில் காலூன்றிக் கொள்ள, அவள் பத்திரமாக கேரியரில் உட்கார்ந்துகொண்டு, மடியில் குழந்தையைக் கிடத்திக்கொண்டாள். அதுவரை அவளுக்கு நான் குடை பிடித்துக்கொண்டு இருந்தேன்.

"குடையை இப்படி என்கிட்ட கொடுங்க. ம்... பார்ல உட்காருங்க, சொல்றேன்!" என்று வற்புறுத்தினான் அவன். உட்கார்ந்துகொண்டேன். பாரில் உட்கார்ந்து வருவது பெரிய சங்கடமாக இருந்தது எனக்கு.

அவனே இடக் கையில் குடையைப் பிடித்தபடி, வலக் கையால் ஹேண்டில்பாரைப் பிடித்து, சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.

ஒரு வழியாக சங்கீதமங்கலம் வந்தது. ஏரியைக் கடந்து ஊருக்குள் நுழைகிற எல்லையிலேயே அவர்களின் குடிசை. அவளை இறக்கிவிட்டுவிட்டு, "நீ இரு புள்ள! நான் தம்பியைப் போய் அதும் வூட்டுல விட்டுட்டு வந்துடறேன்" என்றான்.

"அதெல்லாம் வேணாங்க. நான் நடந்தே போயிடுவேன்" என்றாலும் கேட்கவில்லை. "அட, நீங்க சும்மா இருங்க தம்பி. ரெண்டு மிதி மிதிச்சா உங்க வூடு! கேரியர்ல உட்காருங்க. சல்லுனு போயிரலாம். எவ்ள நேரம் ஆயிரப் போவுது!" என்று வலுக்கட்டாயமாக என்னை ஏற்றிக்கொண்டு சரசரவென்று கொண்டு வந்து என் வீட்டு வாசலில் விட்டுவிட்டு, சட்டென்று மழையிலேயே தொப்பலாக நனைந்தபடி சைக்கிளை ஓட்டிக்கொண்டு போய்விட்டான்.

படிப்புக்கும் பண்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை, வசதிக்கும் நாகரிகத்துக்கும் தொடர்பு இல்லை என்று எனக்கு உணர்த்திய சம்பவம் இது.

'மழையில நனைஞ்சா இந்த உடம்பு துருப்பிடிச்சுடுமா என்ன?' என்று கேட்டான். உண்மைதான், இரும்புதான் துருப்பிடிக்கும்; தங்கம் துருப்பிடிக்குமா என்ன?

இந்தச் சம்பவத்தைதான் என் டயரியில் எழுதி வைத்திருந்தேன். இத்தனை விலாவாரியாக அல்ல! சுருக்கமாக.

மறுநாள் டயரி எழுதுவதற்காக அதை எடுத்தபோது, அதில் என் அப்பாவின் கையெழுத்து தெரிந்தது.

பரபரப்பாகப் படித்தேன். குறிப்பிட்ட சம்பவத்தைப் படித்ததாகவும், என்னை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் எழுதியிருந்தார். 'உதவவேண்டும் என்கிற உன் உள்ளம் உயர்ந்தது; ஆனால், எல்லோரும் அந்தப் பெண்ணின் கணவன் போல் இருப்பார்கள் என்பது நிச்சயம் இல்லை. நீ ஒன்று செய்திருக்கலாம். பேசாமல் அந்தப் பெண்ணிடமே குடையைக் கொடுத்து, வசதியாக அவளை நடந்துவரச் சொல்லிவிட்டு, நீ தனியாக மழையில் நனைந்தே நடந்து வந்திருக்கலாம்' என்று எழுதியிருந்தார். 'ஆமாமில்லே..? இது ஏன் எனக்கு அப்போது தோணலே?' என்று நினைத்துக்கொண்டேன்.

மறுநாளிலிருந்து நான் டயரி எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

***
சிறந்த எண்ணங்கள் மூளையிலிருந்து பிறக்கின்றன. உயர்ந்த எண்ணங்களோ இதயத்திலிருந்து தோன்றுகின்றன.

34‍-வது புத்தகக் காட்சி!

நான், பொன்ஸீ, ஆரூர்தாஸ், அவரின் அண்ணன் மகன்
ரு வழியாக, 34-வது புத்தகக் காட்சியை நேற்று பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

சங்கீத கச்சேரிக்குப் போகிறவர்கள், அங்கே கான்ட்டீனில் ஒரு வடையையாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வரவில்லையென்றால், கச்சேரிக்குப் போய் வந்த புண்ணியமே அவர்களுக்குக் கிட்டாது என்பதுபோல ஆகிவிட்டது புத்தகக் காட்சியும்! உள்ளே ஸ்டால்களுக்கு நிகரான கூட்டம் கான்ட்டீனிலும் அம்மியிருந்தது.

