அன்பார்ந்த நண்பர் திரு.ரவிபிரகாஷுக்கு,
ஆசிகள். அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு பிரமுகருக்கு விருது அளித்து கௌரவித்து வருவது உங்களுக்குத் தெரியும். இந்த ஆண்டு, கூடுதலாக ஐந்து நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு ஒரு சிறு அன்புப் பரிசு வழங்குவதென்று தீர்மானித்தோம்.
சென்ற ஆண்டு பத்திரிகைகளில் அதிகம் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதிய ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தலா ரூ.250 பரிசு வழங்குவதென்று முடிவு செய்தோம். ஆனால், இப்படி ஐந்து பேரைத் தேர்ந்தெடுக்கும் பணி மலைப்புக்குரியதாகி, எங்கள் வலைத் தளம் கவலைத் தளமாக ஆகிவிட்டது. தக்க சமயத்தில் தங்கள் வலைப்பூ வாசகர்கள் மூலம் எங்கள் அறக்கட்டளையின் பிரச்னையை அறவே தீர்த்து வைத்தீர்கள்.
போட்டிக்குரிய 30 நகைச்சுவைத் துணுக்குகளை உங்கள் ‘என் டயரி’ வலைப்பூவில் பிரசுரித்தீர்கள். அவற்றைப் படித்து ஆராய்ந்து, சிறந்த ஐந்தை உங்கள் வலைப்பூ வாசகர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தனர். இந்த நகைச்சுவைப் பணிக்காக உங்களின் ‘என் டயரி’ வலைப்பூ வாசகர்களுக்கு எங்கள் அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை மகிழ்ச்சியையும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
வெற்றி பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்களுக்குரிய பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டு, ஓவியர் ஜெயராஜ் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தி, நகைச்சுவை விருது அளிப்பதென்று அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் அனுப்பியுள்ளேன். நீங்களும், உங்கள் வலைப்பூ வாசகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
இங்ஙனம்,
பாக்கியம் ராமசாமி,
அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை.
மேற்படி விழாவில் பரிசு பெறும் ஐந்து நகைச்சுவை எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் கலந்துகொண்டு, தங்கள் ரசனைக்கேற்ப முதல் ஐந்து பேரை வரிசைப்படுத்திப் பின்னூட்டம் அனுப்பிய வாசகர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்படி விழா அழைப்பிதழை இங்கே பதிவிட்டுள்ளேன். என் வலைப்பூ வாசகர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன்.
இந்தப் போட்டியில், முதல் ஐந்து பேரை அதிகமான எண்ணிக்கையில் சரியாகக் குறிப்பிட்டு, முதலாவதாகப் பின்னூட்டம் அனுப்பியவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வி.ராஜசேகரன். அவர் உடனே என்னை இ-மெயிலில் தொடர்பு கொண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து, புகைப்படமும் முகவரியும் அனுப்பியிருந்தார். அவருக்கான புத்தகப் பரிசு (முயற்சி திருவினையாக்கும்) அப்போதே, உடனேயே அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. வி.ராஜசேகரனின் விருப்பத்தின் பேரில் அவரது புகைப்படத்தையும் இங்கே பதிவிட்டுள்ளேன்.
அதேபோல், சமீபத்தில் நடத்திய போட்டி, ‘ஏ.எம்.ரவிவர்மா’ என்ற பெயரில் உள்ள சிறப்பு என்ன என்பதாகும். ஆங்கிலத்தில் அந்தப் பெயரை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் படித்தால் பெயர் மாறாமல் இருக்கும் பாலிண்ட்ரோம் வகையைச் சேர்ந்த பெயர் அது என்பதே அதன் சிறப்பு. இதைச் சரியாகவும் முதலாவதாகவும் எழுதிய ‘அன்புடன் அருணா’விடமிருந்து நேற்றைய சனிக்கிழமையன்று அவரது முகவரியைத் தெரிவித்து இ-மெயில் கிடைத்தது. அவருக்குரிய புத்தகப் பரிசான ‘ஏடாகூடக் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பதிவை முடிக்கும் முன், ஒரு புதிர்...
ஒரு அடுக்கில் பத்து பொற்காசுகள் வீதம், வரிசையாக பத்து அடுக்குகள் உள்ளன. மொத்தம் 100 பொற்காசுகள்.
ஒரே ஒரு அடுக்கைத் தவிர, மற்ற ஒன்பது அடுக்குகளில் உள்ள எல்லா பொற்காசுகளுமே தலா 10 கிராம் எடை கொண்டவை. அந்த ஒரே ஒரு அடுக்கில் உள்ள பத்து பொற்காசுகள் மட்டும் தலா 11 கிராம் எடை கொண்டவை.
நீங்கள் தராசை உபயோகித்து ஒரே ஒரு முறைதான் எடை போட்டுப் பார்க்க வேண்டும். அதிகமான எடை கொண்ட பொற்காசுகள் உள்ள அடுக்கு எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
சவாலுக்குத் தயாரா?
உடனே உங்கள் விடைகளைப் பின்னூட்டமாக அனுப்புங்கள். முதலில் வரும் சரியான விடைக்கு எனது ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.
***
உன்னிப்பாகக் கவனியுங்கள்... வாய்ப்பு எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும்!
உன்னிப்பாகக் கவனியுங்கள்... வாய்ப்பு எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும்!