சரியாக இரண்டு மணிக்கு, நான் என் மகனோடு புத்தகக் காட்சிக்குள் நுழைந்தேன். முதலில், விகடன் ஸ்டாலைத் தேடிக் கண்டுபிடித்து, 'காலப் பெட்டகம்' தொகுப்புப் புத்தகம் ரெடியாகி விற்பனைக்கு வந்துவிட்டதா என விசாரித்தேன். 'இன்னும் இல்லை; இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும்' என்றார்கள். வெளியே ஃப்ளெக்ஸ் பேனர் வைத்திருந்ததால், பலர் வந்து மேற்படி புத்தகம் இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிப் போனதாகத் தகவல்.

'சரி, வருகிறபோது வரட்டும்' என்று, நான் என் மகனுடன் மொத்த ஸ்டால்களையும் ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன்.

பொங்கல் போனஸ் கையில் இருக்கிற நேரமாகப் பார்த்து புத்தகக் காட்சியை நடத்தலாம் என்று முதன்முதலில் ஐடியா கொடுத்த புண்ணியவான் யாராக இருந்தாலும், இதோ, அவர் வாயில் ஒரு பிடி சர்க்கரை! என் கையிலும் கணிசமாகக் காசிருந்தது. அதற்கேற்ப என்னென்ன வாங்கவேண்டும் என்று என் மகனின் மனதிலும் ஒரு பெரிய லிஸ்ட் இருந்தது.

எந்த ஸ்டாலையும் விட்டுவிடக்கூடாது என்கிற உத்தேசத்தில், முதலில் இடது கோடியிலிருந்து தொடங்கி, 'எஸ்' மாதிரி 'யு' டர்ன் அடித்து, வளைந்து வளைந்து வந்தோம். வழியில் ஏதேனும் ஒரு பதிப்பகத்தின் ஸ்டால் என் மகனை ஈர்த்துவிட்டால், 'அப்பா! ஒரு நிமிஷம்' என்று சொல்லிவிட்டு, உள்ளே போய் ஜோதியில் கலந்துவிடுவான். அவன் வரும் வரையில் நான் பாதையில் நின்றுகொண்டு, அறிந்தவர் தெரிந்தவர் யாரேனும் தென்படுகிறாரா என்று பார்ப்பேன்.

உள்ளே போனவன், பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்து, 'அப்பா! உள்ளே ரெண்டு புக்ஸ் செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன். 240 ரூபாயாம். டிஸ்கவுன்ட் போக 200 ரூபாய்க்குள்ளதான் ஆகும். காசு கொடு!' என்பான். என்ன வாங்கி வருகிறான் என்று பார்த்தால், ஏதாவது கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகமாக இருக்கும்.

பிறகொரு ஸ்டாலில் புகுந்து, மாஜிக் செய்வது எப்படி, ஐம்பது வகை டிரிக்ஸ், சீட்டுக்கட்டில் தந்திர விளையாட்டு, ஓரிகாமி மற்றும் டிராயிங் சம்பந்தமான புத்தகங்களை அள்ளி வந்தான். அமர்சித்ரா காமிக்ஸுகள் அடுக்கி வைத்திருந்த ஸ்டாலில் புகுந்து பஞ்சதந்திரக் கதைகள், பீர்பால் ந‌கைச்சுவைக் கதைகள், ஹனுமான், நாரதர், சகுந்தலை போன்று காமிக்ஸ் புத்தகங்களாக ஒரு பத்துப் பன்னிரண்டு தேற்றிவிட்டான்.

'நீ ஒண்ணுமே வாங்கலையாப்பா?' என்று கரிசனமாகக் கேள்வி வேறு! அவன் கேட்டானே என்று ரோஷம் வந்து, கண்ணதாசன் பதிப்பகத்தில் புகுந்து, 'அர்த்தமுள்ள இந்து மதம்' ஒரு செட் அப்படியே மொத்தமாக வாங்கினேன். அதை அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வாசித்திருக்கிறேனே தவிர, முழுமையாகப் படித்ததில்லை. வெறுமே லைப்ரரிக்குச் சேர்ப்பதற்காக என்றில்லாமல், படித்தே தீருவது என்று வாங்கினேன்.

'அர்த்தமுள்ள இந்து மதம்' என்கிற தலைப்பு சாவி சார் தந்தது. தினமணிகதிரில் அவர் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தபோது, கவியரசு கண்ணதாசனிடம் ஆன்மிக விஷயங்களைத் தொடராக எழுதும்படி கேட்டுக்கொண்டாராம். உடனே கண்ணதாசன் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டு, "நல்ல ஆளைப் பிடிச்சீங்க சார், ஆன்மிக விஷயம் எழுதுறதுக்கு! நான் சினிமாக்காரன். தவிர, போதைக்கு அடிமையானவன்னு உலகத்துக்கே தெரியும். நான் எழுதினா எவனாவது மதிப்பானா?" என்று மறுத்தாராம். "இல்லை. நீங்க எழுதினாதான் இளைஞர்கள் படிப்பாங்க. உங்க பர்சனல் வாழ்க்கையையும், எழுத்தையும் இணைச்சுப் பார்க்க மாட்டாங்க. விஷயம்தான் முக்கியம். யார் எழுதறாங்கன்றது முக்கியம் இல்லே. கொள்ளைக்காரனா இருந்த வால்மீகிதானே ராமாயணம் எழுதினாரு?" என்று வற்புறுத்தினாராம் சாவி.

"இந்து மதத்தின் சிறப்புகளை நீங்க உங்க அனுபவத்தோடு உதாரணங்கள் சொல்லி எழுதுங்க. நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும்!" என்று சொன்ன சாவி, 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்னும் தலைப்பைச் சொல்லி, அறிவிப்பையும் வெளியிட்டாராம்.

பத்திரிகையுலக ஜாம்பவானின் வாக்கு பொய்க்குமா என்ன? அந்தத் தொடர் வெளியான காலத்தில் அத்தனைப் பரபரப்பாக இருந்தது. நேற்றைக்கும் நான் பார்த்த வரையில் கண்ணதாசன் பதிப்பகத்தில் 'அர்த்தமுள்ள இந்து மதம்' புத்தக விற்பனைதான் படு சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது.

பிள்ளையார், சரஸ்வதி, சிவன், ஷீர்டி சாயிபாபா என 3டி கடவுள் படங்களை ஓரிடத்தில் விற்றுக்கொண்டு இருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்னால், தி.நகர் பிளாட்பாரத்தில் இதே போல் 3டி இயற்கைக் காட்சிப் படங்களை ஒன்று 150 ரூபாய் என்கிற வீதத்தில், நாலைந்து படங்கள் வாங்கினேன். இங்கே சாமி படங்கள் விலை மலிவாக, பிரேமிட்டது 90 ரூபாய், வெறும் படம் 60 ரூபாய் எனக் கிடைத்தது. அதிலும் ஒரு நாலைந்து வாங்கிப் போட்டேன்.

பியானோ சாஃப்ட்வேர், கிட்டார் சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் கேம்ஸ் என ஒரு ஸ்டாலில் புகுந்து புறப்பட்டு 600 ரூபாய்க்கு வேட்டு வைத்தான் மகன். 'கண்ணா! அவ்ளோதான். கொண்டு வந்த 2,500 ரூபாயும் காலி. பையில பத்து ரூபா தாள் கொஞ்சமும், ஐம்பது ரூபாய் ஒண்ணோ ரெண்டோ கிடக்கும்னு நினைக்கிறேன். அதனால, ஷாப்பிங் முடிஞ்சுது. கிளம்பறோம்!' என்றேன்.

இதற்குள் அத்தனை ஸ்டால்களையும் நாங்கள் ஒரு ரவுண்டு வந்துவிட்டிருந்தோம். மீண்டும் கூட்டத்தில் நீந்தி விகடன் ஸ்டாலுக்குப் போகிற வழியில் விகடன் பிரசுர பொறுப்பாசிரியர் பொன்ஸீயிடமிருந்து போன்... 'வாங்க! பொட்டி வந்துடுச்சு!'

'காலப் பெட்டகம்' புத்தகம் தயாராகி வந்துவிட்ட‌து என்பதையே அவர் அப்படிச் சொன்னார்.

விகடன் ஸ்டாலுக்குப் போனோம். அங்கே என் பெருமதிப்புக்குரிய கதை வசனகர்த்தா, என் மீது மிகவும் அன்புகொண்ட பெரியவர் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் வந்திருந்தார். 'காலப் பெட்டகம்' புத்தக‌த்தின் முதல் பிரதியை அவரிடம் வழங்கினார் பொன்ஸீ.

மாலை 6 மணி போல், ஆரூர்தாஸ் அவர்களை அழைத்துச் சென்று, கான்டீனில் காபி வாங்கித் தந்தோம். டிபன் எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் ஆரூர்தாஸ். தனக்கு சதாபிஷேகம் விரைவில் வரவிருக்கிறது என்றும், தன் மீது அன்புகொண்ட தொழிலதிபர் நல்லி குப்புசாமி அதை கிராண்டாக நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார் என்றும், அவசியம் நான் குடும்பத்தோடு அந்த விழாவுக்குக் கட்டாயம் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார் ஆரூர்தாஸ். ‌"இன்னும் அதற்குச் சில மாதங்கள் இருக்கு. அழைப்பு அனுப்பறேன் ரவி! கட்டாயம் வரணும். நீங்க என் குடும்பத்துல ஒருத்தர்!" என்றார். பெரிய ஆளாக வரவேண்டும் என என் மகனின் தலையில் கை வைத்து, மனமார ஆசிர்வதித்தார் அந்தப் பெரியவர்.

காஞ்சிப் பெரியவர் உள்பட, மகான்கள் யாரையும் நான் சந்தித்ததோ, ஆசி பெற்றதோ கிடையாது. எனக்குக் கிடைத்ததெல்லாம் சாவி சார், பாலு சார், டி.எம்.எஸ்., பாக்கியம் ராமசாமி, ஆரூர்தாஸ் போன்ற பெரியவர்களின் ஆசிகள்தான். என் மகனுக்கும் அவர்களின் ஆசி கிடைத்திருப்பதில் பூரண மன நிறைவு எனக்கு.

மணி மாலை 6:30.

புதிர்ப் போட்டி வைத்து, அதில் வென்ற பதிவுலக நண்பர்கள் திரு.சொக்கன், திரு.அதிஷா இருவருக்கும் 'காலப் பெட்டகம்' புத்தகம் பரிசளிப்பதாகவும், புத்தகக் காட்சிக்கு வந்தால் நேரிலேயே வழங்குவதாகவும் சொல்லியிருந்தேன். திரு.சொக்கன், தன்னால் செவ்வாய் அன்றுதான் சென்னை வரமுடியும் என்றும், அதிஷாவிடம் தனக்கான புத்தகத்தைக் கொடுத்துவிட்டால் பெற்றுக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால், அதிஷாவும் நேற்று புத்தகக் காட்சிக்கு வரவில்லை. எனவே, மகனுடன் கிளம்பிவிட்டேன்.

இன்று காலையில் போன் செய்துவிட்டு, விகடன் அலுவலகம் வந்திருந்தார் அதிஷா. அவருடன் யுவகிருஷ்ணாவும் வந்திருந்தார். அவர்களுடன் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். துடிப்பும் உற்சாகமும் நிரம்பிய இளைஞர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதைப் போன்ற எனர்ஜி டானிக் வேறு எதுவும் இல்லை.

சொன்னபடி திரு.சொக்கனுக்கும் சேர்த்து அதிஷாவிடம் 'காலப் பெட்டகம்' புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்துவிட்டேன்.

அதிஷா என்பது ஒரு பெண்ணின் பெயர் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இல்லையாம். அது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குருவின் பெயராம். ஓஷோ ரஜ்னீஷுக்கும் குரு போன்றவராம் அதிஷா. ரஜ்னீஷின் புத்தகம் ஒன்றில் இந்தப் பெயரைப் பார்த்ததும் ஈர்க்கப்பட்டுத் தன் புனைபெயராக வைத்துக்கொண்டதாகச் சொன்னார் அதிஷா.

குரு அதிஷாவை ரஜ்னீஷ் சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த அதிஷாவை என் மகன் ரஜ்னீஷ் சந்திக்கும் வாய்ப்பு நேற்று இருந்தது.‌

அதிஷா வராததால், நேற்று ஒரு மகத்தான குரு சிஷ்ய சந்திப்பு நிகழாமல் போய்விட்டது!

***
ஒரு பொருளின் விலை என்பது அந்த‌ச் சரக்குக்குதானே தவிர, அது வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கோ புட்டிக்கோ அல்ல; ஆனால், ஒரு புத்தகத்தின் விலை என்பது அட்டைக்கும், அச்சுக்கும், தாளுக்கும்தானே தவிர, அதில் உள்ள சரக்குக்கு அல்ல